நம் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளிடம், ‘நீ என்னவாகப் போகிறாய்?’ என்று கேட்டால், உடனே ‘கலெக்டர்’ என்ற வார்த்தைதான் முதலில் வரும். இத்தகைய கலெக்டர் என்ற நிர்வாகப் பதவியை உருவாக்கிய ஆங்கிலேயர் சர்.தாமஸ் மன்றோ குதிரையின் மீது அமர்ந்த நிலையில் உள்ள சிலையை சென்னையில் காணலாம். இந்த சிலையின் பின்னணி குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சென்னையில் கலைத்திறனோடு, கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது சர்.தாமஸ் மன்றோவின் சிலை. குதிரை மீது அமர்ந்துள்ள நிலையில் போர் வீரர்களுக்குத்தான் சிலை அமைப்பது வழக்கம். அவ்வழக்கத்தையொட்டி இது அமைக்கப்படவில்லை. ஈக்வெஸ்ட்ரியன் (Equestrian) எனப்படும் பாணியில் புராதன கால ரோமர்களின் சிற்ப சாஸ்திரத்தையொட்டி உருவான சிலை இது.
போர் வீரனாக இல்லாவிட்டாலும் சான்றோனாக உயர்ந்த குணமுடையவர்களைத் தங்களுக்குச் சமமாகக் குதிரை மீது அமர்த்தி அழைத்துச் செல்வது ரோமாபுரிஅரசர்களின் வழக்கம். இத்தகைய சான்றோர்களின் சிலைக்குத்தான், ‘ஈக்வெஸ்ட்ரியன் சிலைகள்’ என்று பெயர். இதுபோன்ற ஈக்வெஸ்ட்ரியன் சிலைகள் உலகில் நான்கு அல்லது ஐந்து இடங்களில் மட்டும்தான் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சிலையைச் செய்த சிற்பியின் பெயர் சான்ட்ரீ. இவர் கலைக்காகவே உயிர் வாழ்ந்து கலைக்காகவே உயிரை அர்ப்பணித்தவர். இவர் செய்த இந்தச் சிலையைச் சில பிரிட்டிஷ் அதிகாரிகள் குறை கூறியதைத் தாளாமல் படுத்த படுக்கையாகிக் காலமானார் என்பது அவரது வரலாறு.
ஆறு டன் எடையுள்ள இந்தச் சிலை, மூன்று பகுதிகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. மேலும், 1839ம் ஆண்டில் சென்னை தி ஐலண்டில் கல்கத்தாவை சேர்ந்த ஓஸ்டைடர் & கோ நிறுவனத்தால் செய்யப்பட்ட கிரானைட் பீடத்தின் மேல் சம்பிரதாயப்படி 23 அக்டோபர் 1839 அன்று இந்தச் சிலை நிறுவப்பட்டது.
மன்றோ ஒரு சிப்பாயாக 1780ல் சென்னை வந்து சேர்ந்தார். தனது உழைப்பினால் படைத்தலைவன் ஆனார். இவர் பெற்ற பல வெற்றிகளால் பிரிட்டிஷ் அரசின் கவனத்தைப் பெற்றார். கம்பெனி நிர்வாகத்தில் இழைக்கப்படும் அநீதிகளை இவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தார்.
"இந்தியாவில் தங்களுடைய அதிகாரத்தை அதிக இடங்களில் பரவச் செய்வதை விட இப்போது ஆளுகைக்குட்பட்ட சிற்சில இடங்களில் அதிக நல்லெண்ணத்தைப் பரவச் செய்தாலே போதும்!" என்பதை வெளிப்படையாகவே கூறியவர். இவர் 1820ல் சென்னை கவர்னராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் இவர் கடைப்பிடித்த கொள்கைகள் இதர மாகாணங்களுக்கும் வழிகாட்டுவதாக அமைந்திருந்தன.
முதன் முதலில் சென்னை மாகாணத்திற்கு ஓர் எல்லையை நிர்ணயித்து அதற்கு உருவம் கொடுத்தவர் இவர்தான். விவசாயத் துறையில் இவர் செய்த முக்கியமான சீர்திருத்தம், 'ரயத்வாரி திட்டம்.' விவசாயிகளுக்குத் தங்கள் நிலத்தில் சகல உரிமைகளையும் அளிப்பது, ரயத்வாரித் திட்டத்தின் நோக்கமாகும். கிராமப் பஞ்சாயத்து முறைக்கும் இவர்தான் உயிரூட்டினார். கலெக்டர் என்ற நிர்வாகப் பதவியை உருவாக்கியவரும் மன்றோதான்.
மதம், மொழி ஆகியவற்றைக் கடந்து மனிதத்தன்மையுடன் நிர்வாகம் செய்ததால் அவர் புகழ் பெருகியது. ‘மன்றோலப்பர்' என்று குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் அளவுக்கு அவர் மக்களால் நேசிக்கப்பட்டார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தனது பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார். அந்த அறக்கட்டளை இன்றும் திருப்பதியில் மன்றோ பெயரில் நைவேத்தியம் வழங்கி வருகிறது.