சராசரி வாழ்நாளை அதிகரிப்பது குறித்து பல்வேறு ஒருங்கிணைந்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. உலோக சத்துக்களுக்கும் நீண்ட ஆயுளுக்கும் தொடர்பு உண்டா என நடத்தப்பட்ட ஆய்வில் துத்தநாகம், செலினியம் மற்றும் குரோமியம் போன்ற உலோக சத்துக்களுக்கும் வாழ்நாளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தொடர்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உடலின் ஆரோக்கியத்திற்கும், இயக்கத்திற்கும் 13 உலோகச் சத்துக்கள் தேவை. அதில் மேற்கூறிய இந்த மூன்று உலோக சத்துக்கள் நீண்ட ஆயுளை அளிப்பதில் முக்கிய இடம் பெறுகிறது.
கிரேக்க சொல்லான சூரியனின் பெயரில் உருவான தனிமம்தான் ஹீலியம். அதேபோல சந்திரனின் பெயரில் இருந்து உருவான தனிமம்தான் செலினியம். இது ‘செலினி’ எனும் நிலவின் கிரேக்க பெயரிலிருந்து உருவானது. நமது உடலின் பாதுகாப்பு படையில் முக்கிய வீரன் ‘குளுடாதையோன் பெராக்ஸிபேன்’ இதன் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றுகிறது செலினியம் எனும் தாதுப்பு. இது குறைவானவர்களுக்குத்தான் புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் வருகிறது என்கிறார்கள்.
தைராய்டு சுரப்பி உற்பத்தி சிறப்பாக இருக்க செலினியம் தேவை. நாள்பட்ட ஆஸ்துமா நோயாளிகளுக்கு செலினியம் தொடர்ந்து சாப்பிட்டு வர அதன் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள். மலட்டுத்தன்மையை நீக்கும் இந்த செலினியம் நல்லதொரு ஆன்டி ஆக்ஸிடன்ட். இதன் தினசரி தேவை 40 முதல் 55 மைக்ரோ கிராம்.
செலினியம் நிறைந்த உணவுகள்: கொட்டைகள், பழுப்பு அரிசி, பீன்ஸ், வாழைப்பழம், காளான், மூட்டை, கடல் உணவுகள்.
நமது உடலில் போதுமான அளவு செலினியம் இல்லாததாலும் முழங்காலில் ‘ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்’ வரலாம் என்று கண்டறிந்துள்ளனர் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இது இருக்க வேண்டிய அளவுக்கு 15 முதல் 20 சதவீதம் குறைந்தாலே ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் அறிகுறிகள் தோன்றி விடுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
துத்தநாக சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்பவர்களின் முதுமை தள்ளிப்போகிறது என்கிறார்கள் ஜெர்மனியின் நூரம்பர்க் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள். இந்த உலோக சத்து உடலில் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் பாதிப்பை குறைப்பது இதற்குக் காரணம் என்கிறார்கள். தொற்று நோய்க் கிருமிகள் அண்டாமல் முழு பாதுகாப்பு தரும் தாதுப்பு துத்தநாகம்தான். எப்படிப்பட்ட ஜலதோஷத்தையும் முறிக்கும் ஆற்றல் உடையது.
125 வருடங்களுக்கு முன்புதான் இதன் பெருமைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நமது உடலில் என்சைம்களையும், புரோட்டீன்களையும் ஒருங்கிணைக்கும் பணியை செய்வது துத்தநாக சத்துதான். தினமும் 4 மில்லி கிராமுக்கு இணையான துத்தநாக உப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள அது நமது மரபணு செல்களுக்கு ஊக்கம் அளித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது என்கிறார்கள் ஐநா குழந்தைகள் நல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
நமது தலைமுடி நரைப்பதற்குக் காரணம் செலீனியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் குறைபாடுதான் என்கிறார்கள். இவை இரண்டும் ஆப்பிள் மற்றும் வாழைப்பழத்தில் உள்ளது என்கிறார்கள். துத்தநாக சத்து அதிகம் உள்ள உணவுகள் பால் பொருட்கள், கொட்டைகள், பருப்பு மற்றும் பீன்ஸ், கீரை வகைகள், மாதுளை, பெர்ரி பழங்கள், கடல் உணவுகள்.
உங்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை செயலாக்குவதில் குரோமியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது உணவில் இருந்து கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகளைப் பிரித்து உடலியக்கத்திற்காக சேமிக்க உதவுகிறது. உடலில் குரோமியம் சத்து இன்சுலின் சுரக்க உதவுகிறது. உடலிலுள்ள இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. எனவே, இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறந்தது. முழு தானியங்கள், புரோக்கோலி, பச்சை பட்டாணி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெற்றிலை, திராட்சை, முட்டை மற்றும் கடல் உணவுகள் போன்றவை குரோமியம் அதிகமுள்ள உணவுகள்.