அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், சட்டம் என இதில் ஏதாவதொரு துறைக்கு பங்களிப்பு செய்தவர்கள் மறையும்போது, அவர்கள் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்படும். இந்த குண்டுகள் முழங்கப்படுவதன் காரணம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் தகுதி வாய்ந்தவர்களாக முன்னாள், இந்நாள் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதலமைச்சர் என ஒரு குறிப்பிட்ட உயர் பதவி வகித்தவர்கள் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்த முடிவை மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என பின்பு தீர்மானிக்கப்பட்டது.
அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்போது அந்த ராணுவச் சடங்குகளுள் கடைப்பிடிக்கப்படுகிற ஒரு வழக்கம்தான் வானத்தை நோக்கி 52 வினாடிகளில் 21 குண்டுகள் முழங்க சுடப்படுவதாகும்.
அந்தக் காலத்தில் முதன்மையான பயணமாக கடல் வழி மார்க்கம் மட்டுமே இருந்தது. போர் முடிந்ததும் சொந்த நாட்டிற்கு கடல் வழியாக திரும்பி வந்த வீரர்கள் இனி யாரையும் தாக்குகிற எண்ணம் இல்லை என்பதை தெரிவிக்கின்ற விதமாக துப்பாக்கியில் இருந்து அனைத்து ரவைகளையும் கடற்கரையை நோக்கி சுட்டுவிடும் சடங்கை கடற்படையினர் செய்து வந்திருக்கிறார்கள்.
வேறு நாட்டினர் கடல் வழியாக இறங்கி இன்னொரு நாட்டிற்குள் நுழையும்போது தங்களுடைய துப்பாக்கிகளில் குண்டுகள் ஏதும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக வானம் பார்த்து குண்டுகளை முழங்கி விட்டு நாட்டிற்குள் நுழைவார்கள். பிரிட்டிஷார் கொண்டுவந்த பழக்கம் இது. தங்களுடைய ஆதிக்கத்தில் நிறைய நாடுகளை அவர்கள் வைத்திருந்ததால் இதற்கான தேவையும் அவர்களுக்கு இருந்தது. பிறகு, தலைவர்களின் இறப்புக்கு இந்தத் துப்பாக்கிச் சுடுதலை ஒரு மரியாதையாக செய்து வந்திருக்கிறார்கள்.
17ம் நூற்றாண்டில் இருந்து கடற்படையில் நீண்ட நாட்களாக பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்தப் பழக்கம் இன்று ராணுவ மரியாதையாக நிலைத்து விட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சிபுரிந்த காலத்தில் இறந்தவர்களின் தகுதியைப் பொறுத்து அரசர் என்றால் 101 குண்டுகள் என்பதிலிருந்து கவர்னர் என்றால் ஒன்பது குண்டுகள் வரை முழங்க வேண்டும் என வரையறை வகுத்திருந்தார்கள். இந்தியா ஆட்சிக்கு வந்தவுடன் வேறுபாடுகளை நீக்கி 21 குண்டுகள் என்பதை நிலையாக்கிவிட்டனர்.
பின்பு இது சர்வதேச முறையாக மாறியதோடு இறுதிச் சடங்கில் அரசு மரியாதையை வெளிப்படுத்தும் விதமாகவும் மாறிவிட்டது. இறுதிச் சடங்கில் சுடப்படுகின்ற இந்த குண்டுகள் சோடியம் நைட்ரேட்டால் தயாரிக்கப்படுகின்றன. இந்த குண்டுகள் முழக்கம் என்பது இறுதிச் சடங்கிற்கு மட்டுமன்றி, குடியரசுத் தலைவர் பதவி ஏற்பு, வெளிநாட்டு தலைவர்களை நம் நாட்டுக்கு வரவேற்பது, குடியரசு தினம் இப்படி அரசு விழாக்களிலும் கடைபிடிக்கின்றனர்.
துப்பாக்கியில் சுட்டு முடித்ததும் கீழே விழுந்த குண்டுகளை ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும். இது ராணுவத்தில் கடைபிடிக்கப்படும் நடைமுறை.
நம் பாரம்பரிய புகழ்மிக்க மரபு பழக்க வழக்கங்கள் என நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருந்தாலும் எதற்காக என்பதை கூடவே அறிந்து வைத்திருந்தால் நம் குழந்தைகளுக்கும் சொல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.