உலகின் மிகவும் மதிப்பு மிக்க மற்றும் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆல்பிரட் நோபலின் பெயரால் வழங்கப்படுகிறது. நோபல் பரிசு உருவானதின் பின்னணியில் உள்ள வரலாறும் அது எந்தெந்த துறைகளுக்கு வழங்கப்படுகிறது என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
ஆல்பிரட் நோபல்: முதன் முதலாக நோபல் பரிசுகள் டிசம்பர் 10, 1901ம் ஆண்டு ஆல்பிரட் நோபல் இறந்த ஐந்தாவது ஆண்டு நினைவு நாளில் வழங்கப்பட்டது. நோபல் ஒரு ஸ்வீடிஷ் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர். அவர் நாடகம் மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். டைனமைட் மற்றும் பிற வெடி மருந்துகளைக் கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது வாழ்நாளில் 350க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வைத்திருந்தார்.
நோபல் பரிசு உருவானதின் பின்னணியில் உள்ள வரலாறு: 1895ம் ஆண்டில் ஆல்பிரட் நோபல் தனது உயிலை எழுதியபோது, அறிவியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்தவர்களை நினைவு கூறும் முறையில் ஒவ்வொரு ஆண்டும் பரிசுகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பல்வேறு குழுக்கள் மற்றும் அமைப்புகளால், பரிசு பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் உயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது செல்வத்தின் பெரும் பகுதி நோபல் பரிசு கொடுப்பதற்காக செலவிடப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றாலும் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களை அழிக்கக் காரணமாக இருந்த டைனமைட்டு போன்ற அழிவுகரமான ஆயுதங்களைக் கண்டுபிடித்தவர் என்ற அவரது குற்ற உணர்வு அந்த முயற்சியை தொடங்கக் காரணமாக இருப்பதாக பலர் யூகித்தனர்.
நோபல் பரிசுகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி, அவரது நினைவு நாளன்று ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்பட்டு வருகின்றன. நோபல் தனது கண்டுபிடிப்புகளின் அழிவுத் திறனை பற்றி ஆழமாக அறிந்திருந்தார். டைனமைட் அவரது படைப்பின் நெறிமுறை தாக்கங்களை கருத்தில் கொள்ள வழி வகுத்தது. அதனால் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்புகளை அளிக்க வேண்டும் என்கிற விருப்பத்தைத் தூண்டி இருக்கலாம். மனித நலனில் நோபலின் அக்கறை மற்றும் அமைதியான உலகத்திற்கான அவரது நம்பிக்கைகள் நோபல் பரிசு தரத் தூண்டியது. அவர் ஒரு கண்டுபிடிப்பாளராக மட்டுமல்லாமல், மனித முன்னேற்றத்திற்கு பங்களித்த ஒருவராகவும் நினைவு கூறப்படுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்.
எந்தெந்த துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது?
அறிவியல்: இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் தனி நபர்கள் அல்லது குழுக்களுக்கு, அந்தந்த துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை சிறப்பாக செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இலக்கியம்: சிறந்த இலக்கியப் படைப்புகளை வழங்குபவர்களுக்கு, குறிப்பாக மனித அனுபவத்தைப் பற்றிய முன்னுரிமை வழங்கும் கலாசாரப் புரிதலை ஏற்படுத்தும் எழுத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.
அமைதி: சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மோதல்களை தீர்ப்பதற்கும், ராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கும், சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கும், குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்ட தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
பொருளாதார அறிவியல்: பொருளாதாரத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குபவர்களுக்கு, புரிதல் மற்றும் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மனிதாபிமான தாக்கம்: நோபல் பரிசுகளின் முக்கியக் குறிக்கோள் மனித குலத்திற்கு ஒரு பெரிய நன்மையை வழங்கியவர்களை அங்கீகரிப்பதாகும். எதிர்கால சந்ததியினர் சிறந்து விளங்க பாடுபடவும் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை அளிக்கவும் இந்தகையை பரிசுகள் தூண்டுகிறது. புதுமை, கலாசார செறிவூட்டல், அமைதியைக் கட்டிக்காத்து, மனிதகுலத்தின் மிக உயர்ந்த கொள்கைகளை எடுத்துக்காட்டும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளப்படுத்துகிறது.