குடும்பம் என்ற ஒற்றை பிணைப்புக்குள் நாம் அனைவரும் கட்டுண்டு கிடக்கிறோம். இது நல்ல விஷயம்தான் என்றாலும், ஒவ்வொரு மனிதரும் உடல் மற்றும் மன புத்துணர்ச்சிக்காகவும், அனுபவத்திற்காகவும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் தனியாக செய்ய வேண்டிய 8 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பயணங்கள்: உலகில் ஆராய்ச்சி செய்வதற்கும் பார்ப்பதற்கும் பல்வேறு விஷயங்கள் இருப்பதால் நமக்குப் பிடித்த இடங்களுக்கு கார், பேருந்து, ரயில் அல்லது பைக்கில் பயணம் செய்வது புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவுவதோடு, மனதை இலகுவாக மாற்றும் என்பதால் சோலோ ட்ராவல் செய்வது நல்லது.
2. ஸ்கூபா டைவிங்: சாதாரணமாகவே கடல் பயணம் மகிழ்ச்சியளிக்கக் கூடியது என்றாலும் கடலுக்கு அடியில் பயணம் மேற்கொள்வது நமக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கக்கூடும். ஸ்கூபா டைவிங் மூலம் வண்ணமயமான மீன்களை கண்டு ரசிப்பது மட்டுமின்றி, ஆழ்கடல் ரகசியங்களை அறிய முடியும்.
3. பிறருக்கு உதவி செய்வது: பிறருக்கு உதவி செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அனுபவத்தின் வாயிலாகவே அறிய முடியும். முகாமில் அல்லது வேறு நாட்டில் தன்னார்வ தொண்டு சேவையில் சில காலம் செலவிடுவது வாழ்க்கையில் புதிய பாடத்தை கற்றுக்கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
4. ட்ரக்கிங் செல்வது: மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ட்ரக்கிங் செல்வதற்கு நீண்ட தூர பயணம்தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரவர் வீட்டருகே இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இடத்தில் நேரத்தை செலவிட்டாலே அத்தகைய இனிய அனுபவத்தைப் பெறலாம்.
5. கலைக் கண்காட்சி: கலைக் கண்காட்சி மற்றும் மியூசியம் செல்வதை சிலர் போரிங்கான செயலாகக் கருதுகிறார்கள். ஆனால், அங்கு கற்றுக்கொள்ள பல்வேறு விஷயங்கள் மறைந்து இருக்கின்றன. அங்கிருக்கும் ஒவ்வொரு சிலைகள் மட்டும் பொருட்களுக்கு பின்னால் உள்ள கதைகள், வரலாறுகள் மற்றும் பாடங்களை தெரிந்து கொண்டாலே ஆச்சரியம் நம்மைச் தொற்றிக்கொள்ளும்.
6. இசை: மியூசிக் மன ஆரோக்கியத்திற்கு சிறந்த மருந்தாக இருப்பதால் கிட்டார் போல் ஏதேனும் ஒரு இசைக் கருவியை ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்பிற்கு சென்று வாசிக்கக் கற்றுக்கொண்டு, அவற்றை நம்முடன் பல இடங்களுக்கு எடுத்தும் செல்வதால் மனம் அமைதி அடையும்.
7. சமையல்: நாம் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களில் நமக்குத் தேவையான உணவுகளை சமைக்க தெரியாவிட்டாலும் முயற்சி செய்து சமைத்து சாப்பிடுவது நமக்கு அதிக மகிழ்ச்சியை தரக்கூடும்.
8. தனி வாழ்க்கை: வாழ்வில் ஒரு முறையாவது சில காலத்திற்கு குறைந்தது ஆறு மாதங்கள் தனியாக வாழுங்கள். அவை சொல்லித் தரும் பாடங்களை வேறு எப்போதும் யாராலும் உங்களால் கற்க முடியாது. அந்த சில மாதங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கக்கூடும்.
மேற்கூறிய 8 செயல்களுமே மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் நம் வாழ்வில் அவசியம் தனியாக மேற்கொள்ளவேண்டிய விஷயங்கள்தான்.