‘குந்தாணி’ - இந்தப் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவதெல்லாம் கிண்டலும் கேலியும்தான். ஆனால், நம் முன்னோர்கள் இந்தக் குந்தாணியை எப்படி எல்லாம் பயன்படுத்தினார்கள்? அதை எதற்கெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதைப் பற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
‘குந்தாணி’ என்பது நாம் உரலில் நெல்லு, கம்பு, சோளம் போன்ற தானியங்களைப் போட்டு குத்தும்போது உரலுக்கு மேலே தானியங்கள் சிதறாமல் இருக்க ஓர் அகன்ற, உரலை விட கொஞ்சம் வாயகன்ற மரத்தால் அல்லது மண்ணால் ஆன பாதுகாப்பு கவசத்தைத்தான் குந்தாணி என்று அழைத்தனர். இது பண்டைய காலங்களில் மக்கள் அதிகம் உபயோகித்த, பயன்பாட்டில் இருந்த ஓர் உன்னதமான அரிய பொருளாகும்.
கொஞ்சம் குண்டாக இருக்கும் பெண்களை கிண்டலாக ‘குந்தாணி’ என்று அழைப்பது வழக்கம். ஏன் என்றால் உரலை விட அகன்ற வடிவில் இருப்பதால். உரல் உடுக்கை வடிவில் இருக்கும். உரலை பெரும்பாலும் கருங்கல் கொண்டே செதுக்கினார்கள். மரத்தாலும் செய்து இதைப் பயன்படுத்தினர். உரலில் குத்திய அரிசியை போட்டு மாவாகவும் இடிப்பார்கள். இதனுடன் பனங்கருப்பட்டி, நன்கு காய்ச்சிய பாகு பதத்தில் சேர்த்து அரிசி மாவுடன் செய்வதே பச்சை மாவு.
நன்றாக வறுத்த எள்ளை, பனங்கருப்பட்டி கொண்டு உரலில் இடித்தால் பத்து வீடு தள்ளிகூட மணக்கும். கோயில் விழாக்கள், பண்டிகைகள் என்றால் அன்றைய கிராமத்து வீடுகளில் விடிய விடிய உரலில் நெல் அரிசி குத்தும் வேலை அதிகம் இருக்கும். இன்றும் புதிய வீடு கட்டுபவர்கள் அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகிய அனைத்தும் வைப்பது வழக்கம். வீட்டுக்கு வெளியில் ஒரு காலத்தில் இருந்த மழைமானி இதுதான்.
உரல் அளவு மழை நீர் நிரம்பினால் ஓர் உழவு இரண்டு உழவு என்றும் அரை உரல் நிரம்பினால் அரை உழவு மழை என்றும் கணிப்பார்கள் ஊர் பெரியவர்கள். கிராமத்தில் இன்றும் ஒரு பழமொழி இருக்கிறது. முறை பெண்களை இப்படித்தான் சொல்லி அழைப்பது வழக்கம். மாமன் பிள்ளை மந்தாணி, அத்தை பிள்ளை குந்தாணி.
அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த உரலும் குந்தாணியும் உலக்கையும் இப்போது எங்கே என்று தேட வேண்டிய சூழ்நிலையில் இன்றைய காலத்து மக்கள் இருக்கிறார்கள். பாரம்பரியங்களை நாம் மறந்துவிட்டதால்தான் இன்று நாம் புதுப்புது வியாதிகளுக்கு ஆளாகி இருக்கிறோம்.