இலையைக் கண்ணாகவும், அதை ஒட்டியுள்ள பூவை கண்ணில் இருந்து பொங்கும் பீளையாகவும் உருவகம் செய்தே இதற்கு, ‘சிறுகண்பீளை' என பெயர் வரக் காரணமாகியது. இதன் தாவரவியல் பெயர் Aerva lanata ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஏறத்தாழ இரண்டு அடி உயரம் வரை வளரும் செடி வகை இது. இத்தாவரம் ஆசியா, ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட தாவரமாகும். இதன் இலைகள் சிறியதாக நீள் வட்ட வடிவில் இருக்கும். ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் இருக்கும். பூக்கள் தண்டுடன் ஒட்டி அவல் போன்ற வடிவமாக இருக்கும்.
இத்தாவரம் பூளைப்பூ, பொங்கல் பூ, சிறுபிழை, பூலாச்செடி, கண்ணுப்பீளை எனவும் அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில், அதாவது பொங்கல் நெருங்கும் சமயத்தில் இச்செடிகளில் வெண்ணிறத்தில் பூக்கள் பூக்கும்.
ஆரோக்கியப் பலன்கள்: சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள 99 வகை மலர்களில் சிறுகண்பீளை பூவும் ஒன்று. இது கசப்பு சுவை மற்றும் வெண்மை தன்மை கொண்டது. இது நம் உடலின் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளுக்கு அருமருந்தாக இருக்கிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது, சிறுநீரகங்களின் செயல்திறன் குறைவது அல்லது முற்றிலும் செயலிழந்து போவது, சிறுநீரகங்கள் வீங்குவது அல்லது சுருங்குவது ஆகியவை இந்த உறுப்பில் ஏற்படும் பிரச்னைகள் ஆகும். இவை அனைத்துக்கும் ஒரே தீர்வாக இருக்கும் அற்புத மூலிகைதான் சிறுகண்பீளை.
சிறுநீரக நோய்களைக் குணமாக்கக்கூடிய தன்மை இத்தாவரத்திற்கு உண்டு. கல் கரைத்தல் மற்றும் நீர் பெருக்குதல் ஆகியவற்றிற்காக இச்செடியை நமது தமிழ் சித்த மருத்துவத்தில் பன்னெடுங்காலமாகப் பயன்படுத்தி வருகிறோம். இம்மூலிகையின் வேர்களுக்கு சிறுநீரைப் பெருக்கி வெளியேற்றும் தன்மை உள்ளது. இம்மூலிகையை சமூலமாக (பூ, தண்டு, இலை) வழங்கினால், கற்களைக் கரைப்பதோடு, சிறுநீரை பெருக்கி கற்களை வெளிப்படுத்துகின்றது.
சிறுகண்பீளை செடிகளைப் பச்சையாகச் சேகரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இச்சாற்றை ஒரு வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் காலை, மாலை என இரு வேளைகளிலும் குடித்து வந்தால் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் ஆகியவை குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் அதி இரத்தப்போக்கு எனும் பெரும்பாடு நோயும் குணமாகும்.
சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கு மட்டுமல்லாது, சிறுநீர் கழிக்கும்போது வரும் எரிச்சலைக் குறைக்கவும், சிறுநீரில் இரத்தம் வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குறைக்கவும் இம்மூலிகை பயன்படுகிறது. சிறுகண்பீளை இலைகளை அரைத்து சாறெடுத்து தினமும் இரு முறை பருகி வர நீர்சுருக்கு மற்றும் அடைப்பு, மாதாந்திர போக்கின்போது உண்டாகும் அதீத உதிரப்போக்கு பாதிப்புகள் ஆகியவை நீங்கி விடும்.
இச்செடியின் வேரைச் சுத்தமாகக் கழுவி நிழலில் காய வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சும்போது 10 கிராம் வேரையும் சேர்த்துக் காய்ச்சிக் குடித்து வந்தால், கர்ப்பிணிகளின் சோர்வு நீங்கும். கரு தங்காத பெண்களுக்குச் சிறந்த பலனைக் கொடுக்கும்.
ஒரு நல்ல சித்த மருத்துவர் ஆலோசனைப்படி இந்த மூலிகை மருந்தை உட்கொள்வது மிகவும் நலம் பயக்கும்.