'அனமார்பிக் ஓவியங்கள்' அப்படின்னா என்னன்னு தெரியுமா?

Chennai Neppiyar Bridge
Anamorphic Paintings
Published on

உலகில் பல மொழிகள் பேசப்பட்டாலும், எந்த மொழியின் துணையுமின்றி ஒரு கலை வளருமானால் அது ஓவியக்கலை தான். நம் மன ஓட்டத்தை பிரதிபலிக்கும் ஓவியக் கலைகள் உலகம் முழுவதும் பரந்து கிடக்கின்றன. அதில் நாம் இப்போது தெரிந்து கொள்ளப் போவது சென்னையில் வரையப்பட்டுள்ள அனமார்பிக் ஓவியங்களைப் பற்றித் தான்.

ஒரு ஓவியத்தை நாம் முழுமையாக ரசிக்க வேண்டுமென்றால், அருகில் இருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தத் தன்மையில் இருந்து முற்றிலும் வேறானது தான் அனமார்பிக் ஓவியங்கள். தொலைவில் இருந்து பார்க்கும் போது முழுமையான ஓவியமாகவும், அருகில் சென்று பார்த்தால் சிதறிய காட்சிகளாக தெரிவதும் தான் அனமார்பிக் ஓவியங்களின் தனிச்சிறப்பு. உலகிற்கு இந்தக் கலை ஒன்றும் புதிதான ஒன்றல்ல. கடந்த 15 ஆம் நூற்றாண்டில் இருந்தே அனமார்பிக் ஓவியக் கலை இருந்து வருகிறது. இந்த ஓவியங்கள் பார்ப்பதற்கு 3D அன்மேஷன் போன்று காட்சியளிக்கும். உண்மையில் ஓவியத்தை இப்படி எல்லாம் வரைய முடியுமா என்று, நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு ஓவியங்கள் நமக்கு பிரம்மிப்பூட்டும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய காலகட்டத்தில் அனமார்பிக் ஓவியங்களை காண்பது மிகவும் அரிதாகி விட்டது. இருப்பினும் நீங்கள் சென்னையில் இருந்தால் இந்த ஓவியங்களை உங்களால் நிச்சயமாக காண முடியும். ஆம், சென்னை கடற்கரையை நோக்கிச் செல்லும் வழியில் காமராஜர் சாலையில் இருக்கும் நேப்பியர் மேம்பாலத்தில் அனமார்பிக் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதற்கு முன்பு சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்ற போது, நேப்பியர் மேம்பாலத்தில் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட செஸ் பலகை ஓவியமாக வரையப்பட்டு இருந்தது. தற்போது தமிழ்நாட்டில் முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருவதால், அதற்கேற்ப நேப்பியர் பாலத்தில் விளையாட்டு வீரர்களின் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்:
இஸ்லாமிய அரசவையில் இந்து அமைச்சர்!
Chennai Neppiyar Bridge

விளையாட்டு வீரர்களின் ஓவியங்கள் சாதாரண முறையில் வரையப்பட்டால் அதில் பெரிதாக ஆச்சரியம் ஏதும் இருந்திருக்காது. ஆனால், வரையப்படும் முறை தான் நம்மிடையே பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அனமார்பிக் ஓவியக்கலை முறையில் சிலம்பம், கபடி, ஓட்டப் பந்தயம், கால்பந்து, குத்துச்சண்டை, பேட்மிண்டன் மற்றும் டென்னிஸ் போன்ற விளையாட்டு வீரர்களின் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மேம்பாலத்தின் மையப்பகுதியில் முதல்வர் கோப்பை லோகோவான நீலகிரி வரையாடு வரையப்பட்டுள்ளது.

அவ்வழியே செல்லும் பொதுமக்கள் பலருக்கும் இது என்ன மாதிரியான ஓவியங்கள் என்று தெரியவில்லை. ஏனெனில் அருகில் இருந்து பார்க்கும் போது ஓவியங்கள் சிதைந்து காணப்படும் அல்லவா! ஆனால் இதனைத் தொலைவில் இருந்து பார்த்தால் தான் முழுமையாக தெரியும் என்பதை தெரிந்து கொண்டால், நிச்சயம் பொதுமக்கள் பலரும் இந்த ஓவியங்களைக் கண்டு ரசிப்பார்கள்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி லட்டு சென்னையிலும் கிடைக்கும்! எங்கு தெரியுமா?
Chennai Neppiyar Bridge

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தான் நேப்பியர் பாலத்தில் அனமார்பிக் ஓவியங்களை வரைந்துள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் சுமார் 30 ஓவியக் கலைஞர்கள் பாலத்திற்கு வண்ணம் தீட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியங்கள் நிச்சயமாக இன்னும் சில ஆண்டுகளுக்கு நேப்பியர் பாலத்தை அலங்கரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com