முட்டை டெம்பரா, எண்ணெய் தீட்டி என்னனு தெரியுமா?

Egg tempera
Egg tempera

டெம்பரா (Tempera) என்பது ஓர் ஓவிய முறை ஆகும். இது வரையப்பட்ட ஓவியத்தை வேகமாக உலர்த்தும் ஓர் ஓவிய வகையாகும்.

இது தண்ணீரில் கரையக்கூடிய வண்ண நிறமிகளைக் கொண்டிருக்கும். பொதுவாக இதில் முட்டையின் மஞ்சள்கரு, வெள்ளைக்கரு போன்ற பசையுள்ள பொருள் கலக்கப்பட்டிருக்கும். முட்டைக் கருவைக் கலந்து வரையப்பட்ட ஓவியங்கள் பொதுவாக டெம்பெரா என குறிக்கப்படுகின்றன. எனவே இதனை முட்டை டெம்பரா என்றும் அழைப்பதுண்டு.

தமிழ்நாட்டில் டெம்பரா ஓவிய முறை நாயக்கர் காலத்தில் அறிமுகம் ஆனது. சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடிக்கப்பட்டச் சுவரில் இயற்கை வண்ண நீர்க் கலவையை முட்டையின் வெள்ளைக் கரு போன்ற ஏதாவது ஊடகத்தில் குழைத்து, அதைக் கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டன. இதில் செந்தூரம், மஞ்சள், கறுப்பு, சிவப்பு, நீலம் போன்ற அடிப்படை வண்ணங்களே நேரடியாக, மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டன. இந்த ஓவியங்கள் கூடுதல் மினுமினுப்போடு தென்படும். தமிழ்நாட்டில் மண்டபங்கள், அரண்மனைகள் போன்றவற்றில் வரைய முட்டைக்கரு பயன்படுத்தபட்டன. ஆனால், கோயில் போன்ற புனித இடங்களில் வரைய முட்டைக்கரு பயன்படுத்தப்படவில்லை.

இவ்வகை ஓவியங்கள் தமிழ்நாட்டின் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், பத்மநாபபுரம் அரண்மனை, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் போன்ற இடங்களில் வரையப்பட்டுள்ளன. குறிப்பாக, சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலின் ஏழுநிலை இராச கோபுரத்தின் உட்புறச் சுவர்களில் 156 அரிய டெம்பெரா ஓவியங்கள் உள்ளன.

டெம்பெரா ஓவியங்கள் நீண்ட காலம் நீடித்திருக்கக் கூடியவை. கி.பி. முதல் நூற்றாண்டு காலத்திய இந்த ஓவிய உதாரணங்கள் இன்னும் உள்ளன. இது கி.பி. 1500 ஆம் ஆண்டில் நெய்யோவியம் வந்த பிறகு தன் முக்கியத்துவத்தை இழந்தது.

இதையும் படியுங்கள்:
மன அமைதி பூங்காவாய் திகழும் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம்!
Egg tempera

நெய்யோவியம் என்பது நிறமிகளைக் கொண்டு தீட்டிப் பின் நெய் அல்லது எண்ணெய் கொண்டு காய வைக்கும் ஒரு வகை ஓவியமாகும்.

ஆளி விதை நெய், கசகசா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவை பொதுவாக இவ்வகை ஓவியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நெய்கள் ஆகும். பயன்படுத்தப்படும் நெய்யைப் பொறுத்துக் காயும் நேரம், பழுப்படையும் தன்மை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்துவதுண்டு.

நெய்யோவியங்கள் முதன் முதலில் புத்தமத ஓவியங்களைத் தீட்ட, இந்திய ஓவியர்களாலும், சீனத்து ஓவியர்களாலும், மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கும் பத்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், பதினைந்தாம் நூற்றாண்டு காலப் பகுதி வரை நெய்யோவியங்கள் பெரிதும் புகழ் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com