இந்தியாவின் அனைத்து மூலைகளையும் இணைக்கும் வகையில் இந்தியன் ரயில்வே வழியமைப்புகளை அமைத்து ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவிலுள்ள இரும்புப் பாதையின் மொத்த நீளம் 67,956 கிலோ மீட்டராக உள்ளது. இவ்வளவு பெரிய போக்குவரத்து கட்டமைப்பில் கிட்டத்தட்ட 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ரயில்வே துறையில் பெரியளவிலான மாற்றங்களும் வளர்ச்சிகளும் ஏற்பட்டுள்ளன. நீராவி இன்ஜின் ரயில் முதல் தொடங்கி, தற்போது வந்தே பாரத் அதிவிரைவு ரயில் வரை பல்வேறு விதமான வளர்ச்சியடைந்துள்ளது.
இவ்வளவு பெரிய கட்டமைப்புகளில் தவறுகள் ஏற்படாமல் இருக்க ரயில்வே துறை சில குறிப்பிட்ட குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், ரயிலின் கடைசி பெட்டியில் X என்ற குறியீடு இடம்பெறுவது ஏன் என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
ஒரு ரயிலில் குறைந்தது 12 பெட்டிகள் முதல் 24 பெட்டிகள் வரை இடம்பெற்று இருக்கும். ரயிலில் X என்ற குறியீடு கடைசி பெட்டியில் மட்டுமே இடம்பெறும். இந்த குறியீடு ஒரு ரயிலை முழுமைப்படுத்துகிறது. அதாவது அந்த ரயிலில் கடைசி பெட்டி அதுவே என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இதன் மூலம் ஒரு ஸ்டேஷனை ரயில் கடக்கும்போது அனைத்து பெட்டிகளும் முழுமையாக உள்ளது என்பதை ரயில்வே ஊழியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
தண்டவாளத்தில் ரயில் செல்லும்போது ஏதேனும் கோளாறு ஏற்பட்டு சில பெட்டிகள் நடுவில் பிரிந்துவிட்டால், இந்தக் குறியீடு மூலம் எதிர்கொண்டு வரும் ஸ்டேஷனைக் கடக்கும்போது உடனடியாக ஊழியர்கள் அறிந்துகொள்ள முடியும். அதன்மூலம் தண்டவாளத்தில் நடுவில் பிரிந்துசென்ற பெட்டிகளைக் கண்டுபிடித்து விபத்துகளைத் தவிர்க்க முடியும்.
அதேபோல், இந்தக் குறியீடு மூலம் ரயிலின் கடைசி பெட்டி அதுவே என்பதையும் உறுதி செய்து கொள்ள முடியும். மேலும், X என்ற குறியீட்டுடன் அதற்குக் கீழே சிவப்பு விளக்கு ஒன்றும் இடம்பெற்று இருக்கும். பகலில் X குறியீடு கொண்டும், இரவில் சிவப்பு விளக்கு கொண்டும் கடைசி பெட்டியை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
இதுபோன்று, LV என்ற பலகையும் கடைசி பெட்டியில் தொங்கவிட்டு இருப்பர். அதற்கு 'Last Vehicle' என்று அர்த்தமாகும். இதுபோன்று குறியீடுகள் ரயில்வே துறையால் பின்பற்றப்படுகிறது.