அரிசி சாதம் சாப்பிடுவது பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இருப்பினும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இதற்காக Hack ஒன்று கண்டுபிடித்ததாக டிரெண்டாகி கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அது என்னவென்றால், பிரிட்ஜில் அரிசி சாதத்தை வைத்து, பிறகு அதை சுட வைத்து சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும் என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
அரிசியில் இருக்கும் மாவுச்சத்தை ஸ்டார்ச் என்று சொல்வோம். ஸ்டார்ச்சில் உள்ள கார்போஹெட்ரேட் சர்க்கரை அளவை இரத்தத்தில் உயர்த்தும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இதை எவ்வாறு குறைத்து அரிசி உணவையே எடுத்துக்கொள்வது என்பதே மக்களின் கேள்வியாக இருந்தது. அதற்கான தீர்வாக சொல்லப்படுவதுதான் அரிசி சாதத்தை பிரிட்ஜில் 12 முதல் 24 மணி நேரம் வைத்துவிட்டு அடுத்த நாள் அதை எடுத்து சுட வைத்து சாப்பிட்டால், அந்த சாதத்தில் Resistance starch உருவாகிறது.
அதாவது, நம் வயிற்றில் உள்ள என்சைம்களால் ஜீரணம் செய்ய முடியாத ஸ்டார்ச்தான் Resistance starch ஆகும். பிரிட்ஜில் வைத்து எடுக்கும் அரிசி சாதத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு Resistance starch ஆக மாறுகிறது. அதை சாப்பிடுவதால் சர்க்கரை ஏறாது என்று ஆராய்ச்சி சொல்கிறது.
இதை டைப் 1 சர்க்கரை நோயாளிகளிடம் ஆராய்ச்சி செய்து பார்த்தபோது 10 சதவீதம் வரை குறைந்துள்ளதாகத் தெரிகிறது. காலையில் செய்த சாதத்தை இரவு வைத்து சாப்பிட்டாலே, 1.3 g/ 100 g. resistance starch உருவாகிறது. இதுவே பிரிட்ஜில் வைத்து எடுத்து சூடுபடுத்திய சாதம் 1.6 g /100 g resistance starch உருவாகிறது.
இதை சாப்பிடுவதால் சர்க்கரையை இரத்தத்தில் அதிகமாக ஏற விடாமல் தடுப்பது உண்மைதான். ஆனால், அது வெறும் 10 சதவீதம்தான். இது சர்க்கரை நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவதற்கு ஒரு ஹேக்காகவே சொல்லப்படுகிறது. எப்போதுமே சர்க்கரை அளவை இரத்தத்தில் குறைக்க சிறந்த வழி மாவுச்சத்தை குறைத்து புரதம், முட்டை, பனீர், சோயா, காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவது ஆரோக்கியமானதாகும்.