நமது உடலுக்கு வைட்டமின்கள் தேவைப்படுவது போல், கொழுப்பு அமிலச் சத்துகளும் தேவை. ஆனால், ஒருசில அமிலங்களை மட்டுமே நம் உடல் சுரக்கும். முக்கியமான கொழுப்பு அமிலங்களை அது சுரப்பதில்லை. இந்த அமிலங்கள் மூன்று வகைப்படுகின்றன. ஒமேகா 3, 6 மற்றும் 9. இவற்றில் ஒமேகா 6ம், 9ம் பலவிதமான தாவர எண்ணெய்களில் இருக்கிறது. ஆனால், ஒமேகா 3 மட்டுமே மீன் உணவுகளில் அதிகளவில் உள்ளது. மாமிச உணவுகளை விரும்பி சாப்பிடுகிறவர்களுக்கு இது சரி. ஆனால், சைவ உணவுகள் சாப்பிடுகிறவர்களுக்கு இதனைப் பெற கொட்டைகள் மற்றும் விதைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பாக்டீரியாக்கள் போன்ற நோய்க் கிருமிகள் செல்களுக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதிலும், செல்களில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதிலும் இந்த கொழுப்பு அமிலங்கள் முக்கியப் பங்காற்றுகிறது. இதய இரத்த நாளங்களில் கொலஸ்டிரால் தங்கினால் இரத்த நாளங்கள் சுருங்கி விரிவதில் சிரமங்களை சந்திக்கும். இதனை தடுப்பதில் ஒமேகா 3 வேகம் காட்டுகிறது. கொழுப்பு அமிலங்கள் சிறுநீரக பாதிப்பை தவிர்க்க உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதுடன், சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் தேவையையும் குறைத்து விடுகிறது.
சோயா பீன்ஸில் 0.5 சதவீதமும், ஆலிவ் ஆயிலில் 2 சதவீதமும், வால் நட் பருப்பில் 5 சதவீதமும், பிளக்ஸ் ஆயிலில் 6 சதவீதமும் ஒமேகா 3 உள்ளது. அதேபோல துரியன் பழத்தில் ஒமேகா 3 நிறைய இருக்கிறது. எள், ஆளி விதை, பூசணி விதை, சியா விதை, சூரிய காந்தி விதைகளில் அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளன. கடல் பாசியிலும் ஒமேகா 3 உள்ளது.
ஒமேகா 3 நிறைந்த கடல் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு 70 சதவீதம் தடுக்கப்படுகிறது என்கிறார்கள் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். கொட்டை பருப்பு வகையைச் சேர்ந்த வால்நட், பாதாம், முந்திரி மற்றும் எண்ணெய் சத்துள்ள மீன் உணவுகள், ஆளி விதை, சோயா போன்ற உணவுகளை சிறுவயது முதலே எடுத்துக் கொள்பவர்களுக்கு ஒவ்வாமையால் வரும் ஆஸ்துமா வராமல் தடுக்கப்படுகிறது என்கிறார்கள்.
படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு படிப்பதில் ஆர்வம் ஏற்படுத்த விரும்பினால் அவர்களுக்கு ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6ம் நிறைந்த உணவுகளை கொடுங்கள் என்கிறார்கள். கவனச் சிதறல், சுறுசுறுப்பு கோளாறுகள் உடைய மாணவர்கள் ஒமேகா 3 கொழுப்பு சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் அத்தகைய பாதிப்புகள் குறையும் என்கிறார்கள். புற்றுநோயின் தீவிரத்தை குறைக்கும் ஆற்றல் ஒமேகா 3 உணவுகளுக்கு உண்டு என்பதை நவேடா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
‘டிஸ்லெக்சியா மற்றும் டிரஸ்ட்ராக்சியா’ போன்ற நரம்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் ஒமேகா 3 உணவுகளில் உள்ளது என்கிறார்கள். இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது, நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் 9 அடிப்படை அமினோ ஆசிட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக, அசைவ உணவு சாப்பிடுவோருக்கு இந்த 9 அமினோ ஆசிட்கள் அதில் இருந்தே கிடைத்துவிடும். இங்குதான் சைவ உணவு சாப்பிடுவோருக்குப் பிரச்னை வரும். என்னதான் தானியங்கள் மற்றும் பயிர் வகைகளில் புரதச் சத்துக்கள் இருந்தாலும் அதில் 9 வகையான அமினோ அமிலங்களும் இருக்காது.
குளிர் காலங்களில் ஒமேகா 3 மூளை ஆரோக்கியம் மற்றும் மனநிலை மேம்பாட்டிற்கு பங்களிக்கிறது, மன நலத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, அவை உடல் வீக்கத்தைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் சக்தி வாய்ந்த மூலமாக இருக்கிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இது சரும ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. நமது உடலால் அத்தியாவசியமான ஒமேகா 3 சத்துக்களை உற்பத்தி செய்ய முடியாது என்பதால், அவற்றை நமது உணவில் சேர்த்துக்கொள்வது மிக மிக முக்கியம்.
இதயநோய் ஆபத்திலிருந்து தப்பவும், மூளையின் ஆரோக்கியத்திற்கும் ஒமேகா 3 சத்துள்ள உணவுகளை மாத்திரமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதை விடுத்து சப்ளிமென்ட் மாத்திரைகளை அல்ல என்கின்றனர் இங்கிலாந்து நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். நோய்கள் வராமல் இருக்க மற்றும் வந்தால் விரைவில் குணமாக நோய் எதிர்ப்புச் சக்தி முக்கியம். அதற்கு இதுபோன்ற இயற்கை உணவுகளில் இருக்கும் அமிலங்கள் மிகவும் முக்கியமானது என்கிறார்கள்.