
பிரியாணி நகரம் எது தெரியுமா?
இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு பிரியாணி. நண்பர்கள் சாப்பிடுவதற்கு ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் பேச்சும், தேர்வும் எது என்றால், அது பிரியாணி தான்!
சந்தோஷத்தை கொண்டாட வேண்டுமா? எங்கே பிரியாணி சுவையாக கிடைக்கும் என்கிறத் தேடல் தான். இன்னும் சொல்வதென்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வட்டம் கட்டி அடிப்பதும், தேடிச் சுவைப்பதும் பிரியாணி தான்.
மணம் மணக்கும் சுவை ருசிக்கும் நாவில் உமிழ்நீர் சுரக்கும் 'பிரியாணி' நகரம் எது தெரியுமா? வாருங்கள்... ருசிப்போம்.
பிரியாணி நகரம் என்று அழைக்கப்படும் நகரம் ஹைதராபாத் நகரம் ஆகும். தென்னிந்தியர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களையும் கவரும் இந்திய பிரியாணி வகைகளுள் ஒன்றாக ஹைதராபாத் பிரியாணி அறியப்படுகிறது.
இது பாசுமதி அரிசியுடன் கோழி அல்லது ஆட்டிறைச்சி கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் நறுமணம் கமழ்ந்து பிரியாணி பிரியர்களை சுண்டி இழுக்கின்றன. இது இந்திய சமையல் பாணி வகையில் சமைக்கப்படுகிறது. இது நிஜாம் அரண்மனை சமையலில் மீன், காடை, இறால், மான், முயல் உட்பட 49 வகைகளில் தயாரிக்கப்பட்டது.
பிரியாணி, ஆரம்பத்தில் பண்டிகை காலங்களில் மட்டும் சமைக்கப்பட்டு ருசிக்கப்பட்டு வந்தது. இன்றோ அன்றாட உணவுகளில் ஒன்றாகிப் போனது. வீட்டில் சமைப்பதை விட, ஓட்டல்களில் சமைத்த பிரியாணியை வாங்கி வந்து சாப்பிடுவதிலே தான் மக்களிடம் மவுசு அதிகம்.
உள்நாடு மற்றும் வெளிநாடு ஓட்டல்களில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் உணவுப் பட்டியலில் பிரியாணிக்குத் தான் முதலிடம் கிடைத்துள்ளது. தனியார் ஆன்லைன் உணவு நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றியது. பின்னர், அந்நாட்டு வணிகர்கள் மூலம் ஆசியாவுக்கு வந்தது. ஆசியாவிலிருந்து அரபு வணிகர்களால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது.
பெயர் வந்தது எப்படி?
பிரியாணி என்னும் பெயர் உண்மையில் 'பிரியன்' என்ற சொல் மூலம் பெர்ஷிய மொழியிலிருந்து வந்தது. சமைப்பதற்கு முன் வறுப்பது என்று பொருள்.
பிரியாணி வகைகள்:
பிரியாணி, இதில் சேர்க்கப்படும் தனித்துவமான பொருட்கள் அல்லது தயாரிக்கப்படும் முறைகளைக் கொண்டு ஒவ்வொன்றும் சிறப்பு முக்கியத்துவம் கொண்டு, அதன் வகைகளாக அழைக்கப்படுகிறது.
மொகலில் தொடங்கி ஹைதராபாத், திண்டுக்கல், கல்கத்தா, ஆற்காடு, லக்னோ, தலசேரி. சிந்தி, பாம்பே என பிரியாணி வகைகளின் பெயர் பட்டியல் நீள்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டின் பிரியாணி நகரம் என திண்டுக்கல் அழைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், ஆம்பூர் பிரியாணி என சக்கைப்போடு போடுகிறது. திண்டுக்கல் பிரியாணி, ராவுத்தர் பிரியாணி, செட்டிநாடு பிரியாணி என வகைப்படுத்தப்படுகிறது.
தலப்பாக்கட்டு பிரியாணி
1957 ஆம் ஆண்டு நாகசாமி நாயுடு என்பவரால் ஆனந்த விலாஸ் என்ற பிரியாணி கடை தொடங்கப்பட்டது. சமைக்கும் போது அவர் தலைப்பாகை அணிந்து கொள்ளும் வழக்கம் இருந்ததால், அந்தக் கடை தலப்பாக்கட்டு கடை என்றழைக்கப்பட்டது. திண்டுக்கல் அவரது பூர்வீகம் என்பதால் திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி என்பது பிராண்ட் ஆனது.
பிறப்பு, கொண்டாட்டம், திருமணம், இறப்பு என எல்லா நிகழ்வுகளிலுமே அங்கம் வகிக்கும் பிரியாணி... நினைக்கும் போதே... நறுமணம் கமகமக்குதே!