சோயா பீன்ஸ் என்ற சோயா மனிதர்களால் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பெருமைப் படுத்தும் பாடல்கள் தோன்றியது. நமது உடலின் ஆற்றல் மற்றும் இயக்கங்களுக்கு புரதச்சத்து அவசியம். புரதங்களில் சிறந்த புரதங்கள், சுமாரான புரதங்கள் என இரண்டு வகை உள்ளன. புரதங்களின் தரவரிசை அதன் உயிரியல் மதிப்பினால் வகைப்படுத்தப்படுகிறது. அதன் உயிரியல் மதிப்பு 70 மேல் இருந்தால் அது சிறந்த புரதம். இந்தப் பட்டியலில் அசைவ உணவுகள் இடம் பெற்றுள்ளது. ஆனால், இதற்கு மேலான மதிப்பு உடையது சோயா பீன்ஸ் என்கிறார்கள்.
அசைவ உணவு வகைகளை விட சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம் ஆற்றல் கொண்டது என டெக்சாஸ் உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். நாள்தோறும் உணவில் 25 கிராம் சோயாவை சேர்த்து கொள்வதால் இதய நோய்கள், சிறுநீரக செயலிழப்பு போன்றவற்றை முன் கூட்டியே தடுக்க உதவுவதுடன். எலும்புகளுக்கு வலுவையும் தரும் என்கிறார்கள். குழந்தைகளுக்கு சோயா கொடுத்து வருவதன் மூலம் அவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சோயாபீன்ஸ் உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய பருப்பு வகைகளில் ஒன்றாகும். மற்ற பருப்பு வகைகளை போலவே எல்லா ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. இதில் நிறைவுற்ற கொழுப்பு குறைவாகவும், புரதம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்றவை அதிகமாகவும் இடம் பெற்றிருக்கிறது. கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் தியாமின் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.
புரதத்தை உருவாக்கத் தேவையான ஒன்பது அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. மேலும், குறிப்பாக புரதம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சோயா பீன்ஸானது சோயா மாவு, சோயா புரதம், டோஃபு, சோயா பால், சோயா சாஸ் மற்றும் சோயாபீன் எண்ணெய் உள்ளிட்ட வகைகளாக உண்ணப்படுகிறது.
40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் சோயாவை அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலமாக பல பிரச்னைகளை சமாளிக்க முடியும் என்கிறார்கள். ‘மெனோபாஸ்’ என்பது பெண்கள் 40 வயது கடந்த நிலையில் எதிர்கொள்ளும் உடல் நலம் சார்ந்த நிகழ்வு. மாதவிடாய் விடைபெறும் வேளை அது. அதற்குப் பிறகு பெண்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் சோயா சாப்பிட வேண்டும். சோயாவில் ‘ஐசோபிலவோன்ஸ்’ என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. மாதவிலக்கு நிறைவுறும் வேளைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைளைச் சமாளிப்பதில் இந்த. ‘ஐசோபிலவோன்ஸ்’களுக்கு பெரும் பங்கு உண்டு.
தினந்தோறும் இரண்டு வேளை சோயா பால் சாப்பிடும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக வெள்ளைப்படுதல் பிரச்னைகள் ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள். காரணம், சோயாவில் உள்ள ஐசோபிலோவின் கலவைகள்தான் என்று கூறப்படுகிறது.
சோயாபீன்ஸ் சாப்பிடும் குழந்தைகள் இதய நோய் மற்றும் புற்று நோய் ஆபத்திலிருந்து விடுபடுகிறார்கள் என்கிறார்கள் இங்கிலாந்து நாட்டின் கேட்டில் கெல்லி சத்துணவு ஆய்வு மைய ஆய்வாளர்கள். இதற்குக் காரணம் சோயாபீன்ஸில் உள்ள ‘ஓஸ்டேரோ ஜென்’ எனும் சத்து என்கிறார்கள். நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு வலியால் துடிப்பவர்களுக்கு சோயா உணவுகள் நல்ல வலி நிவாரணியாக செயல்படுவதாக அமெரிக்க ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
சோயாவில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதனால் இதனை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு வழுக்கை விழுவது தடுக்கப்படும் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். சிறுநீர்பையில் ஒட்டியுள்ள புரோஸ்டேட் சுரப்பியில் புற்றுநோய் வராமலும் இது தடுக்கிறது. மேலும், சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கிறது என்கிறார்கள்.
பொதுவாக, 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு டைப் 2 வகை நீரிழிவு நோய்க்கான அபாயம் அதிகரிக்கும். இந்த அபாயத்தை சோயா பீன்ஸ் குறைக்கிறது. சோயா பீன்ஸ்களில் உள்ள ‘ஐசோஃப்ளேவோன்கள்’ நீரிழிவினை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்துகிறது. உடலின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சோயாபீன்ஸ் சாப்பிடலாம். கர்ப்பம் தரிக்கும் பெண்கள் அந்த வேளையில் சோயா உணவுகளை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், அதனால் கரு கலையும் அபாயம் உள்ளது என்று கூறப்படுகிறது.