தற்காலத்தில் ஆரோக்கியம் சார்ந்து அதிகம் விவாதத்திற்கு உள்ளாகும் ஒரு உணவு மைதாவினால் செய்யப்படும் ‘பரோட்டா.’ இது உடல் நலத்திற்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் என்றும் மைதாவை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் உடல் நலத்தைக் கெடுதல் தன்மை கொண்டதால் பரோட்டாவை சாப்பிடாதீர்கள் என்றும் பலரும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் பரோட்டாவைத் தவிர அன்றாடம் மைதாவைக் கொண்டு தயாரிக்கப்படும் பல வகையான உணவுகளை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பன், பிரெட், பிஸ்கட், ரஸ்க், பப்ஸ் முதலான தொண்ணூறு சதவிகிதப் பொருட்களுக்கு மைதாவே அடிப்படையாகும். தற்போது பிரபலமாக உள்ள பீட்சா, பர்கர், பாஸ்தா மற்றும் நூடுல்ஸ் முதலான உணவுகளின் தயாரிப்பில் மைதாவே பிரதானம். நாம் விரும்பி சாப்பிடும் இனிப்புகளான குலோப் ஜாமூன், ஜிலேபி, பாதுஷா, சோன்பப்டி முதலானவை மைதாவைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தினந்தோறும் லட்சக்கணக்கில் விற்பனையாகும் சமோசா மைதாவைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. இப்படி இருக்க பரோட்டாவை மட்டும் தீங்கு விளைவிக்கும் ஒரு உணவு என்று பலரும் கூறுகிறார்கள்.
மைதா எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுவோம். கோதுமையானது உமி, தவிடு மற்றும் உள்ளிருக்கும் தானியம் இவை மூன்றையும் உள்ளடக்கியது. கோதுமை தானியத்தின் மேலிருக்கும் உமியை மட்டும் நீக்கிவிட்டு தவிடோடு சேர்த்து அரைத்து மாவாக்கினால் அதுவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் கோதுமை மாவாகும். உமி மற்றும் தவிடு நீக்கிய கோதுமையை ஒன்றும் பாதியுமாக உடைத்து அரைத்தால் அதுவே ரவை எனப்படுகிறது. உமியையும் தவிடையும் நீக்கிவிட்டு உள்ளிருக்கும் கோதுமை தானியத்தை மட்டும் மாவாக நைசாக அரைத்தால் அதுவே மைதா ஆகிறது.
கோதுமையிலிருந்து தயாரிக்கப்பட்ட மைதா முதலில் பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில்தான் இருக்கும். இதை வெண்மையாக்க பென்சாயில் ஃபெராக்ஸைடு (Benzoyl Peroxide) எனும் வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலமே மைதா வெண்மை நிறத்தை அடைகிறது.
மைதாவில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து முதலானவை உள்ளன. இதில் மாவுச்சத்தே மிக அதிக அளவில் காணப்படுகிறது. எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் மாவுச்சத்து மிகுந்த மைதாவினால் தயாரிக்கப்படும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தினந்தோறும் தமிழ்நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் பரோட்டாவை விரும்பி சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். நாம் சாப்பிட்ட உணவு செரித்து அதனால் கிரகிக்கப்பட்ட சத்துக்கள் நமது உடலால் உபயோகிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும். உடலுக்கு நிறைய வேலை கொடுங்கள். முடிந்த வரை நடைப்பயிற்சி மற்றும் சைக்கிளை பயன்படுத்துங்கள். விரும்பியதை சாப்பிடுங்கள். எந்த பிரச்னையும் வராது. ஒரே இடத்தில் அமர்ந்து வியாபாரம் செய்பவர்கள், அலுவலகத்தில் உட்கார்ந்தபடியே பணிபுரிபவர்கள் பரோட்டா போன்ற உணவுகளை அதிக அளவில் சாப்பிட்டால் நிச்சயம் பிரச்னைகள் ஏற்படத்தான் செய்யும்.
நமது வாழ்க்கை என்பது ரசனை மிகுந்தது. விரும்பிய உணவை விரும்பிய சமயத்தில் சாப்பிடத்தான் வேண்டும். எந்த ஒரு உணவையும் அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் நிச்சயம் அதனால் பிச்னை ஏற்படும். பரோட்டாவையும் விருப்பப்படும் போது சாப்பிடலாம். ஆனால், அளவாக சாப்பிடுங்கள்.
அப்படிச் சாப்பிடும்போது கூடுதலாக நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பரோட்டா போன்ற உணவுகளை சாப்பிட்டு அதனால் உடலில் ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் அந்த உணவை நிச்சயம் தவிர்க்கத்தான் வேண்டும். பிரச்னை ஏதும் ஏற்படவில்லை என்றால் அளவாக சாப்பிடுங்கள். அவ்வளவுதான்.