
நூறு வார்த்தைகள் நீளம் கொண்ட ஒரு சிறிய புனைகதையினை ஆங்கிலத்தில் Drabble என்கின்றனர். இதனைத் தமிழில் 100 வார்த்தை சிறுகதை என்று சொல்லலாம். 100 வார்த்தைகள் எனும் வரையறுக்கப்பட்ட சுருக்கமான இடத்தில் சுவையான, பொருளுள்ள கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆசிரியரின் திறனைச் சோதிக்கும் வகையில் இவ்வகைக் கதைகள் அமைந்திருக்கும்.
1980 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் (United Kingdom) அறிவியல் புனைகதை ஆர்வத்தில் தோன்றியதாக கூறப்படும் இக்கதை வடிவம் 100 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டுமென்கிற நிபந்தனைகளுடன் பர்மிங்காம் பல்கலைக்கழக எஸ்.எப் சொசைட்டியால் நிறுவப்பட்டது. 1969 முதல் 1974 வரை பிபிசியில் ஒளிபரப்பப்பட்ட ‘மான்டி பைதான்'ஸ் ஃப்ளையிங் சர்க்கஸ்’ என்ற நகைச்சுவைத் தொடருக்காக முக்கியத்துவம் பெற்ற பிரிட்டிஷ் நகைச்சுவைக் குழுவினர் 1971 ஆம் ஆண்டில் வெளியிட்ட பிக் ரெட் புத்தகத்தில் இருந்து, 'Drabble' எனும் ஒரு சொல்லை எடுத்துக் கொண்டது. இந்த வார்த்தை விளையாட்டாக விவரிக்கப்பட்டது. அந்த விளையாட்டில், ஒரு நாவலை எழுதும் முதல் பங்கேற்பாளர் வெற்றியாளராக இருந்தார்.
100 வார்த்தை சிறுகதைப் போட்டிகளில், பங்கேற்பாளர்களுக்கு ஒரு கருத்து கொடுக்கப்பட்டு, எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் வழங்கப்படுகிறது. உதாரணமாக, வில்பிரிட் லாரியெர் பல்கலைக்கழகம் (Wilfrid Laurier University) 2011 ஆம் ஆண்டில், அதன் 100 வது ஆண்டு நிறைவை நினைவு கூரும் வகையில் '100 Words Centennial Drabble Contest' ஒன்றை நடத்தியது. அதில் போட்டியாளர்கள் 'உத்வேகம், தலைமைத்துவம் அல்லது நோக்கம்' பற்றி எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதே போன்று, 55 வார்த்தை சிறுகதை என்பது ஐம்பத்து ஐந்து வார்த்தைகள் மட்டும் கொண்ட ஒரு குறுஞ்சிறுகதை வடிவமாகும். ஐம்பத்து ஐந்து வார்த்தைகளுக்கு மிகாமல் இச்சிறுகதை இருக்கும். கதையின் அனைத்துச் செய்திகளையும் கூறாமல் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுவது இந்த வகைக் கதைகளில் உள்ள சிறப்பாகும். 1987 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியா, நியூ டைம்ஸ் என்ற வார இதழில் முதல் 55 வார்த்தை சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின. தமிழில் இவ்வடிவச் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. இதில் பல சிறுகதைகளை சுஜாதா எழுதியுள்ளார்.
55 வார்த்தை சிறுகதைகளின் பண்புகளாகக் கீழ்க்காணும் கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன.
* ஐம்பத்தைந்து வார்த்தைகளுக்கு மிகாமல் அல்லது குறையாமல் இருக்க வேண்டும். (சில வேளைகளில் விதிவிலக்குகள் உண்டு)
* ஒன்று அல்லது பல கதாப்பத்திரங்கள் இருக்கலாம்.
* ஒரு கதைச் சூழல், ஒரு தீர்வு அல்லது திருப்பம்
* ஏழு வார்த்தைகளுக்கு மிகாத தலைப்பு. ஆனால் இந்த வார்த்தைகள் கதையுடன் எண்ணப்படுவதில்லை.
* எண்களும் கணக்கில் உண்டு 45, 100, 4558 போன்றவையெல்லாம் ஒரு வார்த்தை என்று கணக்கில் கொள்ளப்படும்.
* நிறுத்தக்குறிகள் வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.
புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்திருக்கும் தற்போதைய நிலையில், சிறுகதை வாசிப்பு வெகுவாகக் குறைந்து போயிருக்கிறது. இவ்வேளையில், அனைவரும் படிப்பதற்கு எளிதாகவும், சுருக்கமாகவும், 100 வார்த்தை சிறுகதை அல்லது 55 வார்த்தை சிறுகதையினை எழுதத் தொடங்குங்கள்...!