இந்தியாவை ஆங்கிலேயர்களுக்கு முன் பல்வேறு வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆண்டார்கள். அதில் மிகவும் முக்கியமானவர்கள் முகலாயர்கள்.
முகலாய வம்சம் இந்தியாவை 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தது. அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியா பல மாற்றங்களுக்கு ஆளானது. மதநல்லிணக்கத்தை உருவாக்கிய அக்பர், பொற்கால ஆட்சியைத் தந்த ஷாஜஹான் முதல் மதவெறி ஆட்சி நடத்திய ஒளரங்கசீப் வரை பல மன்னர்களை முகலாய வம்சம் கொண்டிருந்தது.
இந்த சக்திவாய்ந்த பேரரசர்கள் அனைவரும் அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி, இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் முகலாய வம்சத்தை விரிவுபடுத்த முயன்றனர். முகலாயப் பேரரசு 1526 முதல் 1857 வரை சுமார் 331 ஆண்டுகள் இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தது. முகலாய வம்சம் இந்திய வரலாற்றின் நீண்ட காலம் ஆட்சி செய்த பணக்கார வம்சமாகும்.
குலப்பெருமையை அழிப்பதற்கு என்றே சில திறமையற்றவர்கள் பிறப்பார்கள். அந்த வகையில் முகலாய வம்சத்திற்கும் சிலர் இருந்தார்கள். பொதுவாக ஒளரங்கசீப்தான் முகலாய வம்சத்தின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார் என்று கூறுவார்கள்; அது தவறாகும்.
ஏனெனில் அவர் மதவெறி கொண்டவராக இருந்தாலும் திறமையான ஆட்சியாளராக இருந்தார். முகலாய பேரரசு வீழ்ச்சியடைய வேறொருவரே காரணமாக இருந்தார், அவர்தான் ஜஹந்தர் ஷா. அவரால் எப்படி முகலாய அரசு வீழ்ச்சியடைந்தது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஜஹந்தர் ஷா யார்?
ஜஹந்தர் ஷாவின் ஆட்சிக் காலத்தில், முகலாய மரபை பலவீனப்படுத்திய பல நிகழ்வுகள் நடந்தன. அவரது ஆட்சி ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. இது முகலாய வரலாற்றில் மிகக் குறுகிய ஆட்சிக் காலங்களில் ஒன்றாகும். ஜஹந்தர் தனது பொறுப்பின்மை மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர். அவர் தனது கள்ள மனைவி லால் குன்வருக்கு பேகம் இம்தியாஸ் மஹால் என்ற பட்டத்தை வழங்கினார், அவர் ஒரு தாசியாக இருந்தார்.
அவரது பலவீனமான தலைமை, இராணுவத்தைப் பலவீனப்படுத்தியது. அது மட்டுமின்றி, அவர் தன்னுடைய தனிப்பட்ட மகிழ்ச்சி மற்றும் ஆடம்பரத்திற்காக அதிகமாக செலவிடுவது முகலாய கருவூலத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. அதன்பின் ஆட்சி பொறுப்பேற்ற அவரது சகோதரர் ஃபரூக்சியார் முகலாய ஆட்சி மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் தவறான முடிவுகளை எடுத்தார்.
முகலாய வம்சத்தை அழிவை நோக்கி தள்ளிய ஃபரூக்சியார் முகலாய சுல்தானகத்தின் அரியணையை கைப்பற்ற அவர் தனது சகோதரர் ஜஹந்தர் ஷாவை கொன்றார். 1713 முதல் 1719 வரை ஆட்சி செய்த ஃப்ரூக்சியார் பெயருக்கு மட்டுமே பேரரசராக இருந்தார். உண்மையில் சயீத் சகோதரர்களே முகலாய அரசவையின் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர்.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு 1717 ஆம் ஆண்டு முகலாய பேரரசர் ஃப்ரூக்சியர் வரியின்றி வணிகம் செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்கினார். இந்த முட்டாள்தனமான உத்தரவால் கிழக்கிந்திய கம்பெனி பெரும் நன்மைகளை பெற்றனர். ஆங்கிலேயர்கள் வரியே செலுத்தாமல் வங்காளம், ஒடிசா மற்றும் பீகார் போன்ற முக்கிய இடங்களில் தனது வணிகத்தை விரிவாக்க முடிந்தது. இதற்கு கைமாறாக முகலாய அரசுக்கு கிழக்கிந்திய கம்பெனி வெறும் 3,000 ரூபாய் மட்டுமே கொடுத்தது. இதன்பின் ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முகலாய ஆட்சியைக் கவிழ்த்து 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டனர்.