உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆசையில், இன்று பலரும் பலவிதமான டயட் முறைகளை பின்பற்றுகிறார்கள். அதில் ஒன்றுதான் இந்த ஜூஸ் டயட். சில நாட்கள் வெறும் பழச்சாறுகளையும், காய்கறி சாறுகளையும் மட்டும் குடித்து உடல் எடையை குறைக்க முயற்சிப்பது இன்றைய ஃபேஷன் ஆகிவிட்டது. விரைவில் உடல் எடையை குறைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் பலரும் இதை செய்கிறார்கள். ஆனால், இது உண்மையிலேயே நம் உடலுக்கு நல்லதா?
சமீபத்திய ஆய்வுகள் இந்த ஜூஸ் டயட் முறை உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. மூன்று நாட்களுக்கு தொடர்ந்து ஜூஸ் மட்டுமே குடித்தால், அது நமது குடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
நமது குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் என இரண்டு வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. இவை இரண்டும் ஒரு சமநிலையில் இருப்பதுதான் நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், ஜூஸ் டயட் இந்த சமநிலையை சீர்குலைத்து விடுகிறது.
மூன்று நாட்கள் வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கும்போது, குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிந்து, தீங்கு செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் குடலில் வீக்கம் உண்டாகிறது. மேலும், இது குடல் சுவர்களையும் சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.
குடல் மட்டுமல்ல, வாயிலும் இதே நிலைதான். வாயிலும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. ஜூஸ் டயட் இந்த பாக்டீரியாக்களின் சமநிலையையும் கெடுத்துவிடுகிறது. வாயில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதால், வாய்வழி ஆரோக்கியம் கெடும் அபாயம் உண்டாகிறது.
இந்த ஆய்வில், ஜூஸ் டயட் பின்பற்றியவர்களை, முழு தானியங்கள் சாப்பிட்டவர்களுடன் மற்றும் தாவர உணவுகள் மட்டும் சாப்பிட்டவர்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். அதில் ஜூஸ் டயட் செய்தவர்களின் குடலில் தான் பாக்டீரியா சமநிலை மிகவும் மோசமாக இருந்தது கண்டறியப்பட்டது. தாவர உணவுகள் சாப்பிட்டவர்களுக்கு குடல் ஆரோக்கியம் மேம்பட்டது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜூஸ் டயட் வயிற்றை சுத்தம் செய்யும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் இது உடலில் வீக்கத்தை உண்டாக்கி, பல நாள்பட்ட நோய்கள் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, உடல் எடையை குறைக்கிறேன் என்ற பெயரில், ஜூஸ் டயட் போன்ற ஆபத்தான முறைகளை பின்பற்றுவதை விட, ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது நல்லது.