
உலகில் அதிகமான மனிதர்கள் பேசும் மொழி ஆங்கிலம். 152.8 கோடி மக்கள், அதாவது உலகின் ஜனத்தொகையில் 18.8 சதவிகிதம் மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். ஆனால், மற்ற மொழிகளைக் கணக்கிடும் போது, இந்த மொழி இளமையான மொழி என்று சொல்லலாம். இதன் வயது சற்றேக்குறைய 1600 வருடங்கள். இந்த மொழியின் சிறப்பு மற்ற மொழிகளிலிருந்து வார்த்தைகளையும், சொல்லாடல்களையும் தன்னுடைய மொழியில் இணைத்துக் கொண்டது.
பண்டைய கிரேக்க நாட்டுப்புறக் கதைகளிலிருந்து, பல சொல்லாடல்கள் ஆங்கிலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்க நாட்டுப்புறக் கதைகளில் ஒரு சிறப்பு அம்சம், பெருவாரியான கதைகளில் கடவுள், தேவதைகள், மக்கள் ஆகியோர் கதாபாத்திரங்கள்.
கிரேக்க கதைகள் ஆங்கிலத்திற்கு வழங்கிய சில சொல்லாடல்களைப் பார்ப்போம்.
1. மிதாஸ் டச் : ஒருவன் எடுத்த எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெற்றால், அவன் தொட்டதெல்லாம் துலங்கும் என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் இதனை 'மிதாஸ் டச்' என்பார்கள்.
மிதாஸ் என்ற கிரேக்க அரசனுக்கு, அவன் செய்த உதவிக்காக கடவுள் வரமளிப்பதாகக் கூறினார். பொருள் மீது அதிக மோகம் கொண்ட மிதாஸ், தான் தொட்டதெல்லாம் பொன் ஆகும் வரம் வேண்டினான். இந்த வரத்தினால் உனக்கு துன்பம் அதிகம் நேரும் என்று சொல்லியும் மிதாஸ் உடன்படவில்லை. வரம் கிடைத்தவுடன், அவன் தொட்ட எல்லாப் பொருட்களும் உணவு, பழ ரசம், அவன் மகள் உட்பட எல்லாம் தங்கமாக மாறின. மிதாஸ் தன்னுடைய தவற்றை உணர்ந்து, கடவுளிடம் இந்த வரத்தை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டினான். அவனை மன்னித்து அவனுக்கு அருளிய வரத்தை நீக்கினார் கடவுள். இருந்தாலும் 'எதிலும் வெற்றி' என்று வாழும் நபர்களுக்கு மிதாஸ் டச் என்ற பெயர் நிலைத்து விட்டது.
2. பண்டோராஸ் பாக்ஸ் : ஒருவனுடைய வாழ்க்கையில் சற்றும் எதிர்பாராத துன்பங்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்தால் இந்த சொல்லாடல் உபயோகப்படுத்தப்படுகிறது.
கிரேக்க புராணங்களின் படி உலகின் முதல் பெண்மணி பண்டோரா. கடவுள், அவளிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து இதனை எந்தக் காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என்று கட்டளை இட்டார்.
ஆனால், ஆவலை அடக்க முடியாமல் அந்தப் பெட்டியை பண்டோரா திறக்க உலகில் பசி, பட்டினி, பிணி போன்றவை பரவின. அதனுடன் நம்பிக்கை என்பதும் உலகில் பரவியதால், மனிதன் எல்லாவற்றிற்கும் விடிவு காலம் வரும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறான்.
3. ஹெர்குலியன் டாஸ்க் : மிகவும் கடினமான, முடிப்பதற்கு அபரிமிதமான வலிமை, விடாமுயற்சி, தைரியம் ஆகியவை தேவைப்படும் பணியை ஹெர்குலியன் டாஸ்க் என்பார்கள்.
கிரேக்க புராணத்தில் ஹெர்குலிஸ், கடவுள்களுக்கு எல்லாம் அரசனான ஜீயஸூக்கும் மற்றொரு பெண்ணிற்கும் பிறந்தவன். அதனால், ஜீயஸின் மனைவி ஹேராவிற்கு அவனைப் பிடிக்காது. பிறந்த உடன் கொல்ல முயற்சித்தாள். முடியவில்லை. ஹெர்குலஸ் வளர்ந்து மணம் புரிந்து பல குழந்தைகளைப் பெற்றான். ஒரு முறை ஹேரா, ஹெர்குலிஸின் மதுவில் கொடிய விஷத்தைக் கலந்தாள். அதைப் பருகிய ஹெர்குலிஸ் கண்களுக்கு அவன் மனைவியும், குழந்தைகளும் தன்னைக் கொல்ல வந்த கொடிய மிருகமாகத் தோன்றினர். தன்னைத் காத்துக் கொள்ள, தன்னை அறியாமல் தன் குடும்பத்தைக் கொலை செய்தான் ஹெர்குலிஸ். இதனால் தந்தையின் கோபத்திற்கு உள்ளான ஹெர்குலிஸ், அவரின் அன்பைத் திரும்பப் பெறுவதற்காக, பத்து கடினமான சாகசங்கள் செய்ய வேண்டி இருந்தது.
அத்தனையும் முடித்து தந்தையின் அன்பைப் பெற்றான் ஹெர்குலிஸ்.
4. காசாண்ட்ரா காம்ப்ளக்ஸ் : உளவியல் தத்துவத்தில், எதிர்காலத்தைப் பற்றிய ஒருவரின் துல்லியமான கணிப்பை, மற்றவர்கள் நம்ப மறுப்பதை காசாண்ட்ரா காம்ப்ளக்ஸ் என்பார்கள்.
காசாண்ட்ரா, ட்ராய் இளவரசன் பாரிஸின் தங்கை. அவளுக்கு, கிரேக்க கடவுள் அப்போலோ, எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் சக்தியைக் கொடுத்தார். கூடவே, அவள் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்றும் பணித்தார். ட்ராய் நகரப் போரில், கிரேக்கப் படை ஒரு பெரிய மரக்குதிரையை உருவாக்கி, அதற்குள் கிரேக்க வீரர்கள் பதுங்கி இருந்தனர். இதை அறியாத ட்ராய் வீரர்கள் அந்தக் குதிரையை நகருக்குள் எடுத்து வந்தனர். காசாண்ட்ரா, இந்த மரக் குதிரையால் நம்முடைய நகரம் அழியும் என்று சொன்னதை எவரும் நம்பவில்லை.
5. அச்சிலஸ் ஹீல் : ஒரு நபரை அல்லது ஒரு செயலை முறியடிக்க, அந்த நபரின் பலவீனம் அல்லது அந்த செயலின் எளிமையான பகுதியை அச்சிலஸ் ஹீல் என்பார்கள்.
பண்டைய கிரேக்கத்தில், யாராலும் வெல்ல முடியாத அச்சிலஸ் என்றொரு மாவீரன் இருந்தார்.
சிறிய வயதில், அவனுடைய தாயார் அவனை ஸ்டைக்ஸ் நதியில் முங்கி எடுத்தார். அவ்வாறு செய்யும் போது, அவனுடைய குதிகாலைப் பிடித்துக் கொண்டு அவனை நதியில் போட்டு எடுத்ததால், அவனுடைய குதிகால் பகுதியில் அந்த நதியின் நீர் படவில்லை. ட்ராய் நகரத்தில் நடந்த சண்டையில், அச்சிலஸ் குதிகாலைக் குறிவைத்து எதிரிகள் அம்பு எய்ததில் அச்சிலஸ் கொல்லப்பட்டார். இதைப் பற்றி ஹோமரின் இலியாத் விவரித்துள்ளது.
6. சைரன் சாங்க் : மனதை மயக்கும், மிகவும் கவர்ச்சிகரமான ஆனால், ஆபத்தானவற்றை ஆங்கிலத்தில் சைரன் சாங்க் என்று சொல்வதுண்டு. ஆன்லைன் சூதாட்டத்தை சைரன் சாங்க் என்று கூறலாம்.
கிரேக்க காவியம் ஒடிசியில் சைரன் என்றொரு உயிரினத்தைக் குறிப்பிடுகிறார் ஹோமர். இவை, பெண் மற்றும் பறவை கலந்த அழகான, ஆபத்தான உயிரினம். கடலில் பயணம் செய்யும் நபர்களை, இவர்கள் தங்கள் இனிமையான குரலில் பேசி, மயக்கி தங்களிடம் வரும்படிக் கூறுவார்கள். குரலில் மயங்கி கப்பலில் இருந்து குதிப்பவர்கள் மடிந்து போவார்கள். இந்த மாயப் பெண்களிடமிருந்து, தந்திரமாகத் தன்னையும் தன் வீரர்களையும் காப்பாற்றிக்கொண்டான் ஒடிசியஸ்.