
பழைய கால கிரேக்கம் (கிரீஸ்) அறிவில் சிறந்த அரசர்களையும் அறிஞர்களையும் சாமானியர்களையும் கொண்ட சிறந்த நாடாக விளங்கியது. அதற்கு எடுத்துக்காட்டாகப் பல சம்பவங்கள் உண்டு. அவற்றில் சில:
1. எப்போது சாப்பிடலாம்?
கிரேக்க அறிஞனான டயோஜினஸிடம் ஒருவன்,
”ஒரு நாளில் எப்போது சாப்பிடுவது சிறந்தது?" என்று கேட்டான்.
அதற்கு அவர்,
“எப்போது விரும்புகிறானோ அப்போது பணக்காரன் சாப்பிடலாம். எப்போது கிடைக்கிறதோ அப்போது ஒரு ஏழை உணவை சாப்பிடலாம்” என்றார்.
2. சொந்தக்காரன் எப்படிப்பட்டவன்?
கிரேக்க நாட்டின் மத்தியப் பிராந்தியத்தில் தெற்கு பகுதியில் உள்ள பகுதி கொரிந்தியா என்று அழைக்கப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவன் தனது வீட்டு வாசலில் பெரிதாக இப்படி எழுதி இருந்தான்:
'ஒரு கெட்ட பயலும் இந்த வீட்டிற்குள் நுழையக் கூடாது.'
அறிஞனான டயோஜினஸ் அதைப் பார்த்து விட்டு இப்படிக் கூறினார்:
'இந்த வீட்டின் சொந்தக்காரன் எப்படி நுழைவானோ!'
3. எப்படி முடி வெட்ட வேண்டும்?
மாஸிடோனியா அரசனான ஆர்ச்சிலாஸிடம், அரட்டைக்கிளியான அவனது நாவிதன் ஒரு முறை முடி வெட்ட வந்த போது கேட்டான் இப்படி:
“உங்கள் முடியை எப்படி வெட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?”
அதற்கு உடனே மன்னன் பதில் சொன்னான்:
“மௌனமாக!”
4. நீ சொல்வது சரிதான்!
ஏதென்ஸ் நகரத்தைச் சேர்ந்த ஒருவன்,
"ஸ்பெயின் தேசத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றும் அறியாத அறிவிலிகள்" என்று சொன்ன போது,
ஸ்பெயின் தேசத்து ஏஜியாட் வம்ச அரசனான ப்லெய்ஸ்டோனக்ஸ் உடனே, கூறினான்:
“நீ சொல்வது சரி தான். உங்களுடைய கெட்ட நடத்தைகள் ஒன்றையும் நாங்கள் கற்றுக் கொள்ளவில்லையே!”
5. கல்யாணமா, பிரம்மசர்யமா எது சிறந்தது?
கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ் அவரது மனைவியிடம் படாத பாடுபட்டார். பொது இடங்களிலேயே அவரது மனைவி அவரை அவமானப்படுத்துவது வழக்கம்.
அவரிடம் ஒருவன் வந்து,
"கல்யணம் செய்து கொள்ளலாமா அல்லது பிரம்மசாரியாகவே வாழ்ந்து விடலாமா? எது சிறந்தது?" என்று கேட்டான்.
உடனே அவர் சொன்னார்:
“எப்படியாவது கல்யாணத்தைச் செய்து கொள். நல்ல மனைவி அமைந்து விட்டால் நீ சந்தோஷமாக இருப்பாய். சற்று ஏறுமாறான மனைவியாக இருந்தால் நீ தத்துவஞானி ஆகி விடுவாய்.”