

எம்பிராய்டரி என்பது ஒரு சாதாரண ஆடையைக்கூட அழகான கலைப்படைப்பாக மாற்றும் அற்புதமான கைவினைக் கலையாகும். வண்ணமயமான நூல்களால் நெய்யப்படும் ஒவ்வொரு பூவும், இலையும், அழகிய டிசைனும் ஆடைக்கு தனி மெருகையும் கம்பீரத்தையும் சேர்க்கின்றன.
எளிமையான உடைகளைக்கூட எம்பிராய்டரி வேலைப்பாடுகள் அழகும் தனித்துவமும் நிறைந்ததாக மாற்றிவிடுகின்றன. ஆடையின் அழகை மெருகேற்றுவதோடு, அணிபவரின் ரசனையையும் வெளிப்படுத்தும் கலையாகவும் இது திகழ்கிறது.
ஒரு அழகான ஆடையை இன்னும் சிறப்பாகக் காட்டுவது அதன் நிறமும் வடிவமைப்பும் மட்டுமல்ல; அதில் செய்யப்பட்டிருக்கும் நுணுக்கமான கைவேலைப் பாடுகளும்தான்.
குறிப்பாக இந்தியப் பாரம்பரிய எம்பிராய்டரி எனப்படும் துணி நூல்கலைக்கு உலகம் முழுவதும் தனி வரவேற்பு உண்டு. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்துவமான எம்பிராய்டரி கலைகள் இருக்கின்றன. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்தக்கலைகள் இன்றைய நவீன ஆடை வடிவமைப்பிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அப்படிப்பட்ட ஆறு பாரம்பரிய எம்பிராய்டரி கலைகளைப் பற்றிப் பார்க்கலாம்.
ஜர்தோசி (Zardozi): அரச குடும்பங்களின் ஆடம்பரக் கலை!
முகலாயர் காலத்திலிருந்தே புகழ்பெற்ற ஜர்தோசி எம்பிராய்டரி, ஆடைகளுக்கு கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கக்கூடியது. தங்கம் மற்றும் வெள்ளி நிற உலோக நூல்கள், மணிகள், முத்துக்கள், ஜிகினாக்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த வேலைப்பாடு செய்யப்படுகிறது.
ஒரு காலத்தில் அரச குடும்பத்தினர் அணியும் ஆடைகளில் மட்டுமே அதிகம் இடம்பெற்ற இந்தக்கலை, இன்று திருமண லெஹங்காக்கள், பட்டுப்புடவைகள், ஜாக்கெட்டுகள் எனப் பல வகையான ஆடைகளில் பயன்படுத்தப்படுகிறது. அதிக வேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவரும் வகையில் இருப்பது இதன் தனிச்சிறப்பு.
சிக்கன்காரி (Chikankari): லக்னோவின் மென்மையான நூல் வேலைப்பாடு!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் தோன்றிய பாரம்பரியக் கலைதான் சிக்கன்காரி. வெள்ளை நிற நூல்களைக் கொண்டு துணிகளில் அழகான பூக்கள், இலைகள் மற்றும் கொடிகள் போன்ற வடிவங்களை உருவாக்குவதே இதன் சிறப்பு.
பார்ப்பதற்கு மிகவும் மென்மையாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் இந்த வேலைப்பாடு காட்டன், சிஃபான், ஜார்ஜெட், துணிகளில் செய்யப்படுகிறது. ஆரம்பத்தில் வெள்ளை நிற ஆடைகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இந்தக் கலை, நவீன ஆடை வடிவங்களிலும் இடம்பெறுகிறது. அன்றாடப் பயன்பாட்டுக்கும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் ஏற்ற வகையில் இது அமைந்துள்ளது.
புல்காரி (Phulkari): பஞ்சாபின் வண்ணமயமான பட்டுநூல் கலை!
பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றுதான் புல்காரி எம்பிராய்டரி. புல் என்றால் பூ, காரி என்றால் வேலைப்பாடு. வண்ணமயமான பட்டு நூல்களைக்கொண்டு துணிகளில் பூக்கள், இலைகள் மற்றும் வடிவியல் டிசைன்களை உருவாக்குவது இதன் சிறப்பு.
பிரகாசமான நிறங்களில் செய்யப்படும் இந்த வேலைப் பாடுகள் துப்பட்டா, லெஹங்கா, ஜாக்கெட் போன்ற ஆடைகளுக்கு அழகையும் தனித்துவத்தையும் தருகின்றன. பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் இந்த வகை ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
கந்தா எம்பிராய்டரி (Kantha): வங்காளத்தின் கதை சொல்லும் தையல் கலை!
மேற்கு வங்காளத்தின் பாரம்பரியக் கைவினைக் கலையான கந்தா எம்பிராய்டரி மிகவும் எளிமையான தையல் முறையைக் கொண்டது. பழைய துணிகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, ஓடும் தையல் முறையில் இணைத்து அழகான வடிவங்களை உருவாக்குவதே இதன் அடிப்படை.
சிறிய பூக்கள், விலங்குகள், பறவைகள், இயற்கைக் காட்சிகள் எனப் பலவிதமான வடிவங்கள் இதில் இடம்பெறும். ஒவ்வொரு தையலிலும் கைவினைக் கலைஞர்களின் உழைப்பும் கற்பனைத்திறனும் வெளிப்படும்.
இன்றைய ஆடை வடிவமைப்பாளர்கள் இந்தக் கலையைப் புடவைகள், ஜாக்கெட்டுகள், நீளமான கவுன்கள் போன்ற நவீன ஆடைகளிலும் பயன்படுத்தி வருகின்றனர்.
கஷிதாகாரி (Kashidakari): காஷ்மீரின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் கலை!
காஷ்மீரின் பள்ளத்தாக்குகள், மலர்கள், கொடிகள் மற்றும் இயற்கைக் காட்சிகளால் ஈர்க்கப்பட்டு உருவானதுதான் கஷிதாகாரி எம்பிராய்டரி.
பட்டு மற்றும் கம்பளி நூல்களைக் கொண்டு மலர்கள், இலைகள், கொடிகள், மாங்காய் வடிவங்கள் போன்ற நுணுக்கமான டிசைன்கள் துணிகளில் உருவாக்கப் படுகின்றன.
முன்பெல்லாம் காஷ்மீர் சால்வைகளில் அதிகம் காணப்பட்ட இந்த வேலைப்பாடு, இப்போது குர்த்தாக்கள், கேப்கள், விசேஷ ஆடைகள் போன்றவற்றிலும் இடம்பெறுகிறது. அதிக ஆடம்பரம் இல்லாமல் நேர்த்தியான தோற்றத்தை விரும்புபவர்களுக்கு இந்தக் கலை மிகவும் பிடிக்கும்.
கண்ணாடி வேலைப்பாடு (Mirror Work): குஜராத், ராஜஸ்தானின் மின்னும் கைவினை!
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் பாரம்பரிய ஆடை அலங்காரக் கலையில் கண்ணாடி வேலைப்பாட்டுக்கு முக்கிய இடம் உண்டு.
சிறிய சிறிய கண்ணாடித் துண்டுகளை வண்ணமயமான நூல்களால் துணிகளில் தைத்து இணைப்பதே இந்தக் கலையின் சிறப்பு. ஒளி படும்போது கண்ணாடிகள் மின்னி ஆடைகளுக்கு அழகான தோற்றத்தைத்தரும்.
இன்று இந்த வேலைப்பாடு லெஹங்காக்கள், குர்த்தாக்கள், கோ-ஆர்டு செட்கள் போன்ற நவீன ஆடைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பண்டிகைகள், திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அணியும் ஆடைகளில் இந்தக் கலை மிகவும் அழகாக இருக்கும்.
ஒவ்வொரு தையலிலும் ஒரு பாரம்பரியக் கதை!
இந்தியாவின் பாரம்பரிய எம்பிராய்டரி கலைகள் வெறும் ஆடை அலங்காரத்திற்காக மட்டுமே உருவானவை அல்ல. ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரம், வாழ்க்கை முறை, கலைத்திறன் மற்றும் தலைமுறை அனுபவங்களை வெளிப்படுத்துபவை.
ஜர்தோசியின் ஆடம்பரம், சிக்கன்காரியின் மென்மை, புல்காரியின் வண்ணங்கள், கந்தாவின் எளிமை, கஷிதாகாரியின் நுணுக்கம், கண்ணாடி வேலைப்பாட்டின் மினுமினுப்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்துவம் உண்டு.
நவீன ஃபேஷன் உலகம் எவ்வளவோ மாற்றங்களைக் கண்டாலும், கைகளால் உருவாக்கப்படும் இந்தப் பாரம்பரியக் கலைகளின் மதிப்பு என்றும் குறைவதில்லை. நம் பாரம்பரியத்தையும் கைவினைக் கலைஞர்களின் திறமையையும் போற்றும் விதமாக இவற்றை ஆதரிப்போம்!