

குடை நமக்கு புதிது அல்ல; வெகுகாலமாகவே நம் நிழலை போலவே அது தொடர்ந்து வந்திருக்கிறது. குடையை ஆங்கிலத்தில் அம்பரெல்லா என்கிறோம். இது அம்பரா என்ற லத்தின் சொல்லில் இருந்து வந்தது. இதற்கு நிழல் என்பது அர்த்தம்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு வீரன் தனது காதலி மழையில் நனையாமல் இருக்க ஒரு சிறு மரத்தை பிடுங்கி அதை அவளுக்கு குடையாக பிடித்ததாக கிரேக்க புராணம் ஒன்று கூறுகிறது. பண்டைய ரோமானிய பெண்கள் தங்கள் கூந்தலை அழகாக அலங்கரித்துக் கொண்டு வெளியே சென்றபோது, காற்றாலும் மழையாலும் கூந்தல் அலங்காரம் கலையாமல் இருக்க சிறு குடைகளை அவர்களுடைய சேடிகள் அவர்கள் கூடவே பிடித்துக் கொண்டு போனார்கள்.
மேற்கு நாடுகளில் குடை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது அவ்வாறுதான். அந்த குடை தோலினாலோ முரட்டு துணியினால் ஆனதாக இருந்தது. பின்னர் அது சற்று பெரிதாக செய்யப்பட்டு ரோமானிய பிரபுக்களால் வெயிலுக்கும் மழைக்கும் பயன்படுத்தப்பட்டது. ரோமானியப் பிரபுகளுக்கு பின்னே சேவகர் குடைகளை பிடித்துக் கொண்டு போவது வழக்கமாக இருந்தது.
பண்டைய காலத்தில் கிழக்கு நாடுகளில் குடை பிடிப்பது உயர்ந்த அந்தஸ்தை காட்டும் சின்னமாக இருந்தது. இந்தியா பர்மா சீனா ஆகிய நாடுகளில் அரசர்களும் அரச பிரதானிகளும் மட்டுமே குடைகளை பயன்படுத்தி வந்தனர். அக்குடைகள் பட்டுத் துணியிலானவை. குடிமக்கள் பயன்படுத்திய குடைகள் ஓலையால் ஆனவை.
டில்லி சுல்தான் குதிரை மீது ஏறிய போதெல்லாம் அவருக்கு கண்கவர் வண்ணக்குடையை அவருடைய பணியாளர் பிடித்து வந்ததாக கிபி 1335ல் இந்தியாவுக்கு வருகை புரிந்த அந்நிய நாட்டிய யாத்ரீகர்கள் கூறியுள்ளனர்.
ஆதியில் இருந்தே இந்துக்கள் குடையை இறைவனுக்குரிய புனித பொருளாக கருதி போற்றி வழிபட்டு வந்திருக்கிறார்கள். இறைவனுக்கு முன்பாக குடையை வீதியுலா அனுப்பும் வழக்கம் இருந்து வருவதும் அனைவரும் அறிந்ததே. திருப்பதி குடையின் மகிமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்று!
குடையை பொதுமக்களிடம் பழக்கத்திற்கு கொண்டு வந்த பெருமை இங்கிலாந்தை சேர்ந்த ஜோன்ஸ் ஹான்ஸ் என்பவருக்கு உரியது அவருடைய இந்த முயற்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
துணியாலான சாதாரண குடைகளை மக்கள் பயன்படுத்த ஆரம்பித்தது பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான். அவ்வாறு துணிக்குடைகளை முதன் முதலில் பயன்படுத்திய பெருமை இத்தாலிய மக்களே சேரும். அவர்கள் போப்பாண்டவருக்கும் மதகுருகளுக்கும் பின்னால் குடை பிடித்து செல்வது மரியாதை வழக்கமாக இருந்தது
பிரான்சில் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பு திமிங்கலங்களின் எலும்புகளின் மேல் தோலையோ எண்ணெய் துணியையோ வைத்து இணைத்து குடையாக பயன்படுத்தினர். அவை கனமாகவும் பார்ப்பதற்கு அவலட்சணமாகவும் இருந்தன. பதினெட்டாம் நூற்றாண்டின் லண்டன் உணவு விடுதிகளில், மழையின் போது வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு கொடுக்க குடைகளை வைத்திருந்தனர். அதை பயன்படுத்த ஆரம்பித்தபோது, மற்றவர்கள் இழிவாக கருதினர். காரணம் எந்தவிதமான வாகனமும் இல்லாமல் நடந்து செல்லும் ஏழைகளின் சின்னமாக அது கருதப்பட்டது.
இரும்பு கம்பிகளினாலும் கருப்பு துணியாலும் ஆன குடைகள் 1850க்கு பிறகுதான் புழக்கத்திற்கு வந்தன. 1910க்கு பிறகு டஃபேட்டா சில்க் ரேயான் துணிகள் ஆயின பயன்படுத்தப்பட்டன.
தற்போது நவநாகரீக குடைகள் வண்ண வண்ண குடைகளும் விற்கப்படுகின்றன. அத்துடன் பெரியவர்களுக்கு ஏற்ற குடைகளும் பெண்களுக்கு ஏற்ற குடைகளும் சிறுவர்களுக்கேற்ற குடைகளும் பல ரகங்களில் விற்கப்படுகின்றன. நைலான் துணியிலும் பிளாஸ்டிக்கிலும் குடைகள் வந்துள்ளன. குடையை மூன்றாகவும் நான்காவோ மடக்கி கைப்பையில் போட்டுக் கொள்ளும் குடைகளும், தலையில் தொப்பி போல அணிந்து செல்லும் குடைகளும், குடையின் வரலாற்றில் இறுதி கட்டமாக தற்போது திகழ்கின்றன.
இன்று உலகிலேயே குடைகள் தயாரிப்பதில் முதன்மையாக திகழும் நாடு ஜப்பான்தான. இங்கு எழுபதுக்கும் மேற்பட்ட குடைகள் தயாரிப்பு கம்பெனிகள் உள்ளன. இந்தியாவில் ஆண்டுக்கு எண்பத்தைந்து லட்சம் குடைகளுக்கு மேல் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் ஏறக்குறைய இருபத்தைந்து லட்சம் குடைகள் பம்பாயில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. கருப்பு துணியால் தைக்கப்பட்ட குடைகளுக்கு வெயிலின் உஷ்ணம் தாக்காமல் தடுக்கும் சக்தி கருப்பு துணிக்கு உண்டு ஆகவே தான் குடைகளுக்கு பெரும்பாலும் கருப்பு துணி பயன்படுத்தப்படுகிறது. ஒரு பட்டனை அழுத்தினால் விரித்துக் கொள்ளும் குடை, மடக்கி கைக்குள் அடக்கிக் கொள்ளும் குடை, வேலைக்கு தகுந்த குடை தகுதிக்கு தக்க குடை என்று விதவிதமாக குடைகள் வந்திருக்கின்றன.
இன்று மழை வெயில் என்று இல்லாமல் என்றும் கையில் குடை இல்லாமல் நாம் வெளியில் செல்ல முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது குடை நம்மை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு கவசமாக வலம் வருகிறது.