ஆங்கிலத்தில் ‘டக் ஆப் வார்’ (tug of war) என்று அழைக்கப்படும் கயிறு இழுக்கும் போட்டி ஒரு வேடிக்கையான விளையாட்டு. பள்ளி, கல்லூரிகளில், கோடைகால முகாம்களில் மற்றும் உள்ளூர் திருவிழாக்களில் நடத்தப்படும் போட்டி. இது ஒரு எளிமையான மற்றும் வேடிக்கையான விளையாட்டு என்றாலும் தேசிய மற்றும் சர்வதேச கூட்டமைப்புகளும் இதை நடத்துகின்றன என்பது சுவாரஸ்யமான விஷயம்.
இந்தக் கயிறு இழுக்கும் விளையாட்டுப் போட்டி சமீபத்தில் தோன்றியதல்ல. வளமான வரலாறையும் ஆழமான கலாச்சார மரபுகளையும் கொண்டது. பண்டைய எகிப்து, கம்போடியா, கிரீஸ், இந்தியா மற்றும் சீனாவில் நடைமுறையில் இருந்தது. இது பண்டைய சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களில் இருந்து உருவானதாக அறியப்படுகிறது.
பண்டைய சீனா:
கி.மு எட்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை பண்டைய சீனாவில் டாங் வம்சத்தில் கொக்கி இழுத்தல் என்ற பெயரில் சூ மாநிலத்தின் ராணுவ தளபதியால் வசந்த மற்றும் இலையுதிர் காலத்தில் வீரர்களை பயிற்றுவிக்க பயன்படுத்தப்பட்டது. டாங் வம்சத்தின் போது டாங்கின் பேரரசர் சுவான்சோங் பெரிய அளவில் இந்த விளையாட்டை ஊக்குவித்தார். 167 மீட்டர் வரை நீளம் உள்ள கயிறுகளை பயன்படுத்தி, அவற்றில் குறுகிய கயிறுகள் இணைக்கப்பட்டு கயிற்றின் ஒவ்வொரு முனையிலும் 500க்கும் மேற்பட்டவர்கள் இழுக்குமாறு இந்த விளையாட்டு நடத்தப்பட்டது.
பண்டைய கிரீஸ்:
பண்டைய கிரேக்கத்தில், இந்த விளையாட்டு ஹெல்கிஸ்டிண்டா, எஃபெல்கிஸ்டிண்டா மற்றும் டைல்கிஸ்டிண்டா என்று அழைக்கப்பட்டது. இது 'நான் இழுக்கிறேன்' என்று பொருள்படும்.
இந்தியா:
கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலும் கயிறு இழுத்தல் பிரபலமாக இருந்ததாக தொல்பொருள் சான்றுகள் கூறுகின்றன. கோனார்க் சூரிய கோவிலில் கயிறு இழுத்தல் விளையாட்டு நடந்து கொண்டிருப்பதைக் காட்டும் ஒரு கற்சிற்பம் உள்ளது.
ஐரோப்பா:
ஐரோப்பாவில் ஸ்காண்டிநேவியா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வீர சாம்பியன்களைப் பற்றிய கதைகள் உள்ளன. அங்கு வைக்கிங் வீரர்கள் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை சோதிக்கும் விதமாகவும், போர் மற்றும் கொள்ளைக்குத் தயாராகவும் திறந்த நெருப்புக் குழிகளில் விலங்குகளின் தோல்களை இழுக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டார்கள். 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சு சேட்டோ தோட்டங்களிலும் பின்னர் கிரேட் பிரிட்டனிலும் போட்டிகளின் போது கயிறு இழுத்தல் பிரபலப்படுத்தப்பட்டது.
கப்பலிலும், ஒலிம்பிக்கிலும்:
19 ஆம் நூற்றாண்டில், கடலில் கப்பல்கள் சென்று கொண்டிருக்கும் போதும், கடற்படைப் போர்களின் போதும் பாய்மரங்களை சரிசெய்ய, கடலோடி மனிதர்களிடையே கயிறு இழுக்கும் ஒரு புதிய பாரம்பரியம் உருவானது. 1900 முதல் 1920 வரை, ஒலிம்பிக்கில் கயிறு இழுத்தல் ஒரு விளையாட்டாக இருந்தது.
இந்தியாவில் கயிறு இழுக்கும் விளையாட்டுப் போட்டி:
இந்தியாவில் இந்தப் போட்டி தீவிரமாக நடத்தப்படுகிறது. சிறிய போட்டிகள் முதல் பெரிய அளவிலான போட்டிகள் வரை நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்கள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் தேசிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கயிறு இழுத்தல் சேர்க்கப்படுகிறது.
கலாச்சார முக்கியத்துவம்:
இந்தியாவில் கயிறு இழுத்தல் வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது. இது பண்டைய காலங்களில் இருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது குறிப்பிடத்தக்க வகையில் பிரபலம் அடைந்தது. பின்னர் குழுப் பணி மற்றும் சமூக உணர்வின் அடையாளமாக மாறி உள்ளது. பள்ளிப் போட்டிகள் முதல் அரசு நிதி உதவி அளிக்கும் நிகழ்வுகள் வரை பல்வேறு நிலைகளில் இந்த விளையாட்டு தொடர்ந்து விளையாடப்பட்டு வருகிறது.
உலகின் மிகப்பெரிய கயிறு இழுத்தல் போட்டி:
2016ல் குஜராத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 5000 போட்டியாளர்கள் பங்கேற்று புதிய உலக சாதனை படைத்தனர். கேல் கும்பமேளாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டி, சீனாவின் முந்தைய சாதனையை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டது.