நம் நாட்டை பொறுத்தவரையில் பெரும்பாலானோர் பொது போக்குவரத்தாக ரயில்களையே பயன்படுத்துகிறோம். ஏனெனில், ரயில் போக்குவரத்தே மிக எளிமையானதாகவும், பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் மலிவானதாகவும் உள்ளது. அது மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான கி.மீ. தொலைவிற்கு பயணிப்பதற்கு பேருந்துகளைக் காட்டிலும் ரயில்களே எளிய மக்கள் மட்டுமின்றி மிடில் கிளாஸ் மக்களுக்கும் ஏற்றதாக உள்ளது. அதாவது, 1000 கி.மீ. தொலைவிற்கோ அல்லது அதற்கு மேலான தொலைவிற்கோ பயணிப்பதற்கு விமானங்களில் பல ஆயிரம் ரூபாய் செலவாகும்.
பேருந்துகளிலும் கிட்டத்தட்ட அதே அளவிலான தொகையை செலவிட வேண்டியதாக இருக்கும். ஆனால், ரயில்களில் சில ஆயிரங்கள் செலவழித்தாலே போதுமானதாக உள்ளது. இவ்வாறு ரயில் எந்தவொரு வழியிலும் சௌகரியமானதாக விளங்கும் நிலையில், ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்ட காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 74 வருடங்களாக இலவசமாக இயக்கப்பட்டு வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம், வட இந்தியாவில் ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கும், பஞ்சாப் மாநிலத்திற்கும் இடையே இயங்கும் ரயில் பக்ரா நங்கல் ஆகும். நாடு சுதந்திரம் பெற்ற காலக்கட்டத்தில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ரயில் இதுவரையில் பயணிகளிடம் ஒரு பைசா கூட கட்டணமாக வாங்கியது இல்லை. பக்ரா பியாஸ் என்ற நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் இந்த ரயிலானது ஏற்கெனவே கூறியதுபோல், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலமான பக்ராவில் இருந்து பஞ்சாப்பில் உள்ள நங்கல் வரையில் இயக்கப்படுகிறது. அதாவது, இந்தப் பழைமை வாய்ந்த ரயில் இரு மாநிலங்களின் பார்டரை கடந்து செல்கிறது.
இதில் குறிப்பாக, 13 கி.மீட்டருக்கு ஷிவாலிக் மலைத்தொடர் பகுதியையும் இந்த ரயில் கடந்து செல்கிறது. அத்துடன், சட்லேஜ் என்ற பெயர் கொண்ட நதியையும் இந்த ரயில் கடக்கிறது. இவ்வாறு இயற்கை அழகு செழித்தோங்கும் பகுதிகளில் செல்லும் இந்த ரயில் பயணத்திற்கு ஒரு ரூபாய் கூட டிக்கெட் கட்டணம் இல்லை என்பது உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
மலைப்பகுதிகளில் பயணிப்பதாலோ என்னவோ பக்ரா நங்கல் ரயில்கள் சில பெட்டிகளை மட்டுமே கொண்டவைகளாக உள்ளன. ஏறக்குறைய 300க்கும் மேற்பட்டோர் இந்த ரயில் போக்குவரத்தை தங்களது தினசரி பயன்பாட்டிற்காக பயன்படுத்துகின்றனர். இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், பக்ரா மற்றும் நங்கல் பகுதிகளுக்கு இடையே உள்ள 25 கிராம மக்களின் பிரதான போக்குவரத்து இதுதான். இலவச பயணம் என்பதால் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை தூண்களுள் ஒன்றாக பக்ராநங்கல் ரயில் விளங்குகிறது.
முதன் முதலாக இந்த ரயில் சேவையானது 1948ல் துவங்கப்பட்டது. ஹிமாச்சலத்தில் உள்ள பக்ரா பகுதியானது அங்குள்ள நீர் அணைக்கு பிரபலமானது. உலகின் மிக அதிக ஈர்ப்பு விசை கொண்ட நீர் அணையாக கருதப்படும் இதனை 1963ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு திறந்து வைத்தார். பிரம்மாண்டமாக பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பக்ரா அணையை கட்டமைப்பதற்காக தொழிலாளர்களை ஏற்றிச் செல்லவே ஆரம்பத்தில் இந்த ரயில் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனாலேயே இந்த ரயிலில் பயணிப்பதற்கு பயண சீட்டோ அல்லது வேறேதேனும் கட்டணமோ ஆரம்பத்தில் விதிக்கப்படவில்லை. பின்னர் அந்த நடைமுறை தற்போது வரையிலும் பின்தொடரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில், அதாவது 1948ல் முதல்முறையாக சேவை துவங்கப்பட்டபோது ரயில் ஸ்டீம் எனப்படும் புகை வண்டியாகவே இருந்துள்ளது. ஆனால், அடுத்த 5 வருடங்களில், அதாவது 1953ல் அமெரிக்காவில் இருந்து 3 மாடர்ன் என்ஜின்கள் இந்த ரயிலில் பொருத்துவதற்காக வாங்கி வரப்பட்டுள்ளன.
அதன் பின், தற்போது வரையில் அந்த 3 என்ஜின்களின் 5 விதமான வேரியண்ட்களை இந்தியன் ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. ரயிலின் பெட்டிகளைப் பொறுத்தவரையில், அவை கராச்சியில் தயாரிக்கப்பட்டவைகளாக உள்ளன. ஆனால், உட்பக்க அலங்கரிப்புகள் யாவும் பிரிட்டிஷ் ஸ்டைலில் ஆனவை. இந்த ரயிலை இயக்குவதற்கு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 18 முதல் 20 லிட்டர் எரிபொருள் செலவாகிறது. இருப்பினும் இப்போதும் உங்களால் இந்த ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.