தற்போது நடைப்பயிற்சியின் நன்மைகள் பற்றி அறிந்து அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டு வருகிறது. ரெட்ரோ (Retro) வாக்கிங் என்பது பின்னோக்கி நடக்கும் நடைப்பயிற்சி ஆகும். இது வழக்கத்திற்கு மாறாக தோன்றினாலும், இது பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. அது பற்றியும், ரெட்ரோ வாக்கிங்கில் ஈடுபடும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்களைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
ரெட்ரோ வாக்கிங்கின் ஆரோக்கிய நன்மைகள்:
1. அதிகக் கலோரிகள் எரிப்பு: முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடப்பது அதிகக் கலோரிகளை எரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், பின்னோக்கி நடக்கும்போது அதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படும். இது வெவ்வேறு தசைகளை செயல்படுத்த உதவுகிறது. இந்த ரெட்ரோ வாக்கிங்கில் பயன்படுத்தப்படாத தசைகளை, குறிப்பாக தொடைகள் மற்றும் காஃப் மசில் போன்றவை அதிகமாக செயல்படுகின்றன. இதனால் உடலின் ஒட்டுமொத்த தசை வலிமையும் அதிகரிக்கிறது.
2. மூட்டு வலி நிவாரணம்: குறிப்பாக, மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரெட்ரோ நடைப்பயிற்சி அதிக நன்மைகளைத் தருகிறது. இவர்களுக்கு மூட்டுகளில் அழுத்தம் குறைவதால் மூட்டு வலியும் குறைகிறது. மேலும், இடுப்பு மூட்டுகளில் ஏற்படும் அழுத்தமும் குறைந்து இடுப்பு வலியும் குறைகிறது.
3. மூளை செயல்பாட்டில் மேம்பாடு: பின்னோக்கி நடப்பது மூளையின் புதிய பாதைகளைத் தூண்டுகிறது. இதனால் நினைவாற்றலும் கவனமும் மேம்படுத்தப்படுகிறது. மூளை சுறுசுறுப்பாக செயல்படும்போது, உடலும் உற்சாகம் அடைந்து, செய்யும் வேலையில் கவனமும், திறனும் கூடுகிறது.
4. உடல் தோரணை மேம்பாடு: பின்னோக்கி நடக்கும் செயல்பாடு உடல் தோரணையை மேம்படுத்துகிறது. கூன் போடுவது மறைந்து முதுகுத்தண்டு நேராக இருக்க உதவுகிறது.
5. இருதய ஆரோக்கியம்: ரெட்ரோ நடைப்பயிற்சி இருதய ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கிறது. பின்னோக்கி நகர்வதற்குத் தேவைப்படும் அதிகரித்த முயற்சி இதயத் துடிப்பை உயர்த்துகிறது. அதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. பின்னோக்கி நடந்து பழகும்போது நாளடைவில் முன்னோக்கி நடக்கும்போது நடையில் வேகம் கூடும். அது விரைவில் கொழுப்புகளை எரிக்க உதவும். அதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். உடல் பருமனும் குறையும்.
6. மனநல மேம்பாடு: பின்னோக்கி நடக்கும்போது சுற்றுப்புறத்தை பற்றிய அதிக கவனமும் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது. மனமும் லேசாகி, கவலைகள் குறைகிறது.
ரெட்ரோ நடைப்பயிற்சியில் ஈடுபடும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்:
பின்னோக்கி நடக்கும் ரெட்ரோ நடைப்பயிற்சியை மேற்கொள்ளும்போது தொடக்கத்தில் மிகவும் ஜாக்கிரதையாக, பொறுமையாக நடக்க வேண்டும். நடக்கும் இடத்தில் ஏதேனும் தடைகள் அல்லது பொருட்கள் கிடக்கிறதா என்பதை பார்த்துக் கொண்டு முதலில் வீட்டின் மொட்டை மாடி அல்லது வீட்டிற்குள் நடந்து பழக வேண்டும்.
பின்னர் வீட்டிற்கு வெளியே பொருத்தமான காலணிகளை அணிந்து சமமான தளத்தில் நடக்க வேண்டும். வெறும் காலுடன் நடக்கக் கூடாது. பின்பு சாலை அல்லது பூங்கா போன்ற இடங்களில் நடக்கும்போது பிறருடன் மோதுவதைத் தவிர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆரம்பத்தில் உடன் யாராவது நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை அருகில் வைத்துக் கொண்டு இந்த பயிற்சியைத் தொடங்க வேண்டும். முதலில் சிறிது நேரம் நடந்து பழகிய பின்பு நடக்கும் நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.