
கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் பரவலாக நம் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் குடையின் வரலாறைப் பற்றித் தெரியுமா?
குடையின் ஆங்கில வார்த்தையான umbrella என்ற சொல், லத்தின் மொழியின் umbra என்கிற சொல்லில் இருந்து வந்தது. லத்தின் மொழியில் umbra என்றால் நிழல் என்று பொருள்.
குடை கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளாக இருந்து வருகிறது! முதன்முதலில் மேற்கு ஆசியாவின் மெசபடோமியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காலங்களில், சூரியனின் தாக்கம் மிகவும் அச்சுறுத்தும் வகையில் இருந்தது. ஆகவே வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வலிமையான சிறு குடைகள் தயாரிக்கப்பட்டன.
இந்த குடைகள் முதலில் பனை ஓலைகள், பாப்பிரஸ் மற்றும் மயில் இறகுகளால் செய்யப்பட்டன. மேலும் இக்குடைகளை பண்டைய எகிப்து மற்றும் மெசொப்பொத்தேமியா பகுதியில் உள்ள உயர் வகுப்பினர்கள் மட்டுமே உபயோகித்தனர். இந்த வகை குடைகள் மிகவும் கனமாக இருந்தன. அந்த சமயத்தில் சீனாவிலும் குடைகள் இருந்தன. ஆனால் அவை மூங்கில் குச்சிகளால் செய்யப்பட்டிருந்தன. மேலும் இலைகள் மற்றும் இறகுகளால் மூடப்பட்டிருந்தன.
16-ம் நூற்றாண்டில்தான் நாம் அறிந்த குடை ஒரு யதார்த்தமாக மாறியது. எண்ணெய் மற்றும் மெழுகு உறைகள் குடைகள் மீது மாற்றப்பட்டன. இந்த தருணத்திலிருந்துதான் குடை மோசமான வானிலை மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் ஒரு பொருளாக மாறியது.
17-ம் நூற்றாண்டில், மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் குடை பிரபலமடைந்தது. ஆரம்பத்தில், மழையிலிருந்து பாதுகாக்க இதை பெண்கள் மட்டுமே உபயோகப்படுத்தினர்.
ஆனால் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆண்களும் படிப்படியாக அதை ஏற்றுக்கொண்டு உபயோகப்படுத்த தொடங்கினார்கள். ஜோனாஸ் ஹான்வே ஆண்களுக்கான குடைகளின் சகாப்தத்திற்கு வழி வகுத்தார்.
முதல் ஐரோப்பிய குடைகள் திமிங்கல எலும்பு அமைப்பைக் கொண்டிருந்தன. பின்னர் எஃகு, அலுமினியம் ஆகியவற்றால் மாற்றப்பட்டன. பிறகு எண்ணெய் துணி, கேன்வாஸ், மேலும் எதிர்ப்புத் திறன் கொண்ட நைலான் வகை துணிகளால் மாற்றி அமைக்கப்பட்டன.
நவீன கால குடை:
20-ம் நூற்றாண்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக நவீன குடைகள் உருவெடுக்க ஆரம்பித்தன. நவீன கால குடைகள் பண்டைய கிரேக்க மற்றும் ரோமில் பயன்படுத்தப்பட்ட குடை மாதிரிகளை போன்று வடிவமைப்பில் ஒத்திருக்கின்றன.
குடைகள் தற்போது பல வகைகளாக தயாரிக்கப்படுகின்றன. அவை பாரம்பரிய குடைகள், தானியங்கி குடைகள், சிறிய குடைகள் என பல்வேறு வகைகளில் தயாரிக்கப்படுகின்றன.
நவீன கால குடைகளின் வெளிப்புறங்களில் டெஃப்ளான் பூசப்பட்டிருக்கும். அது குடையின் மேல்பகுதியில் நீர்ப் புகாத வகையில் தடுக்கிறது. நவீன குடைகள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன.
குடைகள், தற்காப்பு மற்றும் தாக்குதல் ஆயுதங்களாகக் கூட பயன்படுத்தப்பட்டன. முதன் முதலில் பிரஞ்சு ஜனாதிபதியாய் இருந்த நிக்கோலா சார்க்கோசி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கெவ்லார் பூசப்பட்ட குடையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்.
இன்றைய கால கட்டத்தில் பல வித வண்ணங்களில் புதிய புதிய design களில் உருவாக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்றவாறு குட்டி குட்டி குடைகளும் கண்ணை கவரும் வகையில் இருக்கின்றன.
மழைக்காலங்களில் நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு பொருள் இந்த குடை. வெயில் காலத்திலும் சூரியனின் கடுமையான வெப்பத்திலிருந்தும் இந்த குடை நம்மை காப்பாற்றுகிறது. எடை குறைவானதாவும், எடுத்து செல்வதற்கு வசதியாகவும் இருப்பதால் இதன் பயன்பாடு மிகவும் அதிகமாக இருக்கிறது. எளிதில் கிடைக்க கூடிய மற்றும் எல்லோராலும் வாங்கக்கூடிய ஒரு பொருள் இந்தக் குடை.
மழை மற்றும் வெயில் நாட்களுக்கான ஒரு சிறந்த பாதுகாவலன் தான் இந்த குடை. இதன் தேவை இருக்கும் போது திறந்து வைத்து கொள்ளவும், தேவை இல்லாத போது மடித்து வைத்து கொள்ளவும் முடிவதால் இது ஒரு சௌகரியமான மற்றும் உபயோகமான பொருளாகும்.