

கர்பா ஆடப் போறேன். நீ வரயா ரமா..? என ராதா கேட்க,
இல்லை! நான் தாண்டியா ஆடப் போறேன் என ரமா கூறினாள்.
இரண்டுமே நாம ஆடலாம். நவராத்திரி ஒன்பது நாட்கள் கொண்டாட்டத்தில், மாற்றி-மாற்றி ஆடலாம். ஒகே!
டபுள் ஓகே!
ராதாவும், ரமாவும் ரெடியாகிவிட்டனர். நாமும் அவர்களுடன் செல்வோம்.
கர்பாவிற்கும் தாண்டியாவிற்கும் வித்தியாசம் இருக்கிறதா..? என்றால் இருக்கிறது. இரண்டின் வேறுபாடுகள் பின்வருமாறு:
கர்பா:
கர்பா நடனம் என்பது, துர்கா தேவியின் திருவுருவச் சிலை அல்லது களிமண் விளக்கின் முன்பாக, ஆரத்தி எடுப்பதற்கு முன்னர் கைகளைக் தட்டி ஆடப்படும் நடனமாகும்.
கர்பா என்கிற சொல், பெண்களின் கருப்பைக்கான வார்த்தையிலிருந்து வந்ததாகும். இச்சொல்லின் பொருள் கருக்காலம் அல்லது கர்ப்ப வாழ்க்கை ஆகும்.. பாரம்பரியமாக, கர்பா தீப் ("கருவறை விளக்கு") என்று அழைக்கப்படும் ஒரு களிமண் விளக்கைச் சுற்றி நடனம் நிகழ்கிறது. இந்த விளக்கு வாழ்க்கையை, குறிப்பாக கருவில் இருக்கும் சிசுவின் வாழ்க்கையைக் குறிக்கும். நடனக் கலைஞர்கள் தெய்வீகத்தின் பெண்ணிய வடிவமான துர்காவை இதன்படி மதித்துப் போற்றுகிறார்கள்.
காலத்தைப் பற்றிய ஓர் இந்துமதப் பார்வையின் அடையாளமாக கர்பா நடனமானது ஒரு சுழல் வட்டத்திற்குள் நிகழ்த்தப்படுகிறது. இந்து மதத்தில், காலத்தின் சுழற்சி, பிறப்பு, வாழ்க்கை, மரணம் மற்றும் மீண்டும் மறுபிறப்பு எனச் சுழலும்போது, நிலையான ஒரே பொருள் இறைவியான தேவி மட்டுமே. எனவே இதன் அடையாளமாகவே நடனக் கலைஞர்களின் வளையங்கள் சுழற்சிகளில் சுழல்கின்றன.
மேலும், இந்த முடிவில்லாத மற்றும் எல்லையற்ற இயக்கத்தின் நடுவே ஒரு அசைவற்ற சின்னமாக, விளக்கு அல்லது படம் அல்லது சிலை விளங்குகிறது. இந்த நடனத்தில் பெண்பால் வடிவம் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது. மாறிக்கொண்டேயிருக்கும் பிரபஞ்சத்தில், மாற்றமில்லாத எஞ்சியுள்ள ஒரே விஷயம் கடவுள் என்று இந்த நடனம் குறிப்பிடுகிறது.
கர்பா தீபத்திற்கு மற்றொரு குறியீட்டு விளக்கம் உள்ளது. இந்த பாத்திரமே உடலின் அடையாளமாகும், அவற்றில் தெய்வீகம் தேவியின் வடிவத்தில் வாழ்கிறது. எல்லா மனிதர்களுக்கும், தேவியின் தெய்வீக ஆற்றல் தங்களுக்குள் இருக்கிறது என்பதை மதிக்க கர்பா நடனக் கலைஞர்கள் இந்த விளக்கு சின்னத்தைச் சுற்றி நடனமாடுகிறார்கள். கர்பா இப்போது உலகளவில் பாராட்டப்பட்ட நடனமாகத் திகழ்கிறது. இதற்கான ஆடை அணிகலன்களைப் பார்க்கலாமா..?
சன்யா - சோளி - துப்பட்டா
விரிந்த பாவாடையாகிய சன்யா, நடனத்தின்போது வட்டமாக அழகாக விரியும் வகையில் அதிக ப்ளேர் (4 மீட்டர் முதல் 9+ மீட்டர் வரை) கொண்டது.
சோளி, உடலோடு ஒட்டிய ரவிக்கை . துப்பட்டா தோளில் போர்த்தப்படும் நீண்ட மற்றும் வண்ணமயமான துணி.
இது, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பிங்க் போன்ற தடித்த மற்றும் பிரகாசமான நிறங்களில் இருக்கும். இதில் கண்ணாடி வேலை, , எம்பிராய்டரி, பீட்ஸ் மற்றும் பளபளப்பான பார்டர்கள் இடம்பெற்றிருக்கும்.
இதற்கான நகைகள், ஜும்கா, நெக்லஸ், பஜ்ஜுபந்த், கங்கன் கமர்பந்த் மற்றும் காலில் அணியும் கொலுசு. ஆகியவைகள் ஆகும்.
ஆண்கள், முழங்காலுக்கு மேல் வரை வரக்கூடிய சிறிய வட்ட வடிவ குர்தாவும், அதற்கேற்ற கஃப்னி பைஜாமாவும் அணிவர்.
பாரம்பரிய குஜராத்திய 'கெடியா' எனப்படும் மேல் சட்டை மற்றும் தோள் துண்டுடன் கூடிய உடை மிகவும் பிரபலமானது. இதில் கண்ணாடி வேலைப்பாடுகள் மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கும்.
தலையில் பாரம்பரிய குஜராத்திய தலைப்பாகை அணிவர். தோளில் பாந்தனி துப்பட்டா, கைகளில் காப்பு மற்றும் காலில் மோஜரி அணிவர்.
நவராத்திரி தாண்டியா
தாண்டியா நடனம் என்பது பூஜைகள் மற்றும் ஆரத்திகள் முடிந்த பின்னர், அலங்கரிக்கப்பட்ட குச்சிகளைக் கொண்டு ஆடப்படும் ஒரு கொண்டாட்ட வடிவமாகும்.
தாண்டியா ராஸ் என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உருவான ஒரு புகழ் பெற்ற பாரம்பரிய நாட்டுப்புற நடனமாகும். குறிப்பாக, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நவராத்திரி ஒன்பது நாட்களிலும் இந்த நடனம், நாடு முழுவதும் மிகவும் உற்சாகமாக ஆடப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஆடப்படும் கோலாட்டத்தைப் போன்ற இந்த தாண்டியா நடனம் பற்றிய முக்கிய விவரங்கள்தான் என்ன..?
நடனத்தின் பின்னணியும் வரலாறும்:
தீமையின் மீது நன்மை என்பதை சித்தரிக்கும் வகையில், தாண்டியா நடனம் துர்கா தேவிக்கும் மகிஷாசூரன் என்ற அரக்கனுக்கும் இடையே நடந்த போரைச் சித்தரிப்பதாக நம்பப்படுகிறது.
வாளின் அடையாளம்:
தாண்டியா நடனத்தின் போது கைகளில் ஏந்தும் வண்ணமயமான தாண்டியா மரக்குச்சிகள், துர்கா தேவியின் வாள்களைக் குறிக்கின்றன. எனவே, இது 'வாள் நடனம்' என்றும் அழைக்கப்படுகிறது.
கிருஷ்ணர்-ராதை தொடர்பு:
தாண்டியா நடனம், துர்கா வழிபாட்டோடு மட்டுமின்றி, பிருந்தாவனத்தில் கிருஷ்ணரும் ராதையும் ஆடிய கோபியர் நடனமாகிய ராச லீலா தொடர்புடையது.
ஆடும் முறை:
தாண்டியா நடனத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் ஜோடிகளாகவோ அல்லது பெரிய குழுக்களாகவோ பங்கேற்பார்கள்.
தாண்டியா நடனக் கலைஞர்கள் பெரும்பாலும் இரண்டு வட்டங்களை உருவாக்குவார்கள். ஒரு வட்டம் கடிகார திசையிலும், மற்றொரு வட்டம் அதற்கு எதிர் திசையிலும் நகரும்.
டிரம்ஸ் மற்றும் தபலாவின் தாளத்திற்கு ஏற்ப, குச்சிகளை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி தட்டியபடி சுழன்று சுழன்று ஆடுவார்கள். இசை மெதுவாகத் தொடங்கி, போகப் போக அதிவேகமாக மாறும்.
பாரம்பரிய ஆடைகள்:
தாண்டியா நடனத்தின்போது, ஆடுபவர்கள் அணியும் உடைகள் மிகவும் வண்ணமயமாகவும், கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும்
பெண்கள், கண்ணாடிகள் மற்றும் அழகிய எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட காக்ரா சோளி, பாந்தனி துப்பட்டா மற்றும் கனமான பாரம்பரிய நகைகளை அணிவார்கள்.
ஆண்கள், குஜராத்தின் பாரம்பரிய உடைகளான கெடியா என்னும் மேலாடை, துடித்த துப்பட்டா மற்றும் குர்தா-பைஜாமா அல்லது தோத்தி (வேஷ்டி) அணிந்து தலைப்பாகை அணிந்திருப்பார்கள்.
நவராத்திரி ஒன்பது நாட்களும் கலர் புஃல்லாக இருப்பதின் ரகசியம் கர்பாவும், தாண்டியாவும்தான். வடநாட்டில் ஒரே விழாக்கோலம்தான். நாமும் கலந்துகொண்டு பார்த்து ரசிக்கலாம்.