
கௌரி ஹப்பா, கர்நாடக மாநிலத்தில், கௌரி தேவியை கொண்டாடும் பண்டிகையாகும். கணேஷ் சதுர்த்திக்கு முதல் நாள் திருமணமான பெண்களால் கொண்டாடப் படும் ஒரு குறிப்பிடத்தக்க பண்டிகையாக கௌரி ஹப்பா உள்ளது. கௌரி ஹப்பா பண்டிகை, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய வட இந்திய மாநிலங்களில் "ஹர்தாலிகா" என்று அழைக்கப்படுகிறது.
விநாயகரின் தாயாரும், சிவனின் மனைவியுமான கௌரி, தனது பக்தர்களுக்கு தைரியத்தையும் சக்தியையும் அளிக்கும் திறனுக்காக இந்தியா முழுவதும் வணங்கப்படுகிறார். கௌரி, ஆதிசக்தி மற்றும் மகாமாயாவின் அவதாரம் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும். சிவனின் சக்தியாக உள்ள கௌரி, தாடிகே அல்லது பாத்ரா மாதத்தின் மூன்றாம் நாளில், திருமணமான பெண்கள் தன் பெற்றோர் வீட்டிற்கு வருவதைப் போல வருவதாகவும், மறுநாள் அவரை மீண்டும் கைலாயத்திற்கு அழைத்துச் செல்வதுபோல அவரது மகன் விநாயகர் கூட்டிச் செல்கிறார் எனவும் கூறப்படுகிறது.
கௌரி ஹப்பா:
கௌரி ஹப்பா நிகழ்வில், முதலில், ஒரு மண்டபத்தை வாழை மரக்கன்று, மாவிலைத் தோரணங்கள், வண்ணமயமான மலர்கள் ஆகியவைகளால் அலங்கரித்து, பின், பூமாலைகள், பருத்தியால் செய்யப்பட்ட ஆடை, மற்றும் அணிகலன்களால் கௌரி தேவி அலங்காரம் செய்யப்படுகிறார்.
கௌரி அம்மனை மகிழ்விக்க, ஸ்வர்ண கௌரி விரதம் செய்வது வழக்கம். இந்த நாளில், திருமணமான பெண்கள், குளித்து, புதிய ஆடைகளை அணிந்து, குடும்பத்திலுள்ள சிறுமிகளை அலங்கரித்த பின்னர் ஜலகௌரி அல்லது மஞ்சளால் செய்யப்பட்ட கௌரியின் அடையாளச் சிலையை 'ஸ்தாபனம்' செய்கின்றனர்.
உள்ளுர் சந்தையில் கிடைக்கும் கௌரியின் வர்ணம் பூசப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட களிமண் சிலையை வாங்கி வந்து அரிசி அல்லது கோதுமை தானியம் நிரப்பிய தட்டில் வைத்து, பூஜையை ஒரு அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்துகின்றனர். பூக்கள் மற்றும் அட்சதையால் வழிபாட்டினை மேற்கொண்ட பெண்கள், தங்கள் வலது கை மணிக்கட்டில் 'கௌரிதாரா' எனப்படும் பதினாறு முடிச்சுகள் கொண்ட புனித நூல் ஒன்றைக் கட்டிக் கொள்வார்கள். மேலும், பதினாறு முடிச்சுகளில் ஒவ்வொன்றும் சமய நடைமுறையின்போது மந்திரங்களால் வழிபடப்படுகிறது.
பாகின பிரசாதம்:
இந்நிகழ்வின்போது, பாகின பிரசாதம் எனப்படும் தாம்பூலம் வழங்கப்படுகிறது. விரதத்தின் ஒரு பகுதியாக குறைந்தது ஐந்து பேருக்கு இவை வழங்கப்படுகின்றன.
ஒவ்வொருவருக்கும், மஞ்சள், குங்குமம், வளையல்கள், கருப்பு மணிகள் ஒரு சீப்பு, ஒரு சிறிய கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள் தேங்காய், ரவிக்கை துண்டு, மற்றும் தானியங்களில் அரிசி, துவரம் பருப்பு, பச்சை பருப்பு, கோதுமை அல்லது ரவை மேலும் வெல்லம் ஒரு கனசதுர வடிவில் வெட்டப்பட்டது போன்றவை இருக்கும்.
பாகினா எனப்படும் இந்த தாம்பூலம், பாரம்பரிய பொருளான புதிய முறங்களில் வைத்து வழங்கப்படும். முறத்தின் மேற்புரம் மஞ்சளால் வரையப்பட்டிருக்கும். இவ்வாறு அனைத்து பொருட்களும் இருக்கும் ஒரு தாம்பூலம் முதலில் கௌரி தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மீதமுள்ளவை திருமணமான பெண்களுக்கு அளிக்கப்படும்.
உபரி தகவல்கள்:
கௌரி ஹப்பா பாரம்பரியம் மற்றும் சுவையான உணவுகளால் குறிக்கப்படுகிறது. இத்தகைய உணவு பிரசாதங்கள் பக்தி, நன்றியுணர்வு மற்றும் அன்பின் பிரசாதங்கள் எனக் கூறப்படுகிறது. பிரசாத வகைகள் --
கடலே உண்டே (வெல்லம் சேர்த்த கொண்டைக்கடலை லட்டுக்கள்).
சித்ரான்னா (எலுமிச்சை சாதம்)
பாயாசா (அரிசி, பால், வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் கீர்)
கோசம்பரி (பாசிப்பருப்பு சாலட்) போன்றவைகளாகும்.
கௌரி ஹப்பா விநாயகருக்கும், கௌரிக்கும் உள்ள பாசப் பிணைப்பைக் காட்டுகிறது. கௌரிதேவி தாய் வீட்டிற்கு ஒரு நாள் வருகை தருகிறார். மறுநாள், கணேஷ் சதுர்த்தியன்று, விநாயகர் அவருடன் இணைகிறார்.
கௌரி ஹப்பா, பெண்களின் வலிமை, குடும்ப நல்லிணக்கம், தாய்க்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள பிணைப்பு போன்றவைகளை கௌரவிக்கிறது.
கௌரி ஹப்பா தினத்தன்று நாமும் கௌரி தேவியை வணங்கி வரவேற்போம்.