
ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ (எ. கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.
இது நுகர்வோர் விரும்பிய பண்புகளின் தரமான தயாரிப்புகளைப் பெற உதவுகிறது மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் அவர்களின் தேவையை அதிகரிப்பதன் மூலம் புவிசார் குறியீடு பொருட்களின் உற்பத்தியாளர்களின் பொருளாதார செழுமையை ஊக்குவிக்கிறது.
அந்த வகையில், தமிழகத்தில் சேலம் சுங்கடி, காஞ்சிப்பட்டு, மதுரை சுங்குடி சீலை, தஞ்சாவூர் ஓவியம், திண்டுக்கல் பூட்டு, கோவில்பட்டி கடலைமிட்டாய், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, மதுரை மல்லி, சோழவந்தான் வெற்றிலை, மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஈரோடு மஞ்சள் என இப்படி 62 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
அந்த வகையில் தற்போது கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் விளையும் வெற்றிலைக்கு தனிமவுசு உண்டு. கும்பகோணம் வெற்றிலை காவிரி ஆற்றுப்படுகைகளில் பயிரிடப்பட்டு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் வெற்றிலைக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதே போன்று கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் தயார் செய்யப்படும் மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பூம்புகார் அருகில் உள்ள ராதாநல்லூர், திருச்சி மாவட்டம் உறையூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் கல்வெட்டுகளில், காவிரி டெல்டா பகுதியான கும்பகோணம் வெற்றிலையின் சிறப்பு குறித்து உள்ளது. மருத்துவக்குணம், மிதமான காரத்தன்மை கொண்டவை என வேளாண்துறை ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
கும்பகோணம் வெற்றிலை பல நூறு ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் இந்த வெற்றிலைக்கு கொழுந்து வெற்றிலை என்றும் அழைப்பது உண்டு.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம், வலங்கைமான், ராஜகிரி, ஆவூர், கோவிந்தகுடி ஆகிய பகுதிகளில் இந்த வெற்றிலை அதிகம் பயிரிடப்படுகிறது. வெள்ளிக்கொடி வெற்றிலை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.
கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர் சந்தை தென்மாவட்டம் மட்டுமல்ல, கேரள மாநிலத்திலும் புகழ்பெற்றது. இதனால் இந்த ஊரை மணக்கும் கிராமம் என்று அழைப்பது உண்டு. வங்ககடல் மற்றும் அரபிக்கடல் காற்று, மேற்கு தொடர்ச்சிமலை சீதோஷ்ண நிலையால், தோவாளை மலருக்கு தனி சிறப்பு உள்ளது.
வெள்ளை மற்றும் சிவப்பு அரளி, பச்சை நொச்சி, சம்பா நாறு கொண்டு பாய் வடிவில் உருவாக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபத்மநாபசுவாமி கோவிலுக்கு இங்கிருந்து தான் மாலை கட்டி வழங்கப்படுகிறது. ஒரு மாலை கட்ட ஐந்து மணி நேரமாகும்.
இந்த மாலை 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். இந்தியாவில் பூ மாலைக்கு புவிசார் குறியீடு இது தான் முதல் முறையாகும்.
இதன் மூலம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் 62 பொருட்கள் புவிசார் குறியீடு பெறப்பட்டு நாட்டில் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு முதலிடத்தில் உள்ளது.