
உலகில் இசுலாமிய சமயத்தினர் பயன்படுத்தி வரும் இசுலாமிய நாட்காட்டி ஒரு சந்திர நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டியில் பிற நாட்காட்டிகளைப் போல் 12 மாதங்கள் இருப்பினும், ஆண்டுக்கான நாட்களின் எண்ணிக்கை 354 அல்லது 355 நாட்களாகவே இருக்கிறது. இந்நாட்காட்டியை ஹிஜ்ரி நாட்காட்டி (Hijri Calendar) என்று அழைக்கின்றனர். இசுலாமிய நாட்காட்டியில் கிரிகோரியன் நாட்காட்டியை விட பத்து அல்லது பதினொன்று நாட்கள் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டேச் செல்வதால் கிரிகோரியன் நாட்காட்டியுடன் இந்நாளை ஒப்பிட்டுச் சொல்ல இயலாது.
ஹிஜ்ரி வருடப் பிறப்பு
இந்நாட்காட்டியின் முதல் மாதமான மொகரம் மாதத்தின் முதல் நாளை இசுலாம் சமயத்தினர் ஹிஜ்ரி வருடப் பிறப்பு நாளாகக் (Hijiri New Year) கொண்டாடி வருகின்றனர்.
மொகரம் நாள்
இசுலாமியர்கள் இசுலாமிய நாட்காட்டியின் முதல் மாதமான மொகரம் மாதத்தில் வரும் பத்தாம் நாளை மொகரம் நாளாகக் (Muharram Day) கொண்டாடி வருகின்றனர்.
மீலாது நபி நாள்
இசுலாமியர்கள் இசுலாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி அல்-அவ்வல் (Rabi al-awwal) மாதத்தில் வருகின்ற பன்னிரண்டாம் நாளை முகமது நபி அவர்களின் பிறந்த நாளாகக் கொண்டு மீலாது நபி நாளாகக் (Mawlid Day) கொண்டாடி வருகின்றனர்.
ஈகைத் திருநாள்
இசுலாமியர்கள் இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து ஈகைத் திருநாளாகக் (Eid al-Fitr) கொண்டாடுகின்றனர். இத்திருநாளை நோன்புப் பெருநாள், ரமலான் நாள் என்றும் அழைப்பதுண்டு.
அரபா நாள்
இசுலாமியர்கள் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல்கச்சு மாதத்தில் வருகின்ற ஒன்பதாம் நாளை அரபா நாளாகக் கொண்டாடுகின்றனர். அரபா என்பது மக்காவிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒரு பொது இடம். மெக்கா புனிதப் பயணம் செல்லும் இசுலாமியர்கள் துல்கச்சு 9-ம் நாள் காலையிலிருந்து மாலை வரை அங்கு தங்கிருப்பது கட்டாய கடமையாக இருக்கிறது.
தியாகத் திருநாள்
இசுலாமியர்கள் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல்கச்சு மாதத்தில் வருகின்ற பத்தாம் நாளை இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாகத் தியாகத் திருநாளாகக் (Eid al-adha) கொண்டாடி வருகின்றனர். இந்நாளைப் பக்ரீத் நாள் என்றும் அழைப்பதுண்டு.
கிரிகோரியன் நாட்காட்டியிலிருந்து இசுலாமியர்கள் பயன்படுத்தும் நாட்காட்டியானது, பத்து அல்லது பதினொன்று நாட்கள் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு இசுலாமியப் பண்டிகையும் கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஒவ்வொரு ஆண்டிலும், முந்தைய ஆண்டிலிருந்து பத்து அல்லது பதினொன்று நாட்களுக்கு முன்பே வந்துவிடுகிறது.