காம்பைக் கிள்ளி... சுண்ணாம்பு தடவி... வெற்றிலை போடுவதும் ஒரு கலைதான்!

health and wellness
health and wellness
Published on

பிறப்பு முதல் இறப்புவரை தமிழர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது வெற்றிலை. வெற்றிலை கொடி வகையைச் சேர்ந்த ஒரு தாவரம். விதைகளை விதைக்காமல் வெற்றிலைக் காம்பை வெட்டி பதியன் போட்டு வளர்ப்பார்கள்.

கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளான அய்யம்பேட்டை, இராஜகிரி, சுவாமிமலை, பண்டாரவாடை, ஆவூர் மற்றும் திருவையாறு பகுதிகளில் அதிக அளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வெற்றிலை பயிராகும் நிலப்பகுதியை வெற்றிலை கொடிக்கால் என்று அழைப்பர். மிதமான தட்பவெப்ப சீதோஷணம் இதற்கு அவசியம். நல்ல மண் வளமும் போதிய அளவிற்குத் தண்ணீரும் இருந்தால் வெற்றிலை சாகுபடி அமோகமாக இருக்கும்.

வெற்றிலையிலும் ஆண் பெண் வெற்றிலைகள் உண்டு. கரும்பச்சை நிறத்தில் உள்ள வெற்றிலையை ஆண் வெற்றிலை என்றும் இளம்பச்சை நிறத்தில் உள்ள வெற்றிலையை பெண் வெற்றிலை என்றும் அழைப்பர்.

இளம் வெற்றிலையை கொழுந்து வெற்றிலை என்று அழைப்பார்கள். கொழுந்து வெற்றிலையில் ஒரு மிளகை வைத்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட அஜீரணக் கோளாறுகளும் மலச்சிக்கலும் சரியாகும் என்பார்கள்.

முற்காலத்தில் வீடுகளில் பெரும்பாலோர் வெற்றிலையை உபயோகிப்பவர்களாக இருந்தார்கள். வெற்றிலையை எடுத்து இரண்டு பக்கமும் மெதுவாகத் தேய்த்து காம்பைக் கிள்ளி எறிந்து சுண்ணாம்பை எடுத்து வெற்றிலையின் முதுகில் மெல்லத் தடவி அதில் பாக்கை வைத்து மடித்து வாயில் போட்டு மென்று தின்பது என்பது ஒரு கலையாகவே காட்சியளிக்கும். தொடக்கத்தில் களிப்பாக்கை உபயோகித்தார்கள். பின்னர் தூள்பாக்கு நடைமுறைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து வாசனைப் பாக்கும் வாசனை சுண்ணாம்பும் வழக்கத்திற்கு வந்தன.

பொதுவாக கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் வெற்றிலை போடுவதை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே வைத்திருந்தார்கள். அக்காலத்தில் சாப்பிட்டு முடித்ததும் பெரியவர்கள் வெற்றிலையைப் போட்டு மென்று கொண்டே அளவளாவுவதைப் பார்க்க அற்புதமான காட்சியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
பல நூறு ஆண்டுகளாக உலக நாடுகளை ஏமாற்றும் வரலாற்றுப் பிரபலங்களின் சடலங்கள்!
health and wellness

வெற்றிலையானது கவுளி என்ற எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஒரு கவுளி என்பது நூறு எண்ணிக்கை வெற்றிலையைக் குறிக்கும். வெற்றிலையை விற்பவர்கள் ஒரு கையால் வெற்றிலையை பதமாக அள்ளி எடுப்பார்கள். ஒரு கையில் அவர்கள் எடுக்கும் அளவானது சரியாக ஒரு கவுளி வெற்றிலை இருக்கும். அனுபவத்தின் காரணமாக அதை அவர்கள் சரியாக எடுத்து விற்பனை செய்வார்கள்.

பல வீடுகளில் ஒரு நாளைக்கு ஒரு கவுளி வெற்றிலை செலவாகும். அடிக்கடி வெற்றிலை போட்டு மென்று துப்பியபடியே இருந்தவர்களும் உண்டு. பலர் இதனுடன் பன்னீர் புகையிலையைச் சேர்த்து மெல்லுவதும் உண்டு. வெற்றிலையை ஈரத்துணியில் சுற்றி வைத்தால் ஒருவாரம் வரை கெடாமல் இருக்கும்.

வெற்றிலை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் செரிமான சக்தியையும வழங்குவதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே முற்காலத்தில் பெரியவர்கள் பலரும் வெற்றிலையை உபயோகித்தவண்ணம் இருந்தார்கள்.

பற்களை இழந்த வயதானவர்கள் வெற்றிலையையும் பாக்கையும் அதற்கென வைத்திருக்கும் ஒரு சிறிய உரலில் போட்டு இடித்து அதை மெல்லுவதும் வழக்கமான ஒரு விஷயமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
மனித குலத்தையே கூண்டோடு அழிக்கப் பார்த்த கொடூரமான நோய்கள்... இதோ முழு பின்னணி!
health and wellness

கருமையான நிறத்திலும் வழக்கத்தைவிட அதிக காரத்தன்மை கொண்ட “கம்மாறு வெற்றிலை” என்ற ஒரு வெற்றிலையும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதை “கமார் வெற்றிலை” என்று பேச்சுவாக்கில் அழைப்பர். இந்த வெற்றிலை சளி மற்றும் இருமலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட காலங்கள் உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com