

ஆயக்கலைகளில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்ற ஐந்து கலைகளுக்கே மிகவும் பிரமிப்பை வழங்கும் திறன் உண்டு. வீட்டில் சிற்பக்கலை மிகவும் நுணுக்கம் வாய்ந்ததாகவும், எல்லோரும் ரசிக்கும்படியான வடிவத்தை அல்லது உருவத்தை கல், மரம், உலோகம் ஆகியவற்றில் வடிவமைப்பது எல்லாராலும் செய்ய முடிவது அல்ல. இது சாதாரண வேலையும் இல்லை. அதற்கு மிகுந்த பொறுமை மட்டும் இன்றி அற்பணிப்பும் இருக்கவேண்டும்.
பண்டைய காலத்தில் கோயில் வேலைகளை செய்வதற்காக வரும் சிற்பிகள் ஐந்து விதமான கட்டுமான பணிகள் தவிர மீதமுள்ள எந்த வேலையானாலும் தாங்கள் செய்வதாக குறிப்பிடுவார்களாம். அந்த ஐந்து கட்டுமான பணிகள் தங்கள் திறமைக்கு அப்பாற்பட்டது என்றும், அதுபோல் செய்து தர முடியாது என்றும் அவர்கள் போடும் சில ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்து போடுவார்கள். அதில் 5 கோயில்களில் உள்ள கட்டுமானங்கள் உலக அளவில் எந்த சிற்ப கலைஞர்களாலும் இன்றுவரை செதுக்கியது இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த 5 கோயில்கள் என்ன என பார்ப்போம்.
உலகமே வியந்து பார்க்கும் தமிழகத்தின் 5 வரலாற்றுத் தலங்கள்:
ஆவுடையார் கோயில் - அதிசயக்கல் கொடுங்கைகள்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் உள்ள ஆத்மநாத சுவாமி கோயிலின் மண்டபங்களைச் சுற்றியுள்ள அதிசய கல் கொடுங்கைகள் சிறப்பானதாகும். இவை பார்ப்பதற்கு மரத்தினால் செய்யப்பட்ட ஆணி அறையப்பட்டது போலக் கல்லைக் கொண்டு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மலரிதழ்போல வளைந்த அமைப்பில் ஆரம்பத்தில் தடிமனாகவும், மேலே செல்லச் செல்ல ஒரு அங்குள்ள கனத்திலும் அமைந்துள்ள இது ஒரு பிரமாண்டமான சிற்பக் கலைக்கு அதிசயமாகும்.
கூரை அமைப்பிலேயே கல்லை மலர் இதழ்போல வளைத்து சாய்வான அமைப்பில் அமைத்து இருப்பது சிற்பிகளின் அபார திறமையை காட்டுகிறது. கல்லை மரக்கட்டைகள் போலவும், ஆணி அறைந்திருப்பது போலவும், சிறிய ஓடுகள் வேய்ந்தது போலவும், சிற்பிகள் வடிவமைத்துள்ளனர். இந்த கொடுங்கைகள் ஆவுடையார்கோவிலின் கட்டிடக்கலைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கடாரம் கொண்டான் மதில் – திருவாரூர்:
கடாரம் கொண்டான் சிவன் கோவில் மதில், திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டத்தில் உள்ள கடாரம் கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ளது. இது கடாரம் மலேசியா பகுதியை வென்ற ராஜேந்திர சோழனின் நினைவாக நடாரம் கொண்டான் என்ற ஊரில் சோழர்களின் வெற்றியை பறைசாற்று வகையில் அமைந்துள்ள பழமையான கோவிலாகும்.
கடாரம் கொண்டான் சிவன் கோயில் ராஜேந்திர சோழனின் கடாரப் படையெடுப்பு வெற்றியைத் குறிக்கும் வகையில் இந்த பெயர் கடாரம் கொண்டான் என்றகிராமத்திற்கு வைக்கப்பட்டது.
கடாரங் கொண்டான் மதில் 6 - 8 அடி அகலத்துடன் சுட்ட சங்கர் கலை கொண்டு வலுவாக கட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பு இரு பெரும் மதிற் சுவர்களைக் கொண்டது. இது சோழர்களின் கோட்டை கட்டுமான திறனை வலுப்படுத்துகிறது.
கடாரத்தை (மலேசியா) வென்ற தன் நினைவாக மன்னன் ராஜேந்திர சோழன் தன் நினைவாக இந்த மதிற் சுவர்களைக் கட்டியதாக கூறப்படுகிறது.
தஞ்சை - பெரிய கோவில். கோபுரச் சிற்பங்கள்:
தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரர் கோயில் கோபுரம் 216அடி 66 மீட்டர் உயரமுடைய சோழர் கால கட்டிடக்கலை மற்றும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது மிக சிறப்பாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த யுனெஸ்கோ பாரம்பரிய சின்னத்தில் கிரானைட் கற்களால் ஆன தேவலோக சிற்பங்கள், சிவபெருமான் மற்றும் புராணக்கதைகளை விளக்கும் சிற்பங்கள் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன.
13 அடுக்குகள் கொண்ட இந்த விமானத்தின் கோபுரம் ஒவ்வொரு அடிக்கிலும், புராணப் பாத்திரங்கள், மற்றும் தேவதையின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இவை தமிழ்நாட்டுச் சிற்பக்கலையின் நுணுக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
கோபுரத்தின் உச்சியில் 80 டன் எடையுள்ள ஒரே கல்லாலான கும்பம் மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
கோபுரத்தில் அகலமான அடி வைளைய அமைப்பால் அதன் நிழல் நண்பகல் நேரத்தில் தரையில் விழாது என்பது இதன் கட்டிடக்கலை மற்றும் சிற்ப வடிவமைப்பின் சிறப்பம்சமாகும்.
இந்த சிற்பங்கள் அனைத்தும் சோழர்களின் பக்தி மற்றும் கலை ஆர்வத்திற்கு சான்றாக விளங்குகின்றன.
திருவலஞ்சுழி - பலகணி ஜன்னல்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் சுவாமி மலைக்கு அருகில் திருவலஞ்சுழி கபந்தீஸ்வரர்கோவில் அமைந்துள்ளது. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கலைப்படைப்பாகும்.
இங்கு பத்து அங்குல உயரமே கொண்ட பச்சைக்கற்பூரம் மட்டுமே சாத்தப்படும் தீண்டாத் திருமேனியாக விநாயகர் அருள்கிறார்.
இங்குள்ள கருங்கல் பலகணி ஜன்னல் 9 அடி உயரமும் 7 அடி அகலம் கொண்ட இந்த ஒற்றைக் கல் பலகணியில் 4 தூண்கள் மற்றும் 111கண்களை உடைய 49 மலர்கள், யாளிகள் அரிய கருங்கல் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஜன்னல் அமைப்பு மிக நுணுக்கமான வேலைப்பாடு களுடன் கூடிய கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இது சோழர்களின் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்தக் கருங்கல் பலகணி வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்லாமல், அதில் 4 தூண்கள் வேதங்களாகவும், 111 கண்கள் மனித உடலின் நாடிகளாகவும், 49 மலர்கள் மருந்துகள் என ஆழமான தத்துவங்களை உள்ளடக்கி உள்ளது.
சோழர்காலத்திய அரிய கல்வெட்டு செய்திகள் மற்றும் சிற்பங்கள் ஏராளமாக காணப்படுகின்றன.
திருவீழிமிழலை - வவ்வால் மண்டப சிற்பம்:
கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் இருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவீழிமிழலை. இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர், இறைவி பெயர் சுந்தர குசாம்பிகை. கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
கோவில் அம்மன் சன்னிதியை சுற்றிவிட்டு வெளியே வரும்போது ராஜகோபுரத்தினை அடுத்து மிகவும் புகழ் பெற்ற வெளவால் நெத்தி மண்டபம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டு அதிசயங்களில் ஒன்றாகவும் கட்டடக் கலைக்குப் புகழ் பெற்ற மண்டபமாகும். இம்மண்டபம் 175 அடி நீளம், 75 அடி அகலம் கொண்டு உள்ளதாகும். நடுப்பகுதி வெளவால் நெற்றி அமைப்பிலும் உள்ளது. மண்டபத்தின் நடுப்பகுதியில் தூண்கள் கிடையாது. குறுக்கே எவ்வித பிடிமானமும் கிடையாது. நேரே கையை வளைத்து குவித்தாற் போல் ஒவ்வொரு கல்லாக ஒட்ட வைத்து கூரை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
வெளவால் தொங்க முடியாத வகையில் இருப்பதால், வெளவால் நெத்தி மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது. மண்டபத்தின் உள்ளே சென்று பார்க்கும்போது அதன் பிரமிப்பை உணரமுடியும்.
முன்னோர்கள் கட்டிடக்கலையில் பெற்றிருந்த சிறப்பையும், தொழில் நுட்பத் திறனையும் இந்த மண்டபம் நமக்கு பறை சாற்றுகிறது. இது தமிழகத்தின் அதிசயம் என இத் துறை வல்லுனர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. முற்கால சிற்பிகள் தங்களால் மீண்டும் இதை உருவாக்க முடியாதவை என ஒப்புக்கொண்ட கோவில் இதுவாகும்.