

மராட்டியப் பேரரசின் ராணுவப் பலத்திற்கு முதன்மை அரணாக விளங்கியது அவர்களின் கோட்டை அமைப்பாகும். எதிரிகளின் எத்தகைய நவீனத் தாக்குதலையும் முறியடிக்கும் வகையில், இயற்கையான நிலப்பரப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இந்தக் கோட்டைகளை அவர்கள் வடிவமைத்திருந்தனர். இந்தியாவின் வீர வரலாற்றையும், நம் முன்னோர்களின் பொறியியல் அறிவாற்றலையும் பறைசாற்றும் வரலாற்றுச் சின்னங்களாகும்
கிரி-துர்க் மலைக் கோட்டைகள்;
மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயரமான, செங்குத்தான மற்றும் கூர்மையான பாறை முனைகளின் மீது ராஜ்காட், ஷிவ்னேரி மற்றும் சிங்ககாட் கோட்டைகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றின் அதிசயம் என்னவென்றால், கோட்டையைச் சுற்றிலும் செயற்கையாகப் பெரும் மதில்களை எழுப்புவதற்குப் பதிலாக, இயற்கையாக அமைந்த செங்குத்தான மலைச்சரிவுகளையே கோட்டைச் சுவர்களாகப் பயன்படுத்திக் கொண்டனர். எதிரிப்படைகள் கனரகப் பீரங்கிகளுடனோ அல்லது குதிரைப் படைகளுடனோ இந்த மலைகளில் ஏறுவது முற்றிலும் சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது. மேலும், இக்கோட்டைகள் உயரமான இடத்தில் அமைந் திருந்ததால், பல கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் வரும் எதிரிகளின் நடமாட்டத்தை மராட்டிய வீரர்களால் மிக எளிதாகக் கண்காணித்து, முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க முடிந்தது.
ஜல-துர்க் கடல் கோட்டைகள்:
அரபிக்கடலின் சுழன்றடிக்கும் அலைகளுக்கு நடுவே, கடற்கரையிலிருந்து சற்றுத் தள்ளியிருக்கும் தீவுகளில் சிந்துதுர்க், முருத்-ஜஞ்சிரா மற்றும் பத்மதுர்க் கோட்டைகள் மிகப்பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டன.
பிரிட்டிஷார், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் சித்தி வம்சத்தினர் போன்ற வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்கும் மிகச் சிறந்த அரணாக இவை செயல்பட்டன. இக்கோட்டைகளின் அஸ்திவாரம் கடல் அலைகளின் இடைவிடாத சீற்றத்தைத் தாங்கி நிற்கும் பொருட்டு, டன் கணக்கில் உருகிய ஈயத்தை ஊற்றிப் பாறைகளை ஒன்றோடொன்று பிணைத்துக் கட்டியுள்ளனர். மராட்டியர்களின் பலமிக்க கடற்படைக்கு இக்கோட்டைகளே முதன்மைப் பாதுகாப்பாகவும், தளங்களாகவும் விளங்கின.
வன-துர்க் காட்டுக் கோட்டைகள்;
மனித நடமாட்டமற்ற, அடர்ந்த காடுகளுக்குள்ளும், ஆழமான மலைப் பள்ளத்தாக்குகளுக்குள்ளும் பிரதாப்காட் மற்றும் வாசுதா கோட்டைகள் கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இக்கோட்டைகள் சுற்றியிருக்கும் அடர்ந்த காடுகளின் இயற்கை அரணோடு இணைந்து, எதிரிகளின் கண்களுக்குத் தங்களை முழுமையாக மறைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. மராட்டியர்களின் பிரசித்தி பெற்ற ‘கெரில்லா’ போர்முறைக்கு (மறைந்திருந்து திடீரெனத் தாக்குதல் நடத்துதல்) இக்கோட்டைகளே சொர்க்கபுரியாகத் திகழ்ந்தன. காடுகளின் வழியே பாதைகள் தெரியாமல் உள்ளே நுழையும் எதிரிப் படைகளை, மராட்டிய வீரர்கள் தங்களுக்குச் சாதகமான சூழலில் மிக எளிதாக வீழ்த்தினர்.
புய்-கோட் தரைக்கோட்டைகள்:
மலைகளோ, கடலோ இல்லாத தக்காணப் பீடபூமியின் சமவெளிப் பகுதிகளில், மிக அகலமான நிலப்பரப்பில் அகமதுநகர் மற்றும் சோலாப்பூர் கோட்டைகள அமைக்கப்பட்டிருந்தன. முக்கியமான வணிகப் பாதைகளையும், நகரங்களையும், மக்களின் வாழ்விடங்களையும் பாதுகாப்பதே இக்கோட்டைகளின் முதன்மை நோக்கமாகும். மலைக்கோட்டைகளைப் போல இவற்றுக்கு இயற்கை அரண் இல்லாததால், கோட்டையைச் சுற்றி ஆழமான மற்றும் அகலமான அகழிகளை வெட்டி, அவற்றில் முதலைகளை வளர்த்தனர். எதிரிகள் அகழியைத் தாண்டி உள்ளே வராதவாறு தடுத்து, நகரத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் மையங்களாக இவை செயல்பட்டன.
சத்ரபதி சிவாஜியின் அசாத்திய பங்களிப்பு:
மராட்டியக் கோட்டைகளுக்கு இன்று நாம் பார்க்கும் 'ராணுவ நிலப்பரப்பு' என்ற உலகளாவிய வடிவத்தைத் தந்தவர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மட்டுமே. சிவாஜி மகாராஜ் தனது வாழ்நாளில் 111 புதிய கோட்டைகளைக் கட்டினார்; அத்தோடு, பிற வம்சங்களிடமிருந்து கைப்பற்றிய 250-க்கும் மேற்பட்ட பழைய கோட்டைகளைப் புனரமைத்துப் பிரம்மாண்டமாக மாற்றினார்.
அவர் கட்டியவை: மராட்டியப் பேரரசின் தலைநகரான ராய்காட், மிகச்சிறந்த காட்டுக் கோட்டையான பிரதாப்காட் மற்றும் கடலுக்கு நடுவே கட்டப்பட்ட பொறியியல் அதிசயமான சிந்துதுர்க் மற்றும் பத்மதுர்க் ஆகிய கோட்டைகள் முற்றிலும் சிவாஜியால் புதிதாக உருவாக்கப்பட்டவை ஆகும்.
இக்கோட்டைகள் இந்தியாவின் வீர வரலாற்றையும் நம் முன்னோர்களின் பொறியியல் அறிவாற்றலையும் பறைசாற்றும் உன்னதமான வரலாற்றுச் சின்னங்கள். இன்று அவை இந்தியாவின் மிகச்சிறந்த சாகசச் சுற்றுலாத் தலங்களாக மாறியிருப்பது பெருமைக்குரிய விஷயம்.