

ஆங்கில எழுத்துக்களுக்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறே இருக்கிறது. மேலும் அதிலுள்ள ஒவ்வொரு எழுத்தின் வளர்ச்சிக்கும் பின்னணியில் ஒரு கதையே இருக்கிறது. இந்த ஆங்கில மொழியானது உலக அளவில் பொதுவாகவும் பரவலாகவும் பேசப்படும் ஒரு மொழியாகும். உண்மையில், ஆங்கிலத்தின் வளர்ச்சிக் காலங்களில் பல்வேறு மொழிகள் புழக்கத்திற்கு வந்ததால், அதில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இந்த கட்டுரையில் ஆங்கில எழுத்துக்களாகிய A to Z எப்படி உருவாகியது மற்றும் அதன் பின்னணியிலிருக்கும் வரலாற்றை பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.
தொடக்ககால எழுத்து முறையானது சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கியிருக்கலாம் என கருதப் படுகிறது.. பல அறிஞர்களின் கூற்றுப்படி, கி.மு. 1800 மற்றும் 1900-க்கு இடையில் எகிப்தில்தான் எழுத்து முறை வளர்ச்சி அடைந்தது. அதன் தோற்றம், அவ்வளவாக அறியப்படாத ஒரு புரோட்டோ-சினாய்டிக் (புரோட்டோ-கானானிய) எழுத்து வடிவத்தை கொண்டிருந்தது.
பிறகு, சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு, ஃபீனீஷியர்கள் முந்தைய அடித்தளங்களை அடிப்படையாக வைத்து ஒரு எழுத்துமுறையை உருவாக்கினார்கள். இது தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, ஐபீரிய தீபகற்பம் மற்றும் லெவண்ட் உள்ளிட்ட மத்திய தரைக்கடல் பகுதிகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அந்த எழுத்துமுறை, 22 எழுத்துக்களைக் கொண்டிருந்தது. 22 எழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு, கிரேக்கர்கள் ஃபீனீஷியன் எழுத்துக்களில் உயிரெழுத்துக்களைச் சேர்த்து ஒரு கலவையை உருவாக்கினார்கள். இந்தக் கலவையே ஆரம்பகால உண்மையான எழுத்துக்களாகக் கருதப்பட்டது. இதை லத்தீனியர்கள் (ரோமானியர்கள்) கைப்பற்றி, S மற்றும் F போன்ற சில எத்ருஸ்கன் எழுத்துக்களுடன் இணைத்தார்கள்.
கிட்டத்தட்ட மூன்றாம் நூற்றாண்டில், பண்டைய லத்தீன் எழுத்து முறையிலிருந்து G, J, V/U, W, Y மற்றும் Z ஆகிய எழுத்துக்கள் நீக்கப்பட்டன. ரோமானியப் பேரரசு உலகின் சில பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த சமயத்தில், லத்தீன் வடிவத்திலிருந்து பெறப்பட்ட ரோமானிய எழுத்துக்களை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். இருப்பினும் J, U/V மற்றும் W ஆகிய எழுத்துக்கள் அப்போதும் நீக்கப்பட்டிருந்தன.
ரோமானியப் பேரரசு பிரிட்டனை அடைந்தபோது, அவர்கள் தங்களுடைய லத்தீன் மொழியையும் அங்கே பரப்பினார்கள். அக்காலத்தில் பிரிட்டன், பழைய ஆங்கிலத்தைத் தங்கள் மொழியாகப் பயன்படுத்திய ஜெர்மானியப் பழங்குடியினரான ஆங்கிலோ-சாக்சன்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அக்காலத்தில் பழைய ஆங்கிலம், ஃபுதோர்க் என்ற ஒரு பழமையான எழுத்து முறையைப் பயன்படுத்தியது. அது ரூனிக் எழுத்துமுறை என்றும் அழைக்கப்பட்டது.
பின்னர், லத்தீன் எழுத்துக்களும் ஃபுதோர்க்கின் ரூனிக் எழுத்துக்களும் இணைந்ததன் விளைவாக நவீன ஆங்கில எழுத்துக்கள் உருவாயின. ரூனிக் எழுத்துக்களிலிருந்து சேர்க்கப்பட்ட சில சொற்கள், 'th' ஒலியைக் கொண்ட 'thorn' மற்றும் 'w' ஒலியை எழுப்பிய 'wynn' ஆகும். ஏனென்றால் லத்தீன் எழுத்துக்களில் 'w' என்ற எழுத்து இல்லை.
இடைக்காலத்தில், பிரிட்டனில் இருந்த மக்கள் பழைய ரூன்களைப் பயன்படுத்துவதை நிறுத்தியபோது, 'thorn' என்ற எழுத்துக்குப் பதிலாக 'th' பயன்படுத்தப்பட்டது. மேலும், ரூனிக் 'wynn' என்பது 'uu' என மாறி, அது பின்னர் 'w' ஆக உருவெடுத்தது. பின்னர் அதே காலகட்டத்தில், 'j' மற்றும் 'u' ஆகிய எழுத்துக்கள் சேர்க்கப்பட்டு, எழுத்துக்களின் எண்ணிக்கை 26 ஆக மாறியது.