

இந்திய வரலாற்றின் பக்கங்களில் பெண் அரசிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு பெண், ஆணாகவே வளர்ந்து, ஆணாகவே முடிசூட்டி, ஒரு பெரும் பேரரசை ஆண்ட கதை மிக அபூர்வம். தென்னிந்தியாவின் வீர வரலாற்றில் அழியாத இடம்பிடித்தவர் காகதீயப் பேரரசி ருத்ரமாதேவி.
மறைக்கப்பட்ட அடையாளம்:
கி.பி. 13-ஆம் நூற்றாண்டில், இன்றைய தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பகுதிகளை உள்ளடக்கிய காகதீயப் பேரரசை கணபதி தேவர் ஆண்டு வந்தார். அவருக்கு ஆண் வாரிசு இல்லை. அக்காலத்து மரபுப்படி பெண் வாரிசு அரியணை ஏறுவதில் பல சிக்கல்கள் இருந்தன. எனவே, தனது மகள் ருத்ரமாதேவியை உலகிற்கு ஒரு 'ஆண்' மகனாகவே அறிமுகப்படுத்தினார்.
அவருக்கு 'ருத்ர தேவன்' என்று பெயரிடப்பட்டது. வாள்வீச்சு, வில் வித்தை, குதிரை ஏற்றம் என அனைத்துப் போர் கலைகளையும் ஒரு இளவரசனுக்குரிய மிடுக்கோடு அவர் கற்றார். பல ஆண்டுகள் வரை, அவர் ஒரு பெண் என்பது அந்த நாட்டு மக்களுக்கோ, ஏன்... உடன் இருந்த அமைச்சர்களுக்கோ கூடத் தெரியாத மர்மமாகவே இருந்தது.
அரியணை ஏறுதலும் எதிர்ப்புகளும்:
தந்தையின் மறைவுக்குப் பிறகு, கி.பி. 1262-இல் ருத்ரமாதேவி ஆட்சியைப் பொறுப்பேற்றார். ஒரு பெண் தங்களை ஆளுவதா என அண்டை நாட்டு அரசர்களான யாதவர்களும், சோழர்களும் படையெடுத்து வந்தனர். சொந்த நாட்டுச் சிற்றரசர்களே அவருக்கு எதிராகக் கலகம் செய்தனர்.
ஆனால், போர்க்களத்தில் 'ருத்ர தேவனாக' அவர் காட்டிய விஸ்வரூபம் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. 'ருத்ரமாதேவி ஒரு பெண் மட்டுமல்ல, அவர் ஒரு மகா வீரன்' என்பதை உலகம் உணர்ந்த தருணம் அது.
நிர்வாகத் திறமையும் 'கோட்டை' ரகசியமும்:
ருத்ரமாதேவி வெறும் போர்க்கள வீராங்கனை மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த நிர்வாகியும் கூட. விவசாயத்திற்காக ஏரிகளை வெட்டுவதிலும், நீர்ப்பாசன முறைகளை மேம்படுத்துவதிலும் அதிகக் கவனம் செலுத்தினார்.
வாரங்கல் கோட்டை: வாரங்கல்லின் புகழ்பெற்ற கற்கோட்டையை வலுப்படுத்திய பெருமை இவரையே சாரும். இதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றும் கட்டடக்கலைக்குச் சான்றாக உள்ளன.
வீர மரணம்:
தன் வாழ்நாள் முழுவதும் போர்க்களத்திலேயே கழித்த இந்த வீரமங்கை, தனது 80-வது வயதில் ஒரு போரின் போதே வீரமரணம் அடைந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அம்பாதேவன் என்ற சிற்றரசனின் கலகத்தை அடக்கச் சென்றபோது அவர் தியாகம் செய்த உயிர், இந்திய வரலாற்றில் பெண்களின் வலிமைக்கு ஒரு கலங்கரை விளக்கமாக மாறியது.
மார்க்கோ போலோவை வியக்க வைத்த மகாராணியின் ஆட்சி:
புகழ்பெற்ற வெனிஸ் நாட்டுப் பயணி மார்க்கோ போலோ, ருத்ரமாதேவியின் ஆட்சிக்காலத்தில் மோட்டுப்பள்ளித் துறைமுகத்திற்கு வருகை தந்தார். அவர் தனது குறிப்புகளில், இந்த ராணி மிகவும் அறிவார்ந்தவர், நீதி நெறி மிக்கவர். ஒரு ஆணால் கூடச் செய்ய முடியாத அளவிற்குத் திறமையாகத் தனது நாட்டைப் பாதுகாத்து வருகிறார்’ என்று வியந்து எழுதியுள்ளார்.
பெண்கள் ஆண்களுக்கு நிகராகச் சுதந்திரமாக வாழ்ந்ததையும், அந்த நாட்டு மக்கள் தங்கள் ராணியின் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பையும் கண்டு அவர் ஆச்சரியப்பட்டார்.
ஆண்கள் மட்டுமே நாட்டை ஆள முடியும் என்ற பிம்பத்தை உடைத்து, ‘திறமைக்கு பாலினம் தடையல்ல’ என்பதை 800 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்தவர் ருத்ரமாதேவி. இன்று நாம் பேசும் 'பெண் சுதந்திரம்' மற்றும் 'தலைமைப் பண்பிற்கு' முன்னோடியாகத் திகழ்ந்த இந்த காகதீய இளவரசியின் கதை, என்றென்றும் உத்வேகம் அளிக்கக்கூடியது.