

பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை முதன்முறையாக தங்களது புத்தாண்டு தினத்தில் அறிமுகப்படுத்தியவர்கள் சீனர்கள் தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பே மூங்கில் குச்சியில் வெடிமருந்தை செலுத்தி வெடித்தனர். தீய சக்திகளை விரட்டவே பட்டாசுகள் வெடிக்கச்செய்தனர். லிடியான் என்ற சீனத்துறவி தான் இக்கலையை அறிமுகம் செய்தவர்.
பண்டைய காலத்தில் சீனா மற்றும் இந்தியாவில் மட்டும் தான் வெடி செய்து அதை வெடித்து மகிழ்ந்து வந்தனர். அதை உலகம் முழுவதும் பரவ உதவியவர் மார்க்கோ போலோ என்ற கடல் மாலுமி. 'மாசூன்' என்ற விஞ்ஞானி தான் வெடி மருந்தை முதன் முதலாக 1700ம் ஆண்டில் விஞ்ஞானத்திற்கு பயன்படுத்தினார். பட்டாசு, வெடி செய்யும் கலைக்கு 'பைரோ டெக்னிக்' என்று பெயர். இது கிரேக்க மொழியான puro(நெருப்பு) மற்றும் tekline (கலை) என்பதிலிருந்து வந்தது.
1706-ம்ஆண்டு நவீன பட்டாசுகள் செய்யும் முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர் அமேதி பிரென்சுவா பிரெசியர் என்ற பிரெஞ்சு பொறியாளர். 1830-ம் ஆண்டு வண்ணமயமான பட்டாசுகளை இத்தாலியர்கள் உலகிற்கு அறிமுகப்படுத்தினார்கள். மிகப்பெரிய பட்டாசு வெடி கொண்டாட்டத்தை 1879-ல் லண்டன் கிறிஸ்டல் அரண்மனை அருகில் முதன்முதலாக நடத்திக்காட்டியவர் சார்லஸ் தாமஸ் பிராக்.
2006-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் பிளைமவுத் பல்கலைக்கழக பேராசிரியர் ராய் லாரி. இவர் ஒரே நேரத்தில் 55 ஆயிரம் ராக்கெட்களை இணைத்து வெடிக்கச்செய்தார். இதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்தார். ராய் 55 ஆயிரம் ராக்கெட்களை வெடிக்கச்செய்த அன்று அந்நேரத்தில் பிளைமவுத் நகரமே ஒளி வெள்ளத்தில் மிதந்தது. இவரே 1997-ம் ஆண்டு சானொல் தீவில் ஒரே நேரத்தில் 39 ஆயிரம் ராக்கெட்களை வெடிக்கச்செய்தார்.
2014-ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு துபாய் கடற்கரையில் உள்ள பர்ரே கலிபீ ஹோட்டலில் பட்டாசு வெடித்து புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 5 லட்சம் வெடிகளை 9 கிலோமீட்டர் நீளத்துக்கு உருவாக்கி இருந்தார்கள். அது வெடித்து முடிய 6 நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொண்டது.
இது தான் உலகிலேயே மிகப்பெரிய பட்டாசு வெடிப்பு என்று கின்னஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த வெடியை அமெரிக்காவின் குருசி கம்பெனி உருவாக்கித் தந்தது.
அதற்காக 100 கம்ப்யூட்டர்களையும், 200 தொழில் நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்தியது. இந்த பட்டாசு வெடிப்புக்கு ஆன செலவு 6 மில்லியன் டாலர்கள்.
சிவகாசியைச் சேர்ந்த அய்யநாடார் மற்றும் சன்முக நாடார் ஆகியோரால் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் கம்பி மத்தாப்பு தயாரிக்க தொடங்கப்பட்ட பட்டாசு தொழில் படிப்படியாக வளர்ந்து தற்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பட்டாசு தொழில் செய்யும் நகரமாக மாறியுள்ளது சிவகாசி. 1080க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் முறையான அனுமதி பெற்று 8 லட்சம் தொழிலாளர்கள் மூலம் பட்டாசுகளை தயாரித்து வருகிறார்கள். வருடம் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரம் கோடிக்கு மதிப்பிலான பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் 5 மத்தாப்பு குச்சிகளை தயாரித்தார்கள். தற்போது குழந்தை மற்றும் முதியோர்களை மகிழ்விக்க 75 வகைகளில் தயாரித்து வருகின்றனர். அதேபோல் 10 வகையான கம்பி மத்தாப்புகளை தயாரித்தவர்கள் தற்போது 150 ரகங்களில் தயாரித்து விற்பனை செய்கின்றனர். தற்போது 75 செ.மீ உயரத்தில் கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் உருவங்களை கொண்ட கம்பி மத்தாப்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. குழந்தைகள் இதனை கொளுத்தி மகிழ்வதுடன், எரிந்தவுடன் அதிலுள்ள உருவங்களை சேகரித்து பின்னர் விளையாடலாம்.
மரங்களை நடும் உலகின் முதல் பட்டாசு!:1945-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 84 ஆண்டுகளாக இயங்கி வரும் வடிவேல் பைரோடெக்ஸ், உலகின் புரட்சிகரமான கண்டுபிடிப்பான 'பசுமை பட்டாசு' வகையை சேர்ந்த 'சீட் ஸ்டார்' அறிமுகத்தை 04 அக்டோபர் 2025 அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் பட்டாசு வெடித்து கொண்டாடுவது மட்டுமல்லாது, கொண்டாட்டங்களுக்குப் பிறகு அவை தாவர விதைகளாகவும் மாறுகிறது. பற்றவைத்தவுடன், விதைகள் காற்றில் பாதுகாப்பாக செலுத்தப்படும் அல்லது வரையறுக்கப்பட்ட சுற்றளவில் சிதறடிக்கப்படும்.
வெடிகளில் உள்ள மக்கும் ஓடுகள் மற்றும் குழாய்கள் தயாரிக்கப்பட்ட கிராஃப்ட் பேப்பருடன் இணைந்து மாசுபாட்டை குறைத்து விதைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்தை வழங்குகின்றன. புங்கன் , வேம்பு, புளி, மூங்கில், பப்பாளி, எலுமிச்சை, சவுக்கு, தேக்கு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய முப்பது உள்நாட்டு விதை வகைகள் 'சீட் ஸ்டாரு'க்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. உகந்த சூழ்நிலையில், இந்த விதைகளில் குறைந்தது 50% வெற்றிகரமாக முளைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.