கச்சினாப் பொம்மைகள் (Hopi Katsina Figures) என்பவை அமெரிக்க இலவ மரத்தின் வேரிலிருந்து செய்யப்படும் மரபு வழியிலான பொம்மைகளாகும். வட அமெரிக்காவிலுள்ள அரிசோனாவைச் சேர்ந்த பழங்குடி மக்களான ஹோபி சமூகத்தினர், இறந்து போன தங்கள் மூதாதையர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காகச் செய்த பொம்மைகள்தான் இந்தக் கச்சினா பொம்மைகள். இந்தக் கச்சினாப் பொம்மைகளின் வழியாக, மேல் உலகத்திலிருக்கும் முன்னோர்களிடம் பேசி மழையையும், நல்ல அறுவடையையும் வரமாகப் பெறுவதற்காக இந்தப் பொம்மைகள் உருவாக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நடுவில் ஒரு சடங்கின் மூலமாக, இந்தக் கச்சினாப் பொம்மைகள் கிராமத்திலுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றன. அதைப் பெற்றுச் செல்லும் குழந்தைகள், தங்கள் வீட்டின் சுவர்களில் அவற்றை தொங்க விடுகின்றன. இந்தப் பொம்மைகளில் மான், கரடி, பசு போன்ற விலங்குப் பொம்மைகளும் உண்டு.
ஒவ்வொரு கச்சினாப் பொம்மையின் உருவம், நிறம், வடிவம் ஆகியவை ஹோபி சமூக மக்களின் சமயம், பழக்க வழக்கங்கள், வரலாறு, வாழ்க்கை முறையைச் சொல்வதாக அமைந்திருக்கின்றன.
கச்சினாப் பொம்மையின் கண்களுக்குக் கீழே இரண்டு கோடுகள் வரையப்பட்டிருந்தால் அது வீரன் பொம்மை என்று பொருள்.
ஒரு தலைகீழ் "V" என்பது சில கட்சினா அதிகாரிகளைக் குறிக்கிறது.
பாலுணர்விலான சின்னங்கள் கருவுறுதலைக் குறிக்கின்றன.
கச்சினா உருவங்களில் உள்ள சில நிறங்கள் குறிப்பிடத்தக்க திசையினைப் பொருளாகக் கொண்டுள்ளன:
மஞ்சள் = வடக்கு அல்லது வடமேற்கு
நீலம் - பச்சை = மேற்கு அல்லது தென்மேற்கு
சிவப்பு = தெற்கு அல்லது தென்கிழக்கு
வெள்ளை = கிழக்கு அல்லது வடகிழக்கு
அனைத்து வண்ணங்களும் ஒன்றாக = ஜெனித் (சொர்க்கம்) மற்றும் அதற்கு மேல்
கருப்பு = நாதிர் (பாதாள உலகம்) அல்லது கீழே
கச்சினா உருவங்களில் ஆண் வடிவத்திற்குக் கீழ்க்காணும் ஏதாவதொரு உடையமைப்பு இருக்கும்.
வெள்ளை ஊசிக்கால், பூவேலைப்பாடு பட்டைத் துணி, இடுப்புப் பட்டை, நரித்தோல் இருக்கும். சட்டை இல்லாமலிருக்கும்.
வெள்ளைச் சட்டை மற்றும் ஊசிக்கால்
ஊசிக்கால் மற்றும் சடங்கு அங்கி
வெள்ளை மனிதனின் சூட்டாடை
வெல்வெட் சட்டை, வெள்ளைக் கால்சட்டை, சிவப்பு காலுறை
இடுப்புக் கச்சையிலிருந்து தொங்கும் நரித்தோல்
கச்சினா உருவங்களில் பெண் வடிவத்திற்குக் கீழ்க்காணும் ஏதாவதொரு உடையமைப்பு இருக்கும்.
ஒரு ஆடை மற்றும் சால்வையாக அணிந்திருக்கும் சடங்கு அங்கி
மந்தா ஆடை
கழுகு இறகுப் பாவாடை
கருப்புக் கம்பளி ஆடை, சிவப்பு இடுப்புக் கச்சை, சிவப்பு மற்றும் நீலப் பட்டைகள் கொண்ட சால்வை.
18 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கச்சினாப் பொம்மைகள் மூலம்தான் இவை வெளியுலகுக்கு அறிமுகமாகின. அக்காலத்திய கச்சினாப் பொம்மைகள் அமெரிக்க இலவ மரத்தின் வேரிலிருந்து செதுக்கி, மிக எளிய வடிவமைப்பில், தாவரங்களில் இருந்து செய்யப்பட்ட, இயற்கையான குறைந்த அளவு வண்ணங்கள் பூசி உருவாக்கப்பட்டன.
1910 முதல் 1930 வரை செய்யப்பட்ட கச்சினாப் பொம்மைகள் அலங்கார வேலைப்பாடுகளுடன், அந்தக் கால வாழ்க்கையைக் காட்டுவதாக இருந்தன. அதற்குப் பிறகு செய்யப்பட்ட கச்சினாப் பொம்மைகள் ஆயுதங்களைக் கொண்டிருந்தன. கை, கால்களும் முழுமையாக வடிவமைக்கப்பட்டன. தலைகளில் அபூர்வப் பறவைகளின் சிறகுகளும் அலங்காரமாகச் சூட்டப்பட்டன.
இந்த மரபு வழி வடிவங்களுக்குக் கூடுதலாக, மினியேச்சர் கட்சினா உருவம் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஹோப்பி பெண்களால் உருவாக்கப்பட்ட இவ்வகை பொம்மைகள் வணிகத்திற்கானவைகளாக இருக்கின்றன. இவை மரபு வழியிலான கட்சினாப் பொம்மைகளுக்கு இணையானதாகக் கருதப்படுவதில்லை.