
விருந்தோம்பல் என்பது விருந்தினர்களை உபசரித்து அன்புடன் வரவேற்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம் ஒருவரையொருவர் நேசிக்கும் பண்பாகும். தமிழ் பண்பாட்டில் தலையாய இல்லற அறங்களில் விருந்தோம்பல் என்பது ஒன்றாக கருதப்படுகிறது. விருந்தினரை முதன்மையாகக் கருதி அவர்களுக்கு உணவளித்த பின்னரே தாம் உண்பது தமிழர்களின் மரபாகும். மனித நேயத்தையும், நட்பையும் வளர்க்கும் ஒரு உன்னதமான பண்பாக விருந்தோம்பல் கருதப்படுகிறது.
தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல்:
தமிழர்கள் விருந்தோம்பலைத் தங்களின் வாழ்வின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகக் கருதினர். சங்ககாலம் முதலே விருந்தோம்பல் தமிழர் வாழ்வில் சிறப்பிடம் பெறுவதை இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. விருந்தினர்களை உபசரிப்பது இல்லறக் கடமையாக மட்டுமல்லாமல், மனித உறவுகளைப் பேணும் ஒரு சிறந்த அறமாகவும் போற்றப்படுகிறது.
விருந்தோம்பலின் முக்கிய பண்புகள்:
a) வரவேற்பு மற்றும் அன்பான உபசரிப்பு:
யாராக இருந்தாலும் நம்மிடம் வரும் விருந்தினரை மகிழ்ச்சியுடனும் இன்முகத்துடனும் வரவேற்பது முக்கியமான பண்பாகும். விருந்தினர்களை முகம் மலர, அகமகிழ்வுடன் வரவேற்பது, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவது, இனிய சொற்களை பேசுவது போன்றவை விருந்தோம்பலின் முக்கிய பண்பாகும். விருந்தினர்களை உபசரிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. விருந்தோம்பல் என்பது வெறும் உணவு அளிப்பது மட்டுமல்லாமல், மனிதர்களுக்கு இடையேயான அன்பையும் மனித நேயத்தையும் வளர்க்கும் ஒரு சிறந்த பண்பாடாகும்.
b) பண்பாட்டின் அடையாளம்:
விருந்தோம்பல் என்பது தமிழர்களின் தனித்துவமான பண்பாடாகும். தலைமுறை தலைமுறையாக இந்த பண்பாடு தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று, மனதார உபசரிப்பது இல்லறக் கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உறவினர்களாக இருந்தாலும், அன்னியர்களாக இருந்தாலும் அவர்களை அன்போடு வரவேற்று உபசரிப்பது என்பது தமிழர்களின் சிறந்த பண்பாடாகும்.
c) சமூக உறவுகளின் அடிப்படை:
விருந்தோம்பல் என்பது மனித உறவுகளை பலப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும். இது விருந்தினர்களை உபசரிப்பதன் மூலம் சமூகத்தில் ஒரு நல்லுறவை உருவாக்குகிறது. இது அன்பு, ஈகை, மனித நேயம் போன்ற உயரிய பண்புகளை உள்ளடக்கியது. குடும்ப உறவுகளின் மேம்பாட்டிற்கும் சமூக நல்லிணத்திற்கும் வழிவகுக்கிறது. தலைமுறை தலைமுறையாக இந்த கலாச்சாரம் பேணப்பட்டு, தமிழர் பண்பாட்டின் அடையாளமாக திகழ்கின்றது.
3) சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் விருந்தோம்பல்:
தமிழ் இலக்கியங்களான நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை போன்ற பல இலக்கிய நூல்களில் விருந்தோம்பலின் சிறப்பு வலியுறுத்தப் பட்டுள்ளது. வள்ளுவர் விருந்தோம்பலை சிறப்பித்து தனி அதிகாரத்தையே படைத்துள்ளார். திருக்குறளில் விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் விருந்தோம்பல் பற்றிய பல கருத்துக்கள் உள்ளன. 'மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விரிந்து' என்ற திருக்குறள் முகத்தை மாறுபட்டு வைத்தாலே விருந்தினர் மனம் வருந்துவர் என்பதால் விருந்தினர்களை அன்போடு உபசரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அனிச்சம் எனப்படும் பூ, முகர்ந்தவுடன் வாடி விடக் கூடியது. அதுபோல் சற்று முகம்கோணி வரவேற்றாலே விருந்தினர் வாடி விடுவர் என்பது இந்தக் குறளின் பொருளாகும்.
4) விருந்தோம்பல் அன்றும் இன்றும்:
அந்நாட்களில் புதியதாக வரும் யாரையும் விருந்தினராக வரவேற்று, அவர்களுக்கு உணவும், தங்குவதற்கு இடமும் வழங்கி உபசரித்தனர். ஆனால் விருந்தோம்பல் என்ற பண்பாடு தமிழர் வாழ்வில் இன்று வரை இருந்தாலும் அதன் வெளிப்பாடு மாறியுள்ளது. இன்று புதிய அறிமுகம் இல்லாதவர்களை விருந்தினர்களாக ஏற்பது குறைந்துள்ளது. பெரும்பாலும் உற்றார் உறவினர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் வாழ்த்துக்களையும், செய்திகளையும் தெரிவிப்பதே விருந்தோம்பலாக மாறி வருகிறது. நேரில் சந்தித்து பேசுவதை காட்டிலும் குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகள் மூலம் உறவுகளை பேணுவது அதிகரித்துள்ளது.
விருந்தோம்பல் என்பது வெறும் உபசரிப்பு மட்டுமல்லாமல், தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த உயரிய பண்பாடாகும். இது சமூக நல்லிணக்கத்திற்கும், தனிமனித மேன்மைக்கும் அடிப்படையாக அமைகிறது. இந்த உயரிய பண்பை நாமும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்று தமிழினத்தின் பெருமையை நிலை நாட்ட வேண்டும்.