
இறைவன் படைப்பில்தான் எத்தனை எத்தனை விநோதங்கள், எத்தனை ஏற்ற இறக்கங்கள், நீ, நான் என்ற போராட்டங்கள், உறவுகளில் எவ்வளவு நெருக்கம். ‘பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம்’ என்ற நிலைப்பாடுகளோடு கூடியது வாழ்க்கையல்ல. கூட்டுக் குடும்ப வாழ்க்கைதான் சிறப்பான ஒன்று என வாழ்ந்த காலம் பொற்காலம்தான். எந்த இடத்தில் தொலைத்தோம் அதை. அந்த வாழ்க்கை இனி கோடி ருபாய் கொடுத்தாலும் கிடைக்காதே! அந்த வாழ்க்கை கசந்து போய்விட்டதோ? ஆனால், இப்போது வாழ்ந்து வருகிற தனிக்குடித்தன வாழ்க்கை என்ன இனிக்கிறதா?!
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பற்றுதல், பாசம், நேசம், மரியாதை, கணவன், மனைவி, அன்பு, சகோதர, சகோதரிகளின் பலம், பாசம், அரவணைப்பு, அனைவருக்குமான ஏற்புடைய நாகரிகம், வாஞ்சை, ஒற்றுமை, கணவன், மனைவி புாிதல், ஒருவரை ஒருவர் நேசித்தல், பொியோா் சொல் கேட்டல், பாட்டி தரும் கஷாயம், தீபாவளி மருந்து, அதையும் விட தந்தையின் கண்டிப்பு, தாயின் அரவணைப்பு, பொியப்பா, சித்தப்பா என ஒரு கூட்டம், எத்தனை எத்தனை அன்பு நெஞ்சங்களின் கூட்டுக்கலவை. தற்போது நினைத்தாலும் அது பெருமிதமாகவே உள்ளது!
அதுபோன்ற கூட்டுக் குடும்பத்தை பெண்ணாகிய ஒரு தாய்தானே தாங்கிப்பிடித்தாள். அவள் சாதம் பிசைந்து அனைவர் கையிலும் உருண்டை உருண்டையாய் உருட்டி கொடுப்பாளே, அந்தப் பாசத்திற்கு விலை உண்டா? அது எங்கே தொலைந்து போனது? தொலைந்து போகவில்லை, நாம்தான் தொலைத்து விட்டோம். அப்படிப்பட்ட சூழல் இனி வருமா என நினைத்து ஏங்கும்போது நமக்கு வயதாகி விட்டதே!
அனைவரும் இப்போது அவரவர் வேலை, குடும்பம் என பிாிந்து விட்டாா்கள். இனி அடுத்த ஜன்மம் என இருந்தால் கூட்டுக் குடும்பம் அமையாதா என ஏங்கும் காலமாக ஆகிவிட்டதே காரணம்! அந்தக் காலம் ஒரு பொற்காலம்தான். அது இனி வராது. மனமாச்சர்யங்களால் அவரவர் சுயநலன்களுக்காக, வேலை, சம்பாத்தியம் போன்ற இனங்களால் தொலைந்து போனதே மிச்சம்.
இப்போது நவநாகரிக மோகம், தனிக்குடும்பம், நான், என் மனைவி, என் பிள்ளைகள் போதும், எனக்கான வாழ்க்கையை நான் வாழ்ந்து காட்டுவேன் என்பது போன்ற அனுபவங்களே ஏராளம். பாஸ்ட்புட் உணவு, ஆரோக்கியம் மலிவு, சொந்த பந்தங்கள் செல்போனில் மட்டும்.
அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலமாய் வேக வேகமாய் காதில் செல்லுடன், கையில் வெந்ததும் வேகாததுமாய் மதிய உணவு அப்படி ஒரு ஓட்டம், ஆளுக்கு ஒரு வீட்டு சாவி, வடக்குத் திசையில் ஒரு டூவீலர், மேற்கு திசையில் ஒரு டூவீலர், மாலை வரும்போதே ரெடிமேட் இட்லி மாவு, காலையில் போட்டு சூடாக்கிய பரோட்டா, சால்னா, வந்ததும் வராததுமாய் கருத்து வேறுபாடால் தகராறு, மனக்கசப்பால் பட்டினி, கருத்து வேறுபாடு.
ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகவில்லை, தற்சமயம் குழந்தை வேண்டாம், தனித்தனி படுக்கை, தாறுமாறான பேச்சுகள், இனி மேலும் ஒத்துவராது, பிாிவுதான் தீா்வு. இத்தனைக்கும் மேலாய் குடியிருப்பில் பக்கத்து வீட்டில் இருப்பவர் யாரென்று தொியாத வாழ்க்கை. இது ஒரு நரகமான வாழ்க்கைதானே! இந்த அநாகரிகங்கள் கூட்டுக் குடும்பத்தில் இருந்தது உண்டா? மனிதர்களே தற்கால இளைய சமுதாயங்களே மாறுங்கள்.
தொலைந்துபோன உறவுகளைத் தேடுங்கள். அதில் மனைவியின் ஒத்துழைப்பும் இருப்பதே நல்லது. தொலைந்துபோன உறவுகளின் வாாிசுகளைத் தேடுங்கள். விழா நாட்களிலாவது ஒன்று கூடுங்கள். அதுவே உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சோ்த்து வைக்கும் அளவிட முடியாத சொத்தாகும்.