எழுத்தோலைகளில் எத்தனை வகைகள் இருக்கின்றன?

Olai suvadi
Olai suvadi

பாறைகளில் எழுதி வந்த தமிழர்கள் பிற்காலத்தில் பனையோலையைப் பயன்படுத்தி அதில் எழுதத் தொடங்கினர். எழுதுதாள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் வரை பனையோலையில் எழுதுகின்ற வழக்கம் ஆசிய நாடுகள் அனைத்திலும் இருந்தது. பனையோலைகளில் எழுதப்பட்ட அனைத்தும் எழுத்தோலைகள் எனப்படுகின்றன. நூலாக எழுதப்பட்ட ஓலைகள் அனைத்தும் கட்டித் தொகுக்கப்பட்டன. இவற்றைப் பொத்தகம் என்றும், பொத்தகக் கவளி என்றும் சொல்வர்.

ழுதுவதற்கான எழுத்தோலை தயாரிக்கும் பணி ஒன்றும் எளிதானதல்ல. இளம் பதமுள்ள பனையோலையைப் பொறுக்கி எடுத்து வந்து, அதனை அளவுக்குத் தக்கவாறு நறுக்கி, குழந்தைக்கு நகம் வெட்டுவது போல் நளினமாக அதன் நரம்பைக் களைந்து, நிழலில் உலர்த்தி, பனியில் பதப்படுத்தி, இளக்கமுறுமாறு இளஞ்சூட்டு வெந்நீரில் மூழ்க வைத்து எடுத்து, பின்னர் அதனைப் பளபளப்பான சங்கு அல்லது கல்லைக் கையில் வைத்துக் கொண்டு ஓலையை அழுத்தி அழுத்தித் தேய்த்து அழகுபடுத்த வேண்டும். அதன் பிறகு, ஓலைகளை அடுக்கிக் கட்டி முறுக்காமல் இருக்கச் செய்ய வேண்டும் இதனை, ‘ஓலை பாடம் செய்தல்’ என்பார்கள்.

அதன் பின்னர், அந்த ஓலையினை மஞ்சள் நீரிலோ, அரிசிக் கஞ்சியிலோ ஊற வைத்து, பிறகு சுவடிக் கட்டில் இரண்டு இடத்தில் சுள்ளாணியால் துளை போட்டு, ஒரு முனையில் ஒரு துளையில் கயிறு கோர்த்து ஒலையைப் பிரித்துப் புரட்டுமாறு தளர்வாகக் கட்டிக் கொள்வர். ஒவ்வொரு ஓலை மீதும் மஞ்சளையும் வேப்பெண்ணெயையும் கலந்து பூசி, ஓலைகளைப் பூச்சிகள் அரித்து விடாதபடி பக்குவப்படுத்துவர். பின்னர் அந்த ஓலையில், கோவை இலை, ஊமத்தை இலை அகியவற்றின் சாறுகளைப் பூசி, பின்னர் மாவிலை, அருகம்புல் ஆகியவற்றை எரித்த கரியை மையாகத் தடவி வைக்க வேண்டும். அதன் பிறகுதான், அந்த ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுத வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் பாட்டெழுதும் போது குறிப்பிட்ட அளவு (விரற்கடை அளவு) எழுத்தோலையைப் பயன்படுத்த வேண்டுமென்பதைக் கூட பாட்டியல் நூல்கள் வரையறை செய்துள்ளன. இதன்படி நான்மறையாளர்க்கு 24 விரற்றானமும், அரசருக்கு 20 விரற்றானமும், வணிகருக்கு 18 விரற்றானமும், வேளாளர்க்கு 12 விரற்றானமும் இருக்க வேண்டும் என்று கல்லாடனார் வெண்பா ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தோலையானது, அமைப்பு மற்றும் செய்தி போன்றவைகளுக்கேற்ப வகைப்படுத்தப்பட்டன.

அமைப்பு ஓலைகளில்,

1. திருமணம் மற்றும் இறப்புச் செய்திகளுக்கான ஓலையினை 'நீட்டோலை' என்றனர்.

2. ஓலைச் செய்தியைப் படியெடுத்து வைத்துக் கொள்ளும் முறை அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது. இந்த ஓலைகளை 'மூல ஓலை' என அழைத்தனர்.

3. ஓலை ஆவணங்கள் நாட்டுப்புற மகளிர் அணிந்து வந்த சுருள் வடிவமான காதோலை போல் சுருட்டி வைத்துப் பாதுகாக்கப்பட்டன. இவை 'சுருள் ஓலைகள்' எனப்பட்டன.

4. மூளியும் பிளப்பும் இல்லாத ஓலை 'குற்றமற்ற ஓலை' எனப்பட்டது.

எழுத்தோலைகளில் உள்ள செய்திகளைக் கொண்டு, அவை செய்தி ஓலைகள் என்றழைக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்:
ஒடிசாவின் Bonda இன மக்கள்… வியக்க வைக்கும் சுவாரசிய தகவல்கள்!
Olai suvadi

செய்தி ஓலைகளில்,

1. தமிழகத்திலுள்ள கோவில் செய்திகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓலை 'நாளோலை' எனப்பட்டது.

2. அரசனது ஆணைகள் எழுதப்பட்ட ஓலை 'திருமந்திர ஓலை' எனப்பட்டது. இதை எழுதுவதற்காக அரசவைகளில் ஓலை நாயகம் என்பவர் இருந்தார். அரசனது ஆணை தாங்கிய எனப் பொருள்படும் 'கோனோலை', 'சோழகோன் ஓலை' போன்ற சொற்களும் செப்பேடுகளில் இடம் பெற்றிருக்கின்றன.

3. திருமணச் செய்தியைத் தெரிவிக்கும் ஓலை, 'மணவினை ஓலை' எனப்பட்டது. இதன் மூலம் திருமணச் செய்தி உற்றார் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.

4. இறப்புச் செய்திகளைக் கொண்டு சென்ற ஓலை 'சாவோலை' எனப்பட்டன.

மிழ்நாட்டில் சென்னையிலுள்ள சென்னைப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடி நூலகம், உ. வே. சா. நூல் நிலையம், பிரம்ம ஞான சபை நூலகம், தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம், ஆசியவியல் ஆய்வு நிறுவனம் ஆகிய அமைப்பு / நிறுவனங்களிலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று, காஞ்சிபுரத்தில் காமகோடி பீடம் ஸ்ரீ சங்கராசாரியார் மடத்திலும், பாண்டிச்சேரியில் பிரென்ச் இந்திய கலைக்கழகத்திலும், விருத்தாசலத்தில் குமார தேவ மடாலயத்திலும், திருச்சி, துறையூரிலுள்ள குமார தேவ மடாலயத்திலும், தஞ்சாவூரில் சரசுவதி மகால் நூலகம் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும், மயிலாடுதுறையில் தருமபுர ஆதீன மடாலயத்திலும், திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்திலும், திருவாவடுதுறை ஆதீனத்திலும், மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், கோயம்புத்தூரில் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடத்திலும், ஈரோட்டில் கலைமகள் கல்வி நிலையத்திலும் ஓலைச்சுவடிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com