
'ம்யூசியம்' என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில், அருங்காட்சியகம் அல்லது பொருட்காட்சிசாலை என்று சொல்கிறோம். ஆனால் 'ம்யூசியம்' என்ற பெயர் எப்படி ஆங்கில அகராதியில் வந்தது? இந்தச் சொல்லின் வேர்ச் சொல் என்ன? என்ற கேள்விக்கு, பண்டைய கிரேக்க புராணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
பண்டைய காலத்தில் கிரேக்க நாட்டினர், பல கடவுள்களை வழிபட்டு வந்தனர். கிரேக்க புராணங்களின் படி பற்பல ஆண் கடவுள்கள், மற்றும் பெண் கடவுள்கள் உண்டு. பன்னிரண்டு முதன்மைக் கடவுள்கள் தவிர, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் கடவுளாக நிறைய தேவதைகள் உண்டு. இதில் சில தேவதைகளை 'மியூசஸ்' என்று குறிப்பிட்டு வந்தனர்.
ஆதியில் ஏற்பட்ட கிரேக்க கலாச்சாரம், மூன்று மியூசஸ்களைக் கொண்டிருந்தது. அவர்கள் படிப்பின் அதிபதியான 'மெலட்', ஞாபகத்திறன் அளிக்கும் 'ம்நெமே', இன்னிசைக்கான கடவுள் 'ஔடே'ஆனால், இந்த மூன்று தேவதைகளும் மனிதனின் கல்வி சார்ந்த, அறிவு சார்ந்த கடவுளாகப் பூஜிக்கப்பட்டனர். இந்த மூவரும் பண்டைய ம்யூசஸ் என்றும், மனிதனின் பேச்சுத் திறன், ஞாபக சக்தி, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்கும், படைப்புக் கலைகளின் கடவுளர்களாகவும் கருதப்பட்டனர்.
இதற்குப் பின்னால் வந்த கிரேக்க கலாச்சாரத்தில், கலைகள் செழித்து வளர, கலைப் படைப்பின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு அதிபதி வேண்டும் என்ற எண்ணம் உருவானது. ஆகவே, ஒன்பது கலைகளுக்கு ஒன்பது ம்யூசஸ் (தேவதைகள்) உருவாயினர். இந்த ஒன்பது ம்யூசஸ், தெய்வங்களின் தலைவனான ஜீயஸ், மற்றும் ஞாபகசக்தியின் அதிபதியான ம்நெமே என்ற தேவதைக்கும் பிறந்தவர்கள். இந்த ஒன்பது ம்யூசஸ்களை வழி நடத்துபவர். இசை முதல் மருத்துவம் வரை பல பிரிவுகளுக்கு கடவுளான அபோல்லோ.
ஒரு கலைப் பணியை ஆரம்பிக்கும் போதும், தொடரும் போதும், அந்தக் கலைக்குத் தலைவியான ம்யூசஸ் அருள் பெற்று ஆரம்பித்தால், அந்த தேவதை பணி நெடுக கூடவே இருந்து அது சிறக்க வழி புரிவாள் என்பது நம்பிக்கை. இலியட், ஒடிஸி என்று இரண்டு காவியத்தை உலகுக்கு அளித்த ஹோமர், அவற்றில் ம்யூசஸை வணங்கி காவியத்தை ஆரம்பிக்கிறார். இந்த காவியங்களை ஹோமர் மூலமாக ம்யூசஸ் எழுதியதாகவும் ஒரு சாரார் நம்புகின்றனர். ஒன்பது ம்யூசஸ் பற்றித் தெரிந்து கொள்வோம்.
1.கல்லியோப் : அழகான குரலைக் கொண்டவர் என்று பொருள். காவியக் கவிதை, சொற்பொழிவு ஆகியவற்றின் தேவதை இந்த ம்யூஸ். ஒன்பது தேவதைகளில் மூத்தவர். தங்கத்தினாலான கிரீடம் தலையை அலங்கரிக்க, மாலைகளுடன், அழகான இளம் பெண்ணாக இவர் சித்தரிக்கப்படுகிறார். ஒரு கையில் எக்காளம் என்ற காற்றிசைக் கருவி, மறு கையில் காகிதத்தோல் சுருள் ஆகியவற்றுடன் இருப்பார். அரசர்களுடன் சரிசமமாக நடக்கும் தகுதி கொண்ட ம்யூஸ்.
2.கிளியோ : “புகழ அல்லது பாட” என்று பொருள். வரலாற்று ஆசிரியர்களுக்கான் ம்யூஸ். இடது கையில் எக்காளம், வலது கையில் புத்தகமுமாக காட்சியளிக்கிறாள். இந்த தேவதைக்கு பூகோளத்துடன் சம்பந்தம் உண்டு. உலகின் எல்லாப் பகுதிகளிலும், எல்லாக் காலங்களிலும் நடைபெற்ற சரித்திர சம்பவங்களில் தொடர்புடைய தேவதை.
3.யூட்டர்பே : “மிகவும் இனிமையானவர்”. இசைக்கான ம்யூஸ். தலையில் பூக்கள் நிறைந்த கீரிடத்துடனும், கையில் புல்லாங்குழலுடனும் சித்தரிக்கப்படுகிறார். சிலவற்றில் வயலின், கிதார், ட்ரம்ப் போன்ற இசைக்கருவிகளுடன் காணப்படுகிறார். இவருடைய மகன் ரெசோ, ட்ராய் நகரில் நடந்த போரில் வீர சுவர்க்கம் அடைந்ததாக ஹோமரின் இலியட் கூறுகிறது.
4.டெர்பிசிகோர் : “நடனத்தில் மகிழ்ச்சி”. லேசான கவிதை, மற்றும் நடனத்திற்கான தேவதை. இந்த ம்யூஸ் மகிழ்ச்சியான தோற்றம், எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் தன்மை, மெல்லிய இளம் பெண்ணாக சித்தரிக்கப் படுகிறாள். தலையில் மலர்களாலான கிரீடம், கையில் யாழ் ஆகியவற்றுடன் இருப்பார். ஹோமரின் ஒடிசியில், கடலில் செல்லும் கப்பல்களைச் செலுத்தும் மாலுமிகளை, இனிமையான பாடலால மயக்கி, கடலில் குதிக்க வைக்கும் சைரன்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இந்த சைரன்களின் தாய் இந்த தேவதை.
5.எராடோ: காதல் கவிதைகளின் ம்யூஸ். தலையில் ரோஜா மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கிரீடம், கையில் சிறிய அளவிலான சிதார் போன்ற இசைக் கருவி, காலடியில் இரண்டு புறாக்கள் என்று சித்தரிக்கப்படுகிறார். சில சமயங்களில் இவருடன் ஈரோஸ் கடவுளும் இருப்பார்.
6.மெல்போமீன் : நாடகத்திற்கான இரண்டு ம்யூஸ்களில் ஒருவர். இவர் துன்பவியல் நாடக தேவதை. தலையில் கிரீடத்துடன், அதிக அளவிலான உடையுடன், கையில் துன்பவியல் முகத்திரையுடன் சித்தரிக்கப்படுகிறார். புராணங்களின் படி கடல்கன்னிகளின் தாயார். ஒரு பெண்ணிற்குத் தேவையான பணம், அழகு, ஆண் துணை என்று எல்லாமிருந்தும், சோகத்தில் மூழ்கியிருக்கும் தன்மை. வாழ்வில் விரும்பியவை யாவற்றையும் அடைந்தாலும், அடி மனதில் மகிழ்ச்சியில்லை. இது துன்பவியல் நாடகங்களின் அடிப்படை.
7.தாலியா : மகிழ்ச்சியான, செழிப்பான ம்யூஸ். இன்பவியல் நாடகத்திற்கான தேவதை. எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும், கையில் சிரிப்பு முகத்திரையுடன், கேலி செய்யும் முகபாவம் கொண்ட இளம் பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார்.
8.பாலிஹிம்னியா : “பல பாடல்களில் ஒன்று”. புனிதப் பாடல், மற்றும் வாக்கு வன்மைக்கான ம்யூஸ். மனிதனின் இறை நம்பிக்கையை பாடலாக மாற்ற உதவுகிறாள். இலக்கணம், ஜியாமெட்ரி உருவாக்கிய தேவதை. வெள்ளை நிற உடையில், முகத்திரை அணிந்து, ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் பெண்ணாகச் சித்தரிக்கப்படுகிறார். கோவிலுக்குச் செல்லும் பெண்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்பதற்கு பாலிஹிம்னியா சிறந்த உதாரணம்.
9.யுரேனியா : வானசாஸ்திரம், ஜோதிடம், கணிதம் ஆகியவற்றிற்கான ம்யூஸ். ஒன்பது தேவதைகளில் இளையவள். நடசத்திர கிரீடம், நீலநிற உடை, பூகோளம், கணித சம்பந்தமான கருவிகள் என்று சித்தரிக்கப்படுகிறார். இந்த தேவதையின் பெயர் கொண்டு ஒரு கிரகம் யுரேனஸ் என்ற பெயரிடப்பட்டது.
கிரேக்க புராணங்களில், இந்த ஒன்பது ம்யூஸ்கள் வசிக்கும் இடம் 'ம்யூசியான்' என்று அழைக்கப்பட்டது. இதனால், கலைப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகங்கள், ஆங்கிலத்தில் 'ம்யூசியம்' என்று பெயரிடப்பட்டன.