இந்தியாவின் அண்டை நாடாக, இமயமலையை ஒட்டி, இந்திய மாநிலங்களான சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களில் சுமார் 699 கிலோ மீட்டர் இந்திய எல்லையை பகிர்ந்துகொள்ளும் ‘பூமியின் சொர்க்கம்’ என்று அழைக்கப்படும் பூட்டான் நாட்டில் அனைத்தும் இலவசம். அது பற்றி இந்தப் பதிவில் அறிந்துகொள்வோம்.
பாரம்பரிய கலாசாரத்தையும், சுற்றுச்சூழலையும் கட்டிக்காப்பதில் பூட்டான் அரசு உறுதியாக உள்ளது. மேற்கத்திய கலாசாரம் அந்த நாட்டில் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த 1999ம் ஆண்டு வரை தொலைக்காட்சிக்கு கூட அனுமதி கொடுக்கப்படாமல் இருந்துள்ளது.
பூட்டான் அரசு அந்நாட்டின் குடிமக்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, மின்சாரம் என அனைத்தையுமே இலவசமாகக் கொடுக்கிறது. வீடு இல்லாத யாவருக்கும் நிலத்தையும் அரசே வழங்கி விடுகிறது. இந்த சலுகைகளைப் பெற அந்நாட்டு மக்கள் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் பூர்த்தி செய்ய வேண்டும்.
அனைத்தும் இலவசம்: அளவில் மிகச்சிறிய நாடாக இருந்தாலும், பூட்டான் நாடு தங்கள் நாட்டு மக்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்தையும் இலவசமாகக் கொடுப்பதோடு, உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பல சலுகைகளை இந்த நாடு தங்கள் குடிமக்களுக்கு வழங்கியுள்ளது.
வீடு இல்லாதவர்களே கிடையாது: பூட்டானில் வீடற்றவர்களும் கிடையாது, பிச்சைக்காரர்களும் கிடையாது. யாருக்காவது சொந்தமாக வீடு இல்லாமல் இருந்தால் அந்த நாட்டு மன்னரே இடத்தையும் கொடுத்து, வீட்டையும் கட்டி கொடுத்து விடுவார். கல்வி, மருத்துவம் என ஒரு பைசா செலவில்லாமல் அனைத்தையும் செய்துவிடலாம். இதற்கும் மேலாக, வெளிநாட்டிற்கு உயர் சிகிச்சைக்கு சென்றால் அதற்கான கட்டணத்தை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது.
திகட்டத் திகட்ட சலுகைகள்: பூட்டான் நாட்டை சுற்றிலும் நிலப்பரப்புதான் எல்லையாக இருப்பதால் அந்த நாட்டிற்கு என்று கடற்படையும் கிடையாது. விமானப்படையும் இல்லை. ராணுவம் உள்ளது என்றாலும் இந்தியாவிடம் இருந்து ஆயுதம் மற்றும் பயிற்சியையும் எடுத்துக் கொள்கிறது. பூட்டானின் ஊரக பகுதிகளில் மின்சாரமும் இலவசம்தான். விவசாயிகளுக்கும் உரம், விதைகள் ஆகியவற்றை அரசே இலவசமாகக் கொடுத்து விடுகிறது.
ஒரே ஒரு கண்டிஷன்: இவ்வளவு சலுகைகளையும் மக்களுக்கு வாரி வழங்கும் பூட்டான் அரசு அந்நாட்டு மக்களுக்கு ஒரு பெரிய நிபந்தனை மட்டும் விதித்துள்ளது. அது பூட்டான் மக்கள் யாரும் வெளிநாட்டினரை திருமணம் செய்ய அனுமதி கிடையாது என்பதுதான் அந்த நிபந்தனை. இந்த நிபந்தனை மன்னர் குடும்பத்திற்கும், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
பூட்டானில் பெரும்பாலானோர் புத்த மதத்தை கடைபிடிப்பதால் நாட்டின் பாரம்பரிய சடங்குகளுடன் நடைபெறும் திருமணமே அங்கீகரிக்கப்படும். திருமணத்திற்குப் பிறகு பூட்டானில் மனைவியின் வீட்டிற்கு கணவர் சென்று விடுவார். போதுமான அளவு அவர் பணம் சம்பாதித்த பிறகே தனியாக வசிக்கச் செல்வார்கள்.
நாட்டுக் குடிமக்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் இலவசமாகவே பூட்டான் அரசு கொடுத்தாலும், தங்களுடைய பாரம்பரியங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால் இன்றும் பூமியின் சொர்க்கமாக பூட்டான் உள்ளது.