
அரைஞாண் கயிறு என்பது பிறந்த ஆண், பெண் உள்ளிட்ட குழந்தைகள் முதல் வயதான ஆண்கள் வரை அணியக்கூடிய ஒரு ஆபரணம் எனலாம். இது சிவப்பு மற்றும் கருப்பு கயிறுகளாலும் வெள்ளி தங்கம் போன்ற உலோகங்களாலும் இடுப்பினில் கட்டப்படுகிறது.
பெண் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயது வரையிலும் (சுமார் ஐந்து வயது) ஆண்களுக்கு வயது கட்டுப்பாடு இல்லாமலும் இந்த அரைஞாண் கயிறு அணியும் வழக்கம் நமது பாரம்பரிய முறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. விஞ்ஞானம் மாறினாலும் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் என்னும் பெரும்பாலான வீடுகளில் இருக்கிறது. இந்த நவீன யுகத்திலும் இதை நாங்கள் அணிய வேண்டுமா ? என்ற கேள்விகளும் உண்டு. இதற்கான பதிலை இந்த பதிவில் காணலாம்.
ஆதிகால மனிதன் தனது முதல் அடிப்படை ஆடையான இலை தழை மற்றும் துணி கோவணத்தைக் கட்டுவதற்கு ஆதாரமாக இருந்தது அரைஞாண் கயிறுதான்.
கோவணத்திற்கு பயன்படுத்திய அரைஞாண் கால மாற்றத்தில் மனிதர்கள் வேட்டைக்கு செல்லும் போது அதற்கான கருவிகளை கட்டி எடுத்துச் செல்ல உதவியது. தற்கால ஆண்களுக்கு தங்கள் வேட்டியை இழுத்துக் கட்டி இடுப்பில் நிற்க உதவும் ஒன்றாகவும் உள்ளது அரைஞாண் கயிறு.
இப்படி காலம் காலமாக நமது பயன்பாடுகளில் இருக்கும் இந்தக் கயிறு ஆரோக்கியத்திற்கும் உதவுவதாக மருத்துவம் கூறுகிறது.
அந்தக் காலத்தில் ஆண்களின் உடல் உழைப்பு அதிகம். மரம் ஏறுவது முதல் வேட்டையாடுவது, ஏர் உழவு, கிணற்றில் குதிப்பது என பலவித பணிகள் இருந்தது. இப்படிப்பட்ட சிரமமான விதைப்பைகள் மேலேறும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அதன் பாதுகாப்பு மற்றும் வயிற்றின் உள்உறுப்புகள் மேல் ஏறாமல் தடுக்கவும் அரைஞாண்கயிறு உதவுகிறது. அத்துடன் சிறுநீர்ப்பை, மலப்பைகளுக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கும் என்கிறது சித்த மருத்துவம்.
மேலும் அரைஞாண் கயிற்றை கட்டவில்லையென்றால் விரைவாதம், அண்டவாதம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது என்பதால் இன்றைய இளைஞர்கள் இதனைக் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. ஆண்களின் ஆரோக்கியம் காக்கும் இந்த அரைஞாண் கயிறு அணிவது வாழ்வியலோடு தொடர்புடைய ஓர் ஏற்பாடாகவே பார்க்கப்படுகிறது.
இந்த பழக்கத்தை ஏன் பெண்கள் பின்பற்றவேண்டியதில்லை தெரியுமா?
எளிதான பணிகளை செய்யும் காரணத்தினால் குடல் கீழறக்கம் பாதிப்பு பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால் பெண்கள் இதை அணியத் தேவையில்லை என்று சொல்லப்படுகிறது.
குழந்தைகளுக்கு இந்தக் கயிறுகளை கட்டுவதால் எதிர்மறை சக்திகளின் பாதிப்பு நேராது என்ற நம்பிக்கையும் உண்டு.
பெரும்பாலும் கருப்பு மற்றும் சிவப்புக் கயிறுகளை அணிவது பழக்கம். சூடு தணிக்கும் வெள்ளி மற்றும் தங்க கயிறுகளை அணிவது வசதியானவர்கள் தங்கள் அந்தஸ்து காட்டும் விஷயமாக தற்போது பிரபலமாகியுள்ளது.
அக்காலத்தில் மக்கள் பல இனமாக பிரிந்து வாழ்ந்து வந்ததால் தங்கள் அடையாளத்துக்காக கறுப்பு, சிவப்பு போன்ற பல நிறங்களில் கயிறுகளை அணிந்தனர். எந்த நிறமும் இல்லாமல் வெள்ளை நூலிலேயே அணியும் வழக்கமும் அக்காலத்தில் இருந்ததாக குறிப்புகள் உள்ளன.
பொதுவாக கறுப்பு வெப்பத்தை உறிஞ்சி உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் வண்ணம் என்பதால் சிவப்பு நிற அரைஞாண் கயிறு கட்டுவது சிறந்தது.
நமது முன்னோர்கள் வகுத்த வழக்கத்திலும் நிச்சயமாக ஒரு அர்த்தம் இருக்கும். அதே போல இந்த அரைஞாண் கயிறு அணிவதிலும் நன்மையே பெறலாம்.