
இந்தியாவில் சிறியவர் முதல் பெரியவர், அனைத்து தரப்பினரும் தங்கள் சாதனைக்காக கௌரவிக்க படுகிறார்கள். இந்தியாவில் தேசிய விருது முதல் மாநில அரசு விருது வரை வழங்கப்படுகிறது. இதில் Civilian Awards என்ற பெயரில் கொடுக்கப்படும் விருதுகள் எவை? அவை எதற்காக கொடுக்கப்படுகின்றன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சிவிலியன் அவார்ட்ஸான (Civilian Awards) பாரத ரத்னா, பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ போன்ற இந்தியாவின் மதிப்புமிக்க விருதுகள் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பு அளித்தவர்களை கௌரவிக்கும் விதமாக குடியரசு தினத்தன்று நாட்டின் ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றன.
என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன?
தகுதி (Eligibility): பாரத ரத்னா மற்றும் பத்ம விருதுகள் அனைத்து இந்திய குடிமக்களுக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றும் இந்தியாவிற்கு என குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. வயது, தொழில் அல்லது பாலினம் போன்ற எந்த அடிப்படையிலும் வேறுபாடுகள் எதுவும் இதில் பார்ப்பதில்லை.
தகுதியான பரிந்துரைகள் (Nominations): விருது பெற தகுதியானவர்கள் பற்றிய விண்ணப்பங்கள் சில அரசு அதிகாரிகள், மாநில மற்றும் மத்திய அமைச்சகங்கள், முன்னாள் விருது பெற்றவர்கள், தகுதியான சில நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரிடமிருந்தும் பெறப்படும். இந்த மொத்த தகவல்களையும் பெறுவது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மே 1 முதல் செப்டம்பர் 15 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆய்வு மற்றும் சரிபார்ப்பு (Verification): பரிந்துரைக்கப்பட்டவர்களின் விவரத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக அனைத்து பரிந்துரைகளும் சில தனிப்பட்ட விசாரணை குழுக்கள் (investigating agencies) மூலம் முழுமையான சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன.
யார் யாரெல்லாம் பரிந்துரைக்க படுகிறார்கள்?
வாழ்நாள் சாதனைகள்: பொது சேவையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அல்லது ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்களை வாழ்நாள் சாதனையாளர்களாக கருதி அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்: ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், சமூக தாக்கத்தை ஏற்படுத்தி சில பங்களிப்புகளை தருபவர்கள் 'Excellence Plus' என்ற அடிப்படையில் பரிந்துரைக்க படுகிறார்கள்.
பொது சேவை: சமூகத்திற்கு (Society) அவர்கள் நேரடியாக செய்யாவிட்டாலும் மறைமுகமாக தேசிய நலனுக்காக பங்களிப்பவர்கள் முன்னுரிமை அளிக்கப்பட்டு பரிந்துரைக்க படுகிறார்கள்.
யார் இறுதி தேர்வு செய்வார்கள்?
பத்ம விருதுகள் குழு: பிரதமரால் அமைக்கப்பட்ட இந்த குழு அமைச்சரவை செயலாளரின் தலைமையில், உள்துறை செயலாளர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நான்கு முதல் ஆறு பிரபலங்களை உள்ளடக்கியது.
ஒப்புதல் தர வேண்டிய அதிகாரிகள்: விருது பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பின் வெளியிடப்படுகிறது.
எனவே, மேலே குறிப்பிட்டது போல் இந்தியாவில் சிவில் விருதுகளுக்கு (civilian awards) தகுதியானவர்கள் கடுமையான தேர்வு செயல்முறைக்கு பின்பே அனைவருக்கும் முன் பாராட்டப்படுகிறார்கள்.
ஆக, நாட்டிற்காக ஏதோ ஒரு வழியில் நன்மையோ, பெருமையோ தேடி கொடுப்பவர்கள், தங்களின் அயராத உழைப்பு மற்றும் ஈடுபாட்டிற்காக தவறாமல் கௌரவிக்கபடுவார்கள் என்பது இந்த விருதுகள் மூலம் அடுத்த வரும் இளம் தலைமுறைகளுக்கு உணர்த்தப்படுகிறது.