இனி வரும் காலத்தில் பூம் பூம் மாடுகளைப் பார்ப்பது அரிதாகிவிடும்!
கோவில் விழாக்கள், மக்கள் கூடுமிடங்களுக்குச் சென்று அல்லது வீடு வீடாகச் சென்று, அலங்கரிக்கப்பட்ட மாட்டிடம் குறி சொல்பவர் கேள்வி கேட்பதும், அக்கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என்பது போல மாடு தலை ஆட்டுவதைக் கொண்டு குறி பலன்களைச் சொல்லி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்பவர்களை பூம் பூம் மாட்டுக்காரர் (Boom Boom Mattukarar) என்றும், வித்தை காட்டிக் குறி சொல்ல அலங்கரிக்கப்படும் மாட்டை, பூம்பூம் மாடு (Boom Boom Ox) என்றும் சொல்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட பூம் பூம் மாடு, பூம் பூம் மாட்டுக்காரர் கேட்கும் கேள்விகளுக்குத் தலையை மட்டுமே ஆட்டுகிறது.
தமிழ்நாட்டில், எந்தவொரு செயல்பாட்டுக்கும் வாய் பேசாமல் தலையை ஆட்டும் நபரை, குறிப்பாக, எதற்கும் சிந்திக்காமல் சரி என்று தலையாட்டுபவர்கள், ஆமாம் சாமி போடுபவர்களை 'பூம் பூம் மாடு' என்று கிண்டலாக அழைக்கும் வழக்கம் இருக்கிறது.
பூம் பூம் மாடுகளை வளர்த்து, இத்தொழிலைச் செய்து கொண்டிருக்கும் பூம் பூம் மாட்டுக்காரர்கள், ஆந்திரப் பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள். தமிழ்நாடு மற்றும் கேரளத்தின் சில பகுதிகளிலும் பழங்குடியினர்களாக வாழும் இவர்கள், தெலுங்கு மற்றும் தமிழ் கலந்த மொழியினைப் பேசுகின்றனர். இவர்களை ஆதியன் சாதி மக்கள் என்றும் சொல்கின்றனர்.
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், சக்கி மங்கலம் என்னும் கிராமத்தில் சுமார் 150 குடும்பத்தினர் பூம் பூம் மாடுகளைக் கொண்டு குறி சொல்லுவதைக் குலத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இந்த ஊரைத் தவிர்த்து, கிருஷ்ணகிரி, காவிரிப்பூம்பட்டினம், கோயம்புத்தூர், சங்கரன் கோவில், திருச்செந்தூர், இராமேஸ்வரம், ராமநாதபுரம், திருவாரூர், செஞ்சி, வேதாரண்யம், வேலூர், தஞ்சாவூர், பூண்டி, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பூதலூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர், மேட்டூர், வாணியம்பாடி, சிவகாசி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், வாலாஜா, திருவள்ளூர், தர்மபுரி, ஓசூர் என்று தமிழ்நாட்டிலுள்ள பல இடங்களில் ஒரு குழுவாகச் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 4 லட்சம் பேர் வரை வாழ்கின்றனர்.
நவீனக் கணினி மற்றும் இணையத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இக்காலத்தில், பூம் பூம் மாடுகளின் வழியாகப் பூம் பூம் மாட்டுக்காரர்கள் சொல்லும் குறிகளைக் கேட்கும் ஆர்வம் பெருமளவில் குறைந்து போய்விட்டது. பொதுவாக, பூம்பூம் மாட்டுக்காரர்களின் வாழ்வாதாரம் பின்னடைவை நோக்கிச் சென்றுவிட்டது என்றேச் சொல்லலாம்.
இச்சமூகத்தினர்களில் சிலர் தெருக்களில் கிடைக்கும் பழைய இரும்புச் சாமான்கள் மற்றும் இதர உதிரிப் பொருட்களைத் தெருத்தெருவாகச் சென்று எடுத்து எடைக்குப் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். சிலர் அன்றாடக் கூலித் தொழிலுக்குச் சென்று வருகின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளில் பூம் பூம் மாடுகளை வளர்ப்பதும், அதனைக் கொண்டு குறி பார்த்துச் சொல்வதும் குறைந்து கொண்டே போய்விடும். இனி, பூம் பூம் மாடுகளைப் பார்ப்பது அரிதாகிவிடும் என்பது மட்டும் உண்மை.