சோம்நாத் கோயிலை சூறையாடிய கஜினி முகமது தப்பி ஓடியது ஏன்? மிரள வைக்கும் வரலாறு!

Mahmud of Ghazni attack India
Mahmud of Ghazni attack IndiaAI image
Published on

இந்திய வரலாற்றுப் பக்கங்களில் 'கஜினி முகமது' (Mahmud of Ghazni) என்ற பெயர் மறக்க முடியாத ஒன்று. கி.பி. 1000 முதல் கி.பி. 1027 வரையிலான காலகட்டத்தில், அவர் 17 முறை இந்தியாவின் மீது படையெடுத்தார். அவரை வெற்றி பெற விடாமல் தடுத்த மற்றும் அவருக்குப் பெரும் சவாலாக விளங்கிய இந்திய மாவீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

ஆப்கானிஸ்தானின் கஜினி பகுதியை ஆண்ட சுல்தான் முகமது, இந்தியாவின் அபரிமிதமான செல்வத்தைச் சூறையாடவும், தனது பேரரசை விரிவுபடுத்தவும் இந்தியா மீது குறிவைத்தார். அவரது முதல் படையெடுப்பு கி.பி. 1000-ல் தொடங்கியது. அவரது 16-வது படையெடுப்பான சோம்நாத் கோயில் தாக்குதல் மிகவும் புகழ்பெற்றது.

கஜினி முகமது இந்தியா மீது படையெடுத்ததற்கான காரணங்கள்

அபரிமிதமான செல்வம்: அக்காலத்தில் இந்தியக் கோவில்கள் மற்றும் அரசுகள் தங்கம், வைரம் மற்றும் நவரத்தினங்களின் களஞ்சியமாக இருந்தன. தனது கஜினி பேரரசை வலுப்படுத்தவும், மத்திய ஆசியாவில் பெரும் படையை உருவாக்கவும் அவருக்குப் பெருமளவு நிதி தேவைப்பட்டது.

மத்திய ஆசிய அரசியல்: கஜினியின் முதன்மை இலக்கு மத்திய ஆசியாவில் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதே. அதற்கான போர்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டும் ஒரு "ஏடிஎம்" மையமாகவே அவர் இந்தியாவைப் பார்த்தார்.

யானைப் படை: இந்திய மன்னர்களிடம் இருந்த வலிமையான யானைப் படைகள் மீது கஜினிக்கு மிகுந்த ஈர்ப்பு இருந்தது.

மதப் பரப்புரை: தனது வெற்றிகளின் மூலம் இஸ்லாமிய உலகில் ஒரு சிறந்த வெற்றியாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் விரும்பினார்.

கஜினிக்குச் சவாலாக விளங்கிய இந்திய மன்னர்கள்

1.வித்யாதர சந்தேலர்:

இவர் கஜினி முகமதுவை பணிய வைத்த மாவீரன். அவரின் இந்தியப் படையெடுப்பு வரலாற்றில், அவரைத் திணறடித்து, போர்க்களத்திலேயே சமாதானம் பேச வைத்த ஒரே இந்திய மன்னர் வித்யாதர சந்தேலர் ஆவார். இவர் மத்திய இந்தியாவின் புகழ்பெற்ற சந்தேல வம்சத்தைச் சேர்ந்தவர்.

கஜினி முகமது 1018-ல் கன்னோசியைத் தாக்கியபோது, அங்கிருந்த கூர்ஜர-பிரதிகார மன்னர் ராஜ்யபாலன் போரிடாமல் சரணடைந்தார். இதை பெரும் அவமானமாகக் கருதிய வித்யாதரர், பிற இந்திய மன்னர்களுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, சரணடைந்த ராஜ்யபாலனைத் தோற்கடித்துக் கொன்றார். இது கஜினிக்கு வித்யாதரர் விடுத்த நேரடி எச்சரிக்கையாக அமைந்தது.

கஜினி முகமது, வித்யாதரரை ஒடுக்கப் பெரும் படையுடன் வந்தார். வித்யாதரரிடம் 36,000 குதிரைப்படையும், 45,000 காலாட்படையும், 640 போர் யானைகளும் இருந்ததைக் கண்டு மிரண்ட கஜினி முகமது தந்திரமாக இரவோடு இரவாகத் தனது முகாமை விட்டுப் பின்வாங்கினார்.

கஜினி மீண்டும் வந்து வித்யாதரரின் புகழ்பெற்ற கலிஞ்சர் கோட்டையை நீண்ட நாட்கள் முற்றுகையிட்டும் கோட்டையை ஊடுருவ முடியவில்லை. இறுதியில், கஜினி வித்யாதரரின் வீரத்தைப் பாராட்டி கவிதைகள் எழுதியதாகவும், வித்யாதரர் அவருக்கு 300 யானைகளைப் பரிசாக அளித்து திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, வித்யாதரரை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த கஜினி முகமது, மீண்டும் ஒருபோதும் சந்தேல நாட்டின் மீது படையெடுக்கவில்லை.

இதையும் படியுங்கள்:
கண்ணுக்கு கண்... பல்லுக்கு பல்... பாபிலோனியா சட்டத்தின் பகீர் பக்கங்கள்!
Mahmud of Ghazni attack India

2. ராஜா போஜர்:

மால்வா நாட்டின் புகழ்பெற்ற மன்னரான போஜர், கஜினி முகமதுவுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கினார். கி.பி. 1025-ல் சோம்நாத் கோயிலைத் தகர்த்துவிட்டுத் திரும்பிய கஜினி முகமது, ராஜா போஜரின் பெரும் படை தன்னை வழிமறிக்கக் காத்திருப்பதை அறிந்தார். நேருக்கு நேர் மோதினால் தோல்வி உறுதி என உணர்ந்த கஜினி, தனது படையுடன் சிந்து பாலைவனத்தின் கடினமான பாதையில் தப்பி ஓடினார். அந்தப் பயணத்தில் தாகத்தாலும் வெப்பத்தாலும் அவரது படையில் பெரும் பகுதி அழிந்தது.

இந்து ஷாஹி மன்னர்கள்: பஞ்சாப் பகுதியில் ஜெயபாலன் மற்றும் ஆனந்தபாலன் கஜினியைத் தொடக்கத்திலேயே கடுமையாக எதிர்த்தனர். ஆனந்தபாலன் பல இந்திய சிற்றரசர்களைத் திரட்டி ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கிப் போரிட்டது இந்திய ஒற்றுமையின் அடையாளமாகும்.

இதையும் படியுங்கள்:
இந்த நாட்டின் மறுபெயர் 'கவிஞர்களின் பூமி'! அந்த நாடு எந்த நாடு?
Mahmud of Ghazni attack India

கஜினி முகமதுவின் 17 படையெடுப்புகள் இந்திய வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கமாக இருந்தாலும், வித்யாதரர் மற்றும் ராஜா போஜர் போன்ற மன்னர்கள் அவருக்குக் கொடுத்த பதிலடி இந்தியர்களின் போர்த்திறனுக்குச் சான்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com