
காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் அனைவரின் மனதில் எழும் ஒரு பொதுவான விஷயம் ‘இன்றைய நாள் நமக்கு இனிய நாளாக இருக்குமா? இல்லை இருக்காதா?’ என்ற எண்ணமே. அது முழுக்க முழுக்க நம் செயலில் இருந்தாலும், அந்தச் செயலைச் செய்வதற்கான உந்துச் சக்தி நம் எண்ணங்களில்தான் உள்ளது… அது என்ன?
என்ன செய்ய வேண்டும்? படுக்கைக்குச் செல்வதற்கு முன் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய பழக்கம் ‘நாளை என்ன செய்ய வேண்டும்’ என்பதை திட்டமிடுவதாகும். அடுத்த நாளுக்கான முன்னுரிமைகளை முன்கூட்டியே நினைவில் வைத்துக்கொள்வது ஒருவரின் காலை மன அழுத்தத்தையும், அதன் தொடர்புடைய சோர்வையும் குறைக்கும். இது உங்கள் மூளைக்கு தூங்கும்போது சற்று ஓய்வையும் தருகிறது; எழுந்தவுடன் உங்களை நேர்மறையான கட்டுப்பாட்டில் உணரவும் வைக்கிறது.
மற்றொரு நடைமுறை டிஜிட்டல் டீடாக்ஸ்(digital detox). தூங்குவதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்பே திரைகளைத் தவிர்க்க வேண்டும்.
இது நல்ல தூக்கத்திற்கு தேவையான மெலடோனின்(melatonin) அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது; காலையில் உங்களின் முழு உடல் சோர்வையும் நீக்கி கூர்மையான மனதுடன் செயல்பட வைக்கிறது.
மூலிகை தேநீர் அருந்துவது அல்லது அமைதியான இசையைக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது உங்கள் உடலுக்கு ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது என்பதை இரவு நேரங்களில் உணரவைக்கும். இந்த எளிய செயல் உங்கள் மூளைக்குத் தேவையான ஓய்வைக் கொடுத்துவிடும். இதன் தொடர்ச்சி அடுத்த நாளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய எல்லா விஷயத்திற்கும் ஒரு நேர்மறையான உணர்வை வரவழைத்து விடும்.
காலை எழுந்ததும் சில உடல் அசைவுகளை(Stretching) செய்யுங்கள் அல்லது ஒரு குறுகிய நடைப்பயணத்துடன் உங்கள் நாளை தொடங்குங்கள். இதோடு ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டு உங்கள் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்துங்கள்(Align your thoughts); இதனால் உங்களுக்கு உண்டாகும் தேவையற்ற பதற்றம் குறைக்கூடும். முக்கியமாக எழுந்தவுடன் உங்கள் தொலைபேசியை தேவை இல்லாத பட்சத்தில் எடுக்காதீர்கள். அதற்குப் பதிலாக ‘முதலில் நமக்குத் தேவை அமைதி, அதை அனுபவிப்போம்’. இந்த நோக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்; இதற்காக காலை சிறிது நேரம் கூட ஒதுக்கலாம்.
உங்கள் இரவை இனிமையாகவும், அதன் தொடர்ச்சியான உங்கள் காலையை மனநிறைவுடனும் தொடங்குவதன் மூலம்; நீங்கள் உங்களுக்குத் தேவையான சுய-கட்டுப்பாட்டு(Self control) வளையத்தை முதலில் உருவாக்குகிறீர்கள்.
ஒரு நேர்மறையான நாளின் (Positive day) ரகசியம் நீங்கள் எப்படி எழுந்திருக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல; நீங்கள் எப்படி எழுந்திருக்க தயாராகிறீர்கள் என்பதிலும் இருக்கிறது.