

உலகின் ஆயிரமாயிரம் மொழிகளுள் மிகவும் கடினமான எட்டு மொழிகளைத் (Toughest language) தெரிந்துகொள்வோமா? தொடர்ந்து வாசியுங்கள்.
1. மேண்டரின் சைனீஸ்
சீனத்தின் இம்மொழியானது கற்றுக்கொள்ளக் கடினமான மொழிகளின் பட்டியலில் எட்டாமிடம் பெறுகிறது. ஏனென்றால் இம்மொழி சுமார் 50 ஆயிரம் குறியீடுகளையும், நான்கு தொணிகளையும் கொண்டது. தொணியை மாற்றினால் அச்சொல்லின் அர்த்தமும் மாறிவிடும். இம்மொழியைக் கற்க பல்லாண்டுகள் தேவைப்படும். இருந்தாலும் இம்மொழிதான் வருங்காலத்தில் டெக்னாலஜி உலகில் ஆங்கிலத்தின் இடத்தினைப் பிடித்துக்கொள்ளும் என்கிறார்கள்.
2. அரேபியம்
வலமிருந்து இடமாகப் பயன்படுத்தப்படும் மொழி என்பதாலும், இருக்கும் இடத்தைப் பொருத்து எழுத்துக்கள் உருமாறும் என்பதாலும் அரேபிய மொழி புதிதாகக் கற்க விரும்புவோரைக் கஷ்டப்படுத்தும் மொழியாகிறது. இதிலுள்ள சில ஓசைகள் ஆங்கிலத்தில் கிடையவே கிடையாது. துல்லியமாக உச்சரிக்கக் கற்றுக்கொள்ள ஆண்டுகள் பிடிக்கும்.
3. ஜப்பானிய மொழி
காஞ்சி, ஹிரிகானா, காட்டகானா ஆகிய மூன்று விதமான எழுதும் முறைகளைப் பயன்பாட்டில் வைத்திருக்கிறது ஜப்பானிய மொழி. ஒவ்வொன்றிலும் 1000 எழுத்துகளும் குறியீடுகளும் உள்ளன. அதோடு ஓர் அர்த்தத்துக்கான சொல்லை ஜப்பானியர்கள் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த மாற்றங்களையெல்லாம் பின்தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டியதும் கூட இம்மொழியினைக் கற்றுக்கொள்ள கடினமான மொழியாக்குகிறது.
4. ஹங்கேரியன்
18 இலக்கண வழக்குகளைக் கொண்ட மொழி இது. (ஆங்கிலத்தில் மூன்று தான்) மேலும் இம்மொழியில் கணக்கில்லாமல் வார்த்தைகளைக் கோர்த்து புதிய கூட்டுச் சொற்களை உருவாக்கிக் கொண்டே போகலாம். இவற்றை உச்சரிப்பது மிகவும் கடினம்.
5. ஃபின்னிஷ்
ஃபின்லாந்து நாட்டின் மொழியிலும் 15 இலக்கண வழக்குகள் புழக்கத்தில் உள்ளன. சிக்கலான நீளமான கூட்டுச் சொற்களும் அதிகம் உள்ளன. புதிதாக இம்மொழியினைக் கற்க விரும்புவர்களுக்கு இதில் உள்ள உச்சரிப்பு விதிகளைக் கற்றுக் கொள்ள மட்டுமே பல்லாண்டுகள் ஆகுமாம்.
6. கொரிய மொழி
தனித்துவமான எழுத்துக்களை கொண்டது கொரிய மொழி. அதோடு, எதிராளியின் வயது, சமூக அந்தஸ்து ஆகியவற்றைப் பொருத்து முறையான மற்றும் முறையற்ற பேச்சு வழக்குகளை கொண்டுள்ளது இம்மொழி. யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதைக் கற்கவே பல ஆண்டுகள் தேவைப்படும்.
7. பாஸ்க்
எந்த மொழியோடும், மொழி குடும்பத்தோடும் தொடர்பில்லாத ஒரே மொழி உலகத்திலேயே இந்த பாஸ்க் மொழிதான் என்று கூறப்படுகிறது. தனித்துவமான இலக்கணமும், சொற்களஞ்சியமும் கொண்ட இம்மொழியினைப் புதிதாக ஒருவர் வந்து கற்றுக் கொள்வது இயலாத காரியம் என்றே சொல்லப்படுகிறது.
8. நாவஹோ
இரண்டாம் உலகப்போரின் போது ரகசிய மொழியாக பயன்பட்டது தான் இந்த நாவஹோ மொழி. அத்தகைய சிக்கலான மொழி இது. இந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களே கூட இதனைப் பயன்படுத்த சிறப்பு பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். எனில் புதிதாகக் கற்க விரும்பும் ஒருவருக்கு இம்மொழி எத்தனை கடினமானதாக இருக்கும் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள். அதனால்தான் கற்றுக் கொள்ள கடினமான மொழிகளின் பட்டியலில் இது முதலிடம் பெறுகிறது.
கற்றுக்கொள்ள கடினமான மொழிகளின் பட்டியலில் எங்கே தமிழை காணும் என்று தேடாதீர்கள். தமிழைக் கற்றுக் கொள்ளும் பெரும்பான்மையான வேற்று மொழிக்காரர்களின் கருத்து யாதெனில்,
தமிழ் கற்றுக் கொள்வது ஒன்றும் அத்தனை கடினமல்ல என்பதே ஆகும். காரணம் தமிழ் திண்மையான ஒலி அமைப்பு கொண்ட மொழி. அதாவது ஓர் எழுத்துக்கு ஒரு ஒலி தான். அதோடு தமிழ் சுலபமான இயங்கு-இலக்கணத்தைக் கொண்ட மொழியாகும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நமக்கு இணையாகத் தமிழ் பேசும் தெலுங்கர்களையும், வடநாட்டவர்களையும் நம் அன்றாட வாழ்வில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். இதுவே, நம் மொழி கற்றுக்கொள்ள சுலபமான மொழி என்பதற்குச் சான்றல்லவா?