
ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூருக்கு இரண்டு விதமான புனைப்பெயர்கள் உள்ளன. இந்தியாவின் பாரிஸ் என்றும் இளம் சிவப்பு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூர் நகரம் சுற்றுலாப் பயணிகள், கலாச்சார ஆர்வலர்கள், இலக்கியக் கலைஞர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், கட்டடக்கலை ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்கள் என அனைவரின் மனதைக் கவரும் ஒரு அழகிய பிரதேசமாகும். இங்குள்ள கட்டடங்கள் தனித்துவமான இளஞ்சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கின்றன. ஜெய்ப்பூரின் வண்ணமயமான கட்டடங்களுக்கும், 'இளம் சிவப்பு நகரம்' என்கிற புனைப்பெயருக்கும் என்ன காரணங்கள் என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இங்கிலாந்து இளவரசரின் இந்திய வருகை:
1876-ம் ஆண்டில் இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் இந்தியாவிற்கு ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு ஏராளமான இந்திய ஆட்சியாளர்கள் விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினர். அப்போதைய ஜெய்ப்பூரின் ஆட்சியாளராக இருந்த மகாராஜா இரண்டாம் சவாய்ராம் சிங் இளவரசரை வரவேற்று கௌரவிக்க நினைத்தார். ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள பல அற்புதமான கட்டடங்கள் சிவப்பு மணல்கற்களால் கட்டப்பட்டிருந்தன.
இளவரசரின் வருகையின்போது நகரத்தை இளம் சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்க வேண்டும் என்று மகாராஜா நினைத்தார். அந்த நிறம் பார்வைக்கு அழகான மற்றும் சீரான தோற்றத்தை தரும் என்று நம்பினார். ஜெய்ப்பூர் நகர் முழுவதும் இளம் சிவப்பு டெரகோட்டா நிறத்தால் வண்ணம் தீட்ட கட்டளைகள் பிறப்பித்தார்.
இளவரசரின் பாராட்டு:
ஜெய்ப்பூருக்கு வந்த இளவரசர் ஆல்பர்ட், நகரம் முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் இருந்ததைப் பார்த்து அதிசயித்துப் போனார். ”ஆஹா, எத்தனை அழகான இளம் சிவப்பு நகரம்” என்று மனம் திறந்து பாராட்டினார். எனவே ஜெய்ப்பூருக்கு பிங்க் சிட்டி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
மகாராஜா ஒரு ஆடம்பரமான கச்சேரி அரங்கத்தையும் கட்டி பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் நினைவாக ஆல்பர்ட் ஹால் என்று அதற்கு பெயரிட்டார். இது லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தின் மாதிரியாக கட்டப்பட்டுள்ளது. 1877ல் ஜெய்ப்பூரில் உள்ள அனைத்து கட்டடங்களும் இளம் சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருக்க வேண்டும் என்ற சட்டத்தை மகாராஜா இயற்றினார். இந்த சட்டம் நகரத்தின் பல பகுதிகளில் இன்னும் நடைமுறையில் உள்ளது. நகரின் பல்கலைக்கழகங்கள், பழமையான கட்டடங்கள், பள்ளிகள் போன்றவை இன்றும் இளம் சிவப்பு நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.
இளம் சிவப்பு நிறத்தின் சிறப்பியல்புகள்:
அரச விருந்தினர்களுக்கு அரவணைப்பு, பாசம், மரியாதை மற்றும் போற்றுதலை வெளிப்படுத்தவும் நகரத்தின் கலாச்சார செழுமையை வெளிப்படுத்தவும் உகந்த நிறமாக இளஞ்சிவப்பு கருதப்பட்டது. எனவே அந்த வண்ணம் ஜெய்பூர் நகர கட்டடங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதப்பட்டது.
கலாச்சார அடையாளம்:
ராஜபுத்திர கலாச்சாரத்தில் இளம் சிவப்பு நிறம் ரஜஸ் எனப்படும் மென்மையான அம்சத்தைக் குறிக்கிறது. இது ஆர்வம், மகிழ்ச்சி, செழிப்பு, ஆற்றல், நெருப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த நிறம் அன்பு, இரக்கம், காதல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு அமைதியான மற்றும் இனிமையான நிறமாக கருதப்படுகிறது. மேலும் இது பெண்மை மற்றும் அழகுடன் தொடர்புடையது. இந்திய கலாச்சாரத்தில் மூன்று குணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமஸ் (இருள்), ரஜஸ் (ஆர்வம்) மற்றும் சத்துவா (சாரம்).
ஜெய்ப்பூரில் உள்ள காற்றின் அரண்மனை என்று அழைக்கப்படும் ஹவா மஹால் என்கிற ஐந்து மாடி கட்டடம் இளஞ்சிவப்பு மணற்கற்களால் ஆனது. சிட்டி பேலஸ் என்று அழைக்கப்படும் நகர அரண்மனை வெள்ளை நிற அலங்காரங்களுடன் கூடிய டெரகோட்டா இளஞ்சிவப்பு சுவர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.