ரயில் நிலையதுக்குள்ளே 4,000 சதுர மீட்டர் பசுமையான தோட்டம்... போய் வருவோமா?

Atocho Train Station
Atocho Train Station
Published on

உலகின் மிகப் பழமையான ரயில் நிலையங்களில் ஸ்பெய்ன் நாட்டில் உள்ள அடோச்சோ இரயில் நிலையமும் ஒன்று. இது உலகின் மிகவும் பசுமையான ரயில் நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது.1851 ஆம் ஆண்டில் ஸ்பெயின் தலைநகரில் கட்டப்பட்ட முதல் ரயில் நிலையம் இதுவாகும். 1851 ஆம் ஆண்டு பிப்.9 ஆம் தேதி ஸ்பெயின் ராணி இரண்டாம் இசபெல்லா அடோச்சா ரயில் நிலையத்திலிருந்து அந்நாட்டின் முதல் ரயில் பயணத்தை துவங்கினார். அப்போதைய காலத்தில் முழுவதும் இரும்பினால் கட்டப்பட்டு கண்ணாடிகளால் வேயப்பட்டிருந்த இந்த ஆடம்பரமான ரயில்வே நிலையம் அரச குடும்பம் மட்டுமே பயன்படுத்தக் கூடிய தனியார் கட்டிடமாக இருந்தது.

இதையும் படியுங்கள்:
முன்பதிவு இல்லாமல் ரயில் பயணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையை பெறுவது எப்படி?
Atocho Train Station

புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஆல்பர்டோ பலாசியோ எலிசாக் பழமை மற்றும் புதுமையான நவீன பாணிகளைக் கொண்டு அடோச்சா ரயில் நிலையத்தை உருவாக்கியுள்ளார். 1892 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் ரயில் நிலையம் பெரிய அளவில் சேதமடைந்தது. பின்னர் அடோச்சாவின் எஞ்சியுள்ள பகுதிகளுடன் புதிய பகுதிகளை இணைத்து புதுப்பொலிவுடன் மீண்டும் கட்டப்பட்டது. ஒளி ஊடுருவும் வகையில் பெரிய கண்ணாடிகள் கொண்டு உருவாக்கப்பட்ட கண்ணாடி மாளிகை போன்ற தோற்றமளிக்கும் உலகின் மிக அழகான ரயில் நிலையம் இதுவாகும்.

ஸ்பெயின் நாட்டில் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் அடோச்சா ரயில் நிலையத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டன.174 ஆண்டுகள் பழமையான இந்த ரயில் நிலையத்திற்கு ஆண்டு தோறும் 10 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். 2004 ஆம் ஆண்டில் மாட்ரிட் ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்பில் 193 பேர் பலியாகி அந்த நாட்டை சோகத்தில் ஆழ்த்தினர். இவர்களை நினைவு கூறும் வகையில் அடோச்சா ரயில் நிலையத்தின் முன் நினைவு சின்னமாக 11 மீட்டர் உயரமும் 9.5 மீட்டர் விட்டமும் கொண்ட ஒரு பெரிய கண்ணாடி குடுவை வைக்கப் பட்டுள்ளது. அதன் உட்புறத்தில் நூற்றுக்கணக்கான இரங்கல் செய்திகள், பலியானவர்களின் நினைவாக எழுதப்பட்டுள்ளன. இந்த நினைவுச் சின்னத்தை 2007 ஆம் ஆண்டு ஸ்பெயின் மன்னர் மற்றும் ராணி திறந்து வைத்தனர்.

இதையும் படியுங்கள்:
ஒரு விமான நிலையம் உருவாகும் முன்..?
Atocho Train Station

அடோச்சா நிலையம் உலகின் பசுமையான ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், இரயில் நிலையத்தின் உள்ளே பழைய ரயில்பாதைகள் மற்றும் தளத்தில் 4,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் ஒரு பெரிய பசுமையான தோட்டம் உள்ளது. இதில் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 260 இனங்களைச் சேர்ந்த 7,200 க்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன. தென்னை , பனை, வாழை, பைன் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இவை ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடிகளின் வழியாக சூரிய ஒளியை பெற்று வளர்கின்றன. ஒரு ரயில் நிலையத்திற்குள் சோலைவனத்தை பார்ப்பது போன்ற உணர்வு இங்கு ஏற்படும். மிகவும் பரபரப்பான ஒரு ரயில் நிலையத்தில் மனதிற்கு இதமளிக்கும் ஒரு வனம் இருப்பது ஆச்சரியமாக இருக்கும்.

அழகிய பூஞ்சோலைகள் பல சிறு உயிர்களுக்கு இடம் அளிப்பதோடு காண்பவரின் மனதிற்கும் இதம் அளிக்கிறது. இந்த ரம்மியான சுற்றுச்சுழல் பயணிகளுக்கு அமைதியான மற்றும் ஓய்வெடுக்க நிம்மதியான இடமாக உள்ளது. இதன் பிரம்மாண்டமான பசுமை தோட்டம் காண்பவரின் கண்களை கவர்கிறது. வருடம் முழுக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்த ரயில் நிலையத்தில் கதை பேசிக் கொண்டே காபி மற்றும் பானங்களை பருக நிறைய கஃபேக்கள், உணவகங்கள் உள்ளன. ஸ்பெயின் நாட்டு கலாச்சாரத்தை அறிய மற்றும் கலைப் பொருட்களை வாங்க சில அருங்காட்சியகங்களும் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com